தெளிவுபடுத்தும் தூய ஆவியாரை ஏற்றுக்கொள்ளத் தயாராவோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-6 வாரம் செவ்வாய்
I: திப:16: 22-34
II: திபா :138: 1-2. 2-3. 7-8
III:யோவான் :16: 5-11
புரிந்து கொள்ளும் திறன் மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. இத்திறனே ஒருவரைப் பற்றியோ,நடக்கும் நிகழ்வுகள், காணும் பொருட்கள் போன்றவற்றை பற்றியோ சரியான கருத்துக்களை நம் மனதில் பதிய வைக்கிறது. புரிந்து கொள்ளாத போது கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. நாளடைவில் இக்கருத்து வேறுபாடுகளும் புரிந்து கொள்ளாத நிலையும் நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றன.
இந்நிலை ஒரு புறமிருக்க பலவேளைகளில் பிறருடைய கருத்துக்களை சரியானதா என ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாக எற்றுக் கொள்ளும் நிலையும் நம்மிடையே நிலவுகிறது.
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு தான் போய் தூய ஆவியானவரை அனுப்பப்போவதாக வாக்களிக்கிறார். அத்தூய ஆவியாம் துணையாளர் பாவம், நீதி, தீர்ப்பு நாள் போன்றவற்றைப் பற்றி உலகம் கொண்டுள்ள தவறான கருத்துக்களைச் சுட்டிக் காட்டி சரியானவற்றை விளக்குவார் என உறுதியளிக்கிறார்.
பல சமயங்களில் உலகத்தின் போக்கிலேதான் நாம் போய்க்கொண்டிருக்கிறோம். "என்னுடைய வாழ்க்கையை திருப்திகரமாக மகிழ்வாக வாழந்தால் போதும். இதனால் மற்றவர்கள் எதை இழந்தாலும் பரவாயில்லை. பழி பாவம் பார்க்கத் தேவையில்லை. வாழ்கின்றவரை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம்" என்பது தான் இன்றைய உலகின் கருத்து. அதனாலேயே உலகில் பாவம் மலிந்து கிடக்கிறது. ஆளுக்கொரு நீதி கிடைக்கிறது. உலகத்தின் போக்கில் மனித வாழ்வும் போகிறது.உலகின் இக்கருத்தை ஆழமாக உள்வாங்கியவர்களா நாமும்?
அவ்வாறெனில் இத்தகைய தவறான கருத்துக்களை நம் உள்ளத்திலிருந்து வேரோடு நாம் அகற்ற வேண்டும். இல்லையேல் நமது வாழ்வு உண்மையான சான்று பகரும் கிறிஸ்தவ வாழ்வாக இருக்க இயலாது. எனவே தூய ஆவியாம் துணையாளர் நம் உள்ளத்தை தம் ஞானத்தால் நிறைத்து தவறான கருத்துக்களை அகற்றி நம்மை வழிநடத்த அருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! எங்களை உம் ஆவியாரின் ஞானத்தினால் நிரப்பி நாங்கள் உலகத்தின் தவறான சிந்தைகளிலிருந்து விடுபட அருள் புரியும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Daily Program
