எதிர்ப்பும் மறுப்பும் அற்ற சீடத்துவம் கிறிஸ்தவம் ஆகாது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
24 ஜனவரி 2026
பொதுக்காலம் 2-ஆம் வாரம் – சனி
2 சாமுவேல் 1: 1-4, 11-12, 19, 23-27
மாற்கு 3: 20-21
எதிர்ப்பும் மறுப்பும் அற்ற சீடத்துவம் கிறிஸ்தவம் ஆகாது!
முதல் வாசகம்.
இந்த வாசகம் 2 சாமுவேல் நூலின் தொடக்க அதிகாரத்திலிருந்து வருகிறது. இது சவுல் அரசரின் மரணத்திற்குப் பிறகு உடனடியாக நடைபெறுகிறது. அமலேக்கியர்களுடன் போரிட்ட தாவீது, சிக்லாகுக்குத் திரும்பி அங்கு காத்திருக்கிறார். மூன்றாம் நாள், காயமடைந்த ஒரு மனிதன் சவுலின் முகாமிலிருந்து வருகிறான், அவன் துக்கம் மற்றும் துயரத்தின் அடையாளமாக உடைகள் கிழிந்து, தலையில் தூசி படிந்து காணப்படுகிறான்.
என்ன நடந்தது என்று தாவீது அவனிடம் கேட்கும்போது, போரில் பல வீரர்கள் இறந்துவிட்டதாகவும், சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டதாகவும் அந்த தாவீதிடம் தெரிவிக்கிறான்.
செய்தி அறிந்த தாவீதும் அவருடைய ஆட்களும் – இஸ்ரயேலின் பாரம்பரிய துக்கத்தின் அடையாளமாக தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு துக்கம் கொண்டாடுகிறார்கள். சவுல் தாவீதுக்கு விரோதமாக நடந்து கொண்ட போதிலும். அவரின் மரணம் அறிந்து தாவீது மிகவும் வருந்துகிறார்.
நற்செய்தி.
இயேசு கலிலேயாப் பகுதியில் போதித்து, குணப்படுத்திய பிறகு, அவர் தம் சீடர்களுடன் ஒரு வீட்டிற்குச் செல்கிறார், ஆனால் மக்கள் கூட்டம் அவரை மிகவும் நெருக்கமாகப் பின்தொடர்வதால், அவர்களுக்கு ஓய்வெடுக்கவோ, சாப்பிடவோ கூட நேரமில்லை.
அவரது சொந்த குடும்பத்தினர் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்: இந்த தீவிரமான செயலைக் கேள்விப்பட்ட இயேசுவின் உறவினர்கள், அவர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் அல்லது "பைத்தியம் பிடித்தவர்" என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் சவுல் மற்றும் அவரது மகன் யோனத்தானின் இறப்பு செய்தியைக் கேட்டதும் தாவீது ஆழ்ந்த துக்கத்தை அனுபவிக்கிறார். இது விரோதமான உறவைக் கொண்டிருந்த ஒருவரின் இழப்பு கூட உண்மையான மற்றும் இதயப்பூர்வமான புலம்பலைத் தூண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. யோனத்தானைப் பற்றிய தாவீதின் வார்த்தைகள் ஆழமான மற்றும் நிலையான அன்பை வெளிப்படுத்துகின்றன.
ஆனால், நற்செய்தியில், இயேசுவின் உறவினர்கள் ஊர் பேச்சைக் கேட்டு, இயேசுவைக் குடிகாரர், பைத்தியும் பிடித்தவர் என்ற முடிவுக்கு வருகின்றனர். அவரது சொந்த குடும்பத்தினர் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்
வளர்ந்து ஆளான ஊரில் (நாசரேத்தில்) அவர் துரத்தப்பட்டார் . இப்போது நெருங்கிய உறவினர்கள் அவர் சுய கட்டுப்பாட்டை இழந்த "பைத்தியம் பிடித்தவர்" என்ற முடிவுக்கு வந்த்துவிட்டார்கள். அல்லது, அவரது உறவினர்கள், இயேசுவுக்கும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால், அவருடைய பாதுகாப்பு குறித்து பயந்து அவர்கள் கலக்கமடைந்திருக்கலாம். அதனால் அவரை அழைத்துப்போக விரும்பியிருக்கக்கூடும்.
நாம் கிறிஸ்துவை இன்னும் நெருங்கிய வகையில் பின்பற்ற முற்படும்போது, குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடமிருந்து எதிர்ப்பையும் பொறாமை உணர்வயும் நாம் சந்திக்க நேரிடும். இயேசுவின் முன்மாதிரி, இந்த பதட்டங்களை தைரியத்துடனும் அன்புடனும் எதிர்கொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆம்,
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி
என்ற ஐயா கண்ணதாசனின் ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வருகிறது. உலகப் போக்கில் நாம் முடிவெடுக்க இயலாது. நற்செய்தியே நமக்கு விளக்கு.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உமது அன்பு பணியில் ‘பைத்தியக்காரர்’ என்ற பட்டம் சூட்டப்பட்டீர். என் நான் எம்மாத்திரம்? எப்போதும் உம்மைப் போன்று துணிவுடன் பணியில் பயணிக்க வேண்டிய மனோபலத்தைத்தாரும. ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
+6 0122285452