கடவுளை மட்டும் மாட்சிப்படுத்துவோம்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா - 5ஆம் வாரம் திங்கள் 
I: திப:14: 5-18
II: திபா :115: 1-2. 3-4. 15-16
III:யோவான் :14: 21-26

ஒருமுறை நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது தெருக்களிலே பெரிய பெரிய பதாகங்களைக் கண்டேன்.ஒருபுறம் சினிமா கதாநாயகர்களுக்கு.மறுபுறம் அரசியல் தலைவர்களுக்கு. என்னடா இது ஆன்மீகம் தொடர்பாக ஒன்றுமே இல்லையே என சற்று வருத்தத்தோடு போய்க்கொண்டிருக்கும் போது " அனல் பறக்கும் ஆவிக்கான கூடுகை"என்று ஒரு போதகரின் படத்தை பெரிதாகப் போட்டு ஒரு பதாகையையும் கண்டேன். ஆகமொத்தத்தில் புகழையும் பெருமையும் தந்த ஆண்டவனை பெருமைப்படுத்த ஒரு பதாகையும் வாசகமும் அங்கு இல்லை. உலகம் என்றும் உள்ள ஆண்டவரைப் புகழ்வதைவிட  அவ்வப்போது உலகைக் கவர்கின்ற சில மனிதரையே புகழ்கின்றது என்ற சிந்தனை என்னை ஆழமாகத் தாக்கியது.

அன்புக்குரியவர்களே நாமும் இத்தகைய சிந்தனை நிறைந்த உலகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒருபுறம் நமக்கே நாம் பெருமையையும் புகழையும் தேடிக்கொள்ள விழைகிறோம். "நான் தான் இதைச் செய்தேன் " என்று கல்வெட்டுகளில் பொறிக்காத குறையாக மார்தட்டிக்கொண்டு அலைகிறோம்.
மற்றொரு புறம் பிரபலங்களை கடவுளுக்கு இணையாக்கிவிடுகிறோம். ஆனால் நம்முடைய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமான கடவுளை மறந்துவிடுகிறோம்.

இன்றைய முதல்வாசகம் இக்கருத்தை மிகத்தெளிவாக உணர்த்துகிறது.லிஸ்திரா பகுதியில் நற்செய்தியைப் போதித்துக்கொண்டிருந்த வேளையில் கால் ஊனமுற்றவரை பவுல் நடக்கச் செய்ததைக் கண்ட மக்கள் அவரையும் அவரோடு உடனிருந்த பர்னபாவையும் தெய்வங்களாக்கி அவர்களுக்கு பலிசெலுத்த விழைந்தனர். ஆனால் பவுலோ தாங்கள் வெறும் மனிதர்கள் தான்  என்பதையும் பயனற்றவற்றை விட்டுவிட்டு விண்ணையும் மண்ணையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய ஆண்டவரிடமே திரும்புங்கள் எனக் கூறி  அவர்களை நல்வழிப்படுத்தினார். அங்கே பவுல் தனக்கு வல்லசெயல்களைச் செய்ய ஆற்றலளித்த கடவுளை மாட்சிப்படுத்துகிறார்.

கடவுளை மாட்சிப்படுத்த நம்மையே நாம் தாழ்த்த வேண்டும். நமக்கு ஆற்றலளித்தது கடவுள்தான் என உணரவேண்டும். அவ்வாறு உணர ஒரே வழி அவரை அன்பு செய்து அவர் சொல்வதைக் கடைபிடிப்பதே. அவ்வாறு கடைபிடித்தால் தந்தையும் மகனும் தூய ஆவியாரும் நம்மில் குடிகொள்வர். இதுவே கடவுளை நாம் உண்மையாக மாட்சிப்படுத்துலாகும். எனவே கடவுளை அன்பு செய்து பயனற்ற அனைத்தையும் விட்டுவிட்டு அவரிடம் திரும்பி அவரை மட்டும் மாட்சிப்படுத்தும் விதமாய் நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

இறைவேண்டல்
ஆற்றலின் உறைவிடமே இறைவா!  உம்மை மட்டுமே எங்கள் வாழ்வில் நாங்கள் மாட்சிப்படுத்த வரம்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்