சோம்பலை அகற்றி வாழ்வில் உயர்வோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம்,33 வாரம் புதன்  
I: 2 மக் :7: 1, 20-31
II:  திபா 17: 1. 5-6. 8,15
III: லூக்:  19: 11-28

வாழ்வில் வெற்றி அடையத் தடையாக இருப்பது நம்முடைய  சோம்பேறித்தனம். கடவுள் ஒவ்வொருவருக்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறார். நாம் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் பொழுது வாழ்வில் சாதனைகள் பல புரிய முடியும். கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்தாமல் சோம்பேறியாகத் திரிந்தால் வாழ்வில் சாதனைகளை செய்ய முடியாது.  கல்வி நிலையங்களில் தேர்வுகள் நடத்துவது மாணவனை பயமுறுத்துவதற்காக அல்ல ; மாறாக அவருடைய திறமையை ஆய்வு செய்வதற்காகவே ஆகும். தான் பெற்றுக் கொண்ட அறிவை பயன்படுத்தாவிடில் அந்த அறிவு மழுங்கிப் போய்விடும். எனவேதான் நாம் நாம் பெற்றுக்கொண்ட அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைகளைத் தேடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் திறமைகளைப் பயன்படுத்துபவர் பாராட்டப் படுவதையும்   திறமைகளை பயன்படுத்தாதவர் தண்டிக்கப்படுவதையும் நாம் வாசிக்கிறோம்.
இந்த உலக வாழ்வு சாதாரணமானதல்ல. இந்த உலகம் போர்க்கள வாழ்வுக்கு சமமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு சோதனை காலமாகத்தான் இந்த உலகப் பயணம் இருக்கின்றது. இப்படிப்பட்ட சோதனைகளை வென்றெடுத்து வாழ்வில் வெற்றிக்கனியை சுவைக்க நம்மிடமுள்ள சோம்பேறித்தனத்தை முழுமையாக அகற்ற வேண்டும்.

திருவிவிலியத்தில் சோதனைகளை வெல்லாதவர்கள்  கடவுளின் அருளை இழந்தனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நம்முடைய ஆதி பெற்றோர்.  ஆண்டவர் இயேசு மனிதனாக இந்த உலகத்தில்  பிறந்ததால் பல்வேறு சோதனைகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அனைத்தையும் விடாமுயற்சியோடு வென்றெடுத்தார். 

இன்றைய நற்செய்தியில்  ஆண்டவர் இயேசு  மினா உவமையை கூறியதற்கு காரணம் சோம்பேறிகளாக இல்லாமல் திறமைகளை சிறப்பாகப் பயன்படுத்தி வாழ்வில் பலன் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. மெசியா விரைவில் வருவார், நமக்கு எல்லாம் தருவார் என்று சொல்லி உழைக்காமல் சோம்பேறிகளாகத் திரிந்த சோம்பேறிகளுக்கு இந்த உவமை ஒரு சாட்டையடியாக இருக்கின்றது. கடவுள் அன்புள்ளவர் இரக்கம் உள்ளவர் மன்னிக்க கூடியவர். ஆனால் கணக்கு கேட்கக் கூடியவர். நமக்குக் கொடுத்த ஆற்றலையும் அருளையும் நாம் எந்தளவுக்கு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை  சற்று ஆய்வு செய்ய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியாகக் கூறி ஆண்டவர் இயேசு அழைப்பு விடுகிறார்.

5 மினாவை பெற்ற 2 பணியாளர்கள் இரண்டு மடங்காகப் பெருக்கினர். இது அவர்களின் கடின உழைப்பையும் ஈடுபாட்டையும் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு மினாவைப் பெற்ற  நபர் சோம்பேறித்தனத்தோடு உழைக்காமல் அதை அப்படியே வைத்து இருந்தார். இரண்டு மடங்காக இலாபம் கொடுத்த இரண்டு நபர்கள் பாராட்டப்படுகின்றனர். ஆனால் வாய்ப்பினைப் பயன்படுத்தாத அந்த ஒரு நபர்தண்டிக்கப்படுகிறார். 

ஆம் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!  நாம் சோம்பேறிகளாக இல்லாமல் திறமைகளைப் பயன்படுத்தும் உழைப்பாளர்களாக மாற வேண்டும். எல்லாருமே பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகிறோம்.சோம்பேறிகள் அதை வென்றெடுக்க முயலாமல் தங்கள் சோம்பலிலே மூழ்கிக்கிடக்கின்றனர். சாதனையாளர்கள் அதைப் பயன்படுத்தி வாழ்வில் பல சாதனைகள் புரிகின்றனர். கடவுள் நமக்கு, சோதனைகளை வென்று சாதனைகள் புரிய அழைப்பு விடுக்கிறார். எனவே சாதனைகள் புரிய தடையாய் உள்ள நம் சோம்பேறித்தனத்தை முற்றிலும் அகற்றுவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
எங்களை ஆற்றலோடு வழிநடத்தும் இறைவா! நாங்கள் எங்களுடைய சோம்பேறித்தனத்தை அகற்றி துடிப்புள்ள சாதனையாளர்களாக மாற எங்களுக்கு  உழைக்கும் மனநிலையைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்