மற்றவர்முன் சிறப்படைய வேண்டுமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 34 ஆம் திங்கள் (27.11.2023)*
I: தானி: 1: 1-6, 8-20
II: தானி(இ) 1: 29. 30-31. 32-33
III: லூக்: 21: 1-4
மற்றவர்முன் சிறப்படைய வேண்டுமா?
ஒரு தந்தையானவர் தன் மகளைப் பார்த்து அடிக்கடி " உன் பள்ளியிலேயே நீ தான் முதன்மை மாணவியாய்த் திகழ வேண்டும் " என்று கூறிக்கொண்டே இருப்பார். தொடக்கத்தில் இவ்வார்த்தைகள் அவளுக்கு உற்சாகமூட்டினாலும் நாளடைவில் அவளுடைய மனதில் ஒருவித பயம் தோன்றியது. ஒருவேளை அப்பாவின் ஆசையைத் தான் நிறைவேற்றாவிடில் தன்னை அப்பா வெறுத்து விடுவாரோ என்ற கவலை உள்ளே எழுந்தது. இறுதிப் பொதுத்தேர்வுக்காகத் தன்னையே அவள் தயாரித்துக்கொண்டிருந்தாள். எவ்வளவுதான் நன்றாகத் தயாரித்தாலும் மனதில் ஒரு பயம். எனவே அவள் பார்த்து எழுதுவதற்காக துண்டுச்சீட்டு தயாரிக்கத் தொடங்கினாள். அதைப் பார்த்த அப்பா அதைப்பற்றி விசாரிக்கும் போது எழுதிப் படிப்பதாகச் சொல்லி மழுப்பினாள். ஆயினும் அப்பாவிற்கு சந்தேகம் இருந்தது. தேர்வு அன்று காலை பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் மகள். சாமி படத்திற்கு முன்பு பிராத்தனை செய்துகொண்டிருக்கும் போது அவள் மனதில் ஏதோ ஒரு நெருடல். வேகமாக தன் அறைக்குச் சென்று தன்னிடமிருந்த எல்லா துண்டு சீட்டுகளையும் கிழித்து எறிந்தாள். பின் தேர்வு எழுதினாள். நல்ல மதிப்பெண் பெற்றாள். ஆனால் முதன் மாணவியாக வரவில்லை. பயந்து கொண்டே தன் தந்தையிடம் சென்ற போது, தந்தை அம்மகளை அணைத்துக் கொண்டு படிப்பில் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் நேர்மையிலும் நீ சிறந்தவள் எனக் கூறி பாராட்டினார். அப்போது தான் துண்டு சீட்டு எழுதிய நிகழ்வு அப்பாவிற்கு தெரிந்திருந்ததை அவள் உணர்ந்தாள். சோதனையை வென்றுவிட்டேன் என எண்ணி மகிழ்ந்தாள்.
நாம் அனைவருமே மற்றவர் முன் சிறந்து விளங்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். பிறருடைய பாராட்டுகளையும் நல்ல விமர்சனங்களையும் தேடுகிறோம். அவ்வாறு சிறந்து விளங்க நாம் செய்யவேண்டியது என்ன? நேர்மையானவர்களும் உண்மையானவர்களாகவும் இருப்பதே. அதிலும் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றும் நாம் நமது வாழ்க்கை நெறியை கடவுளுக்கு உகந்ததாக அமைத்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம். இன்றைய வாசகங்கள் இக்கருத்தை நமக்கு எடுத்துக்காட்டுவதாய் அமைகின்றன.
இன்றைய முதல் வாசத்தில் நாம் காணும் தானியேல்,அனனியா, மிசாவேல், அசரியா ஆகிய நான்கு யூத இளைஞர்கள் தங்கள் கடவுளின் கட்டளைப் படி தங்களுடைய வாழ்வை நேர்மையாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள விரும்பினர். அரச கட்டளையையும் மீறி அரச உணவால் தங்களைத் தீட்டுப் படுத்தாமல் கடவுள் அருளிய திருச்சட்டத்தை மதித்து காய்கறிகளையும் தண்ணீரையும் மட்டுமே உண்டனர். ஆயினும் மற்ற எல்லா இளைஞர்களையும் விட இவர்களே ஞானத்திலும் உடற்கட்டிலும் மொழியிலும் தேர்ந்தவர்களாய் இருந்தனர் என முதல் வாசகம் கூறுகிறது. கடவுன் முன் நேர்மையாளராய் உண்மையுடையவர்களாய் அவருடைய கட்டளைகளை கடைபிடிப்பவராய் வாழ்ந்ததால் பிறர்முன் கடவுள் அவர்களைப் பெருமைப்படுத்தினார்.
அதேபோல தன் வறுமையைப் பொருட்படுத்தாமல் திருச்சட்டத்தை மதித்து தனக்கிருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக்கிய ஏழைக்கைம்பெண் அதிகமாகக் காணிக்கை செலுத்திய அனைவரையும் விட சிறந்தவராய் இயேசுவால் பாராட்டப்பட்டார்.
ஆம். அன்புக்குரியவர்களே நாமும் நம் அன்றாட வாழ்வில் கடவுளின் வார்த்தைகளைக் கடைபிடித்து நேர்மையோடும் உண்மையோடும் உலக மாயைகளால் நம்மைத் தீட்டுப்படுத்தாமலும் வாழ்ந்தால் மற்றவர்முன் கடவுள் நம்மை சிறந்தவர்களாக உயர்த்துவார். எனவே அவர் வகுத்த வழியில் வாழ்ந்து சிறந்து விளங்கக் கற்றுக்கொள்வோம்.
இறைவேண்டல்
அனைத்திலும் உயர்ந்தவரே இறைவா! உமது முன்னிலையில் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் வாழ்ந்து மற்றவர் முன் சிறந்து விளங்க உம் ஆசிர் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்