மீண்டும் பார்வைபெற்று இயேசுவை பின்தொடரத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம்,33 வாரம் திங்கள்  
I: 1 மக் :1: 10-15, 41-43, 54-57, 62-64
II: திபா 119: 53,61. 134,150. 155,158
III: மத்:  18: 35-43

பார்வை என்பது மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று. அறிவியல் கூற்றின் படி ஒருவர் மற்ற புலன்களால் அறிந்து கொள்வதைவிட பார்வையாலேயே அதிகம் கற்கிறார். அறிந்து கொள்கிறார். வயதில் பெரியவர்கள் சிறியவர்களை வழிநடத்தும் போது அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகள் " பார்த்து நடந்துகொள் " , பார்த்து கவனமாக செல் "  ," பார்த்து பேசு " போன்றவையே. ஏனென்றால் பார்வை என்பது  பார்த்தல் என்ற செயலை மட்டும் குறிப்பது அல்ல. மாறாக கவனம், விழிப்புணர்வு  போன்ற பண்புகளோடும் தொடர்புடையதாய் இருக்கிறது. இத்தகைய " பார்வை" யை நேர்த்தியாக கட்டிக் காப்பது நமது கடமையாகும். அதை இழந்தோமெனில் இருள்வது நமது வாழ்க்கையே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பார்வையற்ற ஒருவருக்கு பார்வை அளிக்கும் நிகழ்வை நாம் தியானிக்கிறோம். இந்நிகழ்வை நாம் அடிக்கடி தியானித்திருந்தாலும் மீண்டும் மீண்டுமாக நாம் நமது பார்வையில் தெளிவடைய நமக்கு பல சிந்தனைகளை வழங்குவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

இவ்வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பார்வையற்றவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. அதிலும் சிறப்பாக பார்வை பெற வேண்டும் என்ற அவருடைய ஆர்வமும் நம்பிக்கையும். இயேசு அவ்வழியே நடந்து வந்துகொண்டிருந்ததை பார்வையற்றவர் கேள்வியுறுகிறார். அப்போது தாவீதின் மகனே இயேசுவே என அவர் அழைக்கிறார். அதைக் கேட்ட மற்றவர்கள் அவரை அடக்குகிறார்கள். பார்வையற்றவர், பிச்சைக்காரர் தனது தேவைக்காக குரல் எழுப்புவதை பிறர் அடக்கி அவரை அவமானப்படுத்துகிறார்கள். எனினும் அவர் விடாமல் இன்னும் உரக்கக் கத்துகிறார். ஏனென்றால் அவர் நம்பிக்கையோடு தன்னுடைய எதிர்காலத்தை தன் மனதால் ஏற்கனவே பார்த்துவிட்டார். இயேசு தனக்கு பார்வை அளிக்கப்போவதை அவருடைய அகக் கண்கள் கண்டுவிட்டன. அந்த நம்பிக்கை அவருக்கு உண்மையிலேயே பார்வையை பெற்றுத்தந்தது

நம் வாழ்வில் நம்முடைய உரிமைக்காக பிறருடைய எதிர்ப்பையும் தாண்டி, மற்றவரின் அடக்கு முறையை மீறி குரல் எழுப்ப நமக்குத் தைரியம் உண்டா என நாம் சிந்திக்க வேண்டும்.  அத்தகைய தைரியம் எப்போது வருமெனில் நம்பிக்கையோடு நம் எதிர்காலத்தை நாம் பார்க்கும் போதுதான். நம்பிக்கையோடு நம் எதிகாலத்தை அகக்கண்ணால் காண்பதே நாம் இழந்த பார்வையை பெறுவதற்கான வழி.

பார்வையற்றவர் பார்வை பெற்றபின் அவரிடமிருந்து நாம்   கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றும் உள்ளது. பார்வை பெற்றவுடன் அவர்  இயேசுவைப் பின்தொடர்ந்தார். அன்புக்குரியவர்களே நம் அன்றாட வாழ்வில் நாம் பார்வை இழக்கும் தருணங்கள் பல வந்து போகான்றின. அவற்றில் பலவற்றை நாம் நம்பிக்கையால் வென்றிருக்கிறோம். மீண்டும் பார்வை பெற்றிருக்கிறோம். பார்வை பெற்றபின் நம் வாழ்வு எவ்வாறு இருந்தது என நாம் அலசிப் பார்க்க வேண்டும். புதுப்பார்வை நம் வாழ்வை இயேசுவின் பாதையில் அமைத்ததா?  இல்லை பழைய வழியிலே நாம் சென்றோமா?

நாம் மீண்டும் பார்வை இழக்க நேரிடலாம். வழியில் தடுமாறலாம்.ஆனால் இருட்டிலே உறைந்து விடாமல் நம்பிக்கையால் பார்வையை மீண்டும் பெற குரலெழுப்பி பார்வை பெற்று இயேசுவின் பாதையில் அவரைப் பின்தொடர முயற்சி செய்வோம். 

 இறைவேண்டல்
ஒளியான இறைவா! நாங்கள் இழந்த பார்வையை எங்களுக்கு மீண்டும் தாரும். உமது பாதையில் பயணிக்க அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்