இறையாட்சியை அமைக்கப் பயனுள்ளவர்களா நாம்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின்  17 ஆம் திங்கள்
I: விப: 32: 15-24,30-34
II: திபா 106: 19-20. 21-22. 23
III: மத்: 13: 31-35

ஒரு சிறுமி கோவிலில் வாசகம் வாசிப்பதற்கு மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சற்று உயரம் குறைந்தவராதலால் அவர் வாய்ப்புக் கேட்டபோதெல்லாம் நிராகரிக்கப்பட்டது. "நீ குள்ளமாக இருப்பதால் வாசக மேடையில் உன் முகம் யாருக்கும் தெரியாது. மைக் எட்டாது. நீ வாசிப்பது தெளிவாகக் கேட்காது " என்றெல்லாம் கூறி கேலி செய்வார்கள் பிறர். ஒருமுறை எப்படியோ அவருக்கு வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் வாசித்து முடித்து வந்த பிறகும் முன்பு கேலி செய்தவர்களுள் ஒருவர் மீண்டும் கேலியாக "வாசிக்கும் போது முகம் தெரியவில்லை. மறுமுறை வாசிக்கும் போது முக்காலியின் மேல் ஏறி நின்று வாசி " என்று சிரித்துக் கொண்டே கூறினார். ஆனால் அருகில் இருந்த மற்றொருவர் "முகம் தெரியவில்லை என்றால் என்ன, இறைவார்த்தையை மிகவும் தெளிவாக கனீர் கனீர் என்று அழகாக வாசித்தது போதாதா? " என்று கூறி கேலி செய்தவரை கடிந்து கொண்டார். உருவத்தை பார்த்து யாரையும் எடை போடாதீர்கள் என்று கூறி அச்சிறுமியையும் உற்சாகப்படுத்தினார்.

"சிறு துளி பெருவெள்ளம்", "கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது" ," சிறு துரும்பும் பல் குத்த உதவும்" போன்ற தமிழ் பழமொழிகள் அனைத்தும் நாம் அறிந்ததே. இவ்வுலகில் படைக்கப்பட்ட எல்லாமும் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாகவே இருக்கின்றது. எப்பொருளையும் அதன் உருவத்தையோ, அளவையோ அல்லது தன்மையையோ கொண்டு பயனற்றது என்று ஒதுக்கிவிட முடியாது.  அல்லது அவற்றின் பயன்பாட்டை குறைத்துக்காட்டவும் கூடாது. 

இன்றைய நற்செய்தியின் மூலம் இயேசு இத்தகைய அரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறார். கடுகு விதை அளவில் சிறியதானாலும் கூட அது வளர்ந்து மரமாகும் போது நிழலையும் பறவைகள் தங்குவதற்கு கிளைகளையும் தருகிறது. இதைப்போலவே புதிதாக அரைக்கப்பட்ட மாவில் கலக்கப்பட்ட சிறுதுளி புளிப்புமாவு புதிய மாவு முழுவதையும் புளிப்பேற்றி ரொட்டியோ அல்லது பிற பலகாரங்களோ செய்வதற்கு ஏதுவாக மாற்றுகிறது.

அதே போலத்தான் நம்மிடம் உள்ள நற்பண்புகளும், திறமைகளும் நற்காரியங்களுக்காக பயன்படுத்தப்படும் போது ஏராளமான நன்மைகள் விளைகின்றன. நாமும் பயனுள்ளவர்களாகிறோம்.  யாரும் நம்மை பயனற்றவர்கள் என்று கூற இயலாது.  நாமே பயனற்றவர்களாக எண்ணும் தாழ்வு மனப்பான்மையை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அத்தோடு பிறர் நம் உருவத்தையோ,திறமைகளையோ, பண்புகளையோ குறைவாக மதிப்பிடும் போதும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் கடுகு விதைபோல, புளிப்பு மாவைப் போல நம்மால் இயன்ற அளவு பயனுள்ளவர்களாகத் திகழ முயற்சி செய்யவேண்டும். மாற்றமும் ஏற்றமும் நம்மிலேதான் தொடங்க வேண்டும். அவ்வாறு நிகழ்கின்ற போது அம்மாற்றமும் எற்றமும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் விளங்கி பரவத் தொடங்கும்.

நமக்கும் பிறருக்கும் பயனுள்ள நன்மை பயக்கின்ற வாழ்வு வாழும் போது நாமும் இறையாட்சியை இவ்வுலகில் அமைக்க கடவுளின் கையில் பயனுள்ள கருவிகளாய் மாறுகிறோம். எனவே நம்முடைய பங்களிப்பை அது சிறியதோ பெரியதோ கொடுத்துக்கொண்டே இருப்போம். நம்முடைய திறமைகளை உயர்வாக எண்ணி பயன்படுத்தி இறையாட்சியை அமைப்போம்.

 இறைவேண்டல்
அன்பு இறைவா! கடுகு விதை, புளிப்பு மாவு போன்ற சிறியோரான எங்களையும் இறையாட்சிப் பணிக்காய் பயன்படுத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்