மாற்றத்திற்கானத் தலைமைப் பண்பு | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 14 வாரம் புதன் 
I: தொநூ: 41: 55-57; 42: 5-7,17-24
II: திபா 33: 2-3. 10-11. 18-19
III: மத்: 10: 1-7

"அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு " என்ற பொன்மொழிக்கேற்பதலைவராம் இயேசு மற்ற தலைவர்களைப் போல் பயணித்த பாதையில் பயணிக்காமல் யாரும் பயணிக்காதப் புதிய இறையாட்சிப் பாதையில் பயணித்தார்.

உண்மையான தலைவர் என்பவர் தன் கீழ் உள்ளவர்களை வலுக்கட்டாயமாக வற்புறுத்துபவர்கள் அல்ல; மாறாக, தன்னை சார்ந்து இருப்பவர்களை எந்தவொரு சுமைகளையும் சுமத்தாமல் செயல்பட வைப்பவர். மேலும் தான் தெரிந்தவற்றை மற்றவர்களும் அறிய வேண்டும் என நினைப்பவர். தன்னை பின்பற்றுபவர்களைத் தொண்டர்களாக நடத்தாமல் தன் நண்பர்களாக கருதும் மனப்பான்மை கொண்டவர். இத்தகைய பண்பு நலன்களுக்கு சொந்தக்காரர்தான் நம் ஆண்டவர் இயேசு.

இறையாட்சியின் தலைவராம் இயேசு "தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவியை ஓட்டவும், நோய் நொடிகளை குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் " (மத் :10: 1). இத்தகைய மனப்பான்மைதான் உண்மையான தலைமைத்துவப் பண்புக்கு இலக்கணமாக அமைகின்றது.

இயேசு தனது அதிகாரத்தையும் ஆற்றலையும் தன்னோடு மட்டும் வைத்திருந்து சுய பெருமையை தேடாமல் இருந்தார். தலைவராம் இயேசு தன்னிடமிருந்த ஆற்றலையும் அதிகாரத்தையும் தன்னைப் பின்பற்றிய சீடர்களோடு பகிர்ந்து கொண்டார். அதிகம் படிக்காத மற்றும் சாதாரண சாமானியர்களைத் தன் சீடர்களாக அழைத்து தன் இறையாட்சி பணியைத் தனக்குப் பிறகும் தொடர்ந்து செய்ய அவர்களை தகுதிப்படுத்தினார். திறமை வாய்ந்தவர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது உண்மையான தலைமைத்துவப் பண்பு கிடையாது. மாறாக, திறமை இல்லை என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் தெரிவு செய்து தகுதிப்படுத்துவது தான் உண்மையான தலைமைத்துவப் பண்பு.

தலைமைத்துவ பண்புக்கு முன்மாதிரியாக நம் ஆண்டவர் இயேசு இருக்கின்றார். இப்படிப்பட்ட உயர்ந்த மனநிலையைக் கொண்ட ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகின்ற நாம் அவர் கொண்டிருந்த தலைமைத்துவப் பண்பை நமதாக்குவோம். இம்மண்ணுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்பக்கூடிய தலைவர்களாக உருமாற தகுதியற்றவர்களை தகுதிப்படுத்த நம்மையே ஆயத்தப்படுத்துவோம்.நமக்குக் கீழ் பணியாற்றும் சக மனிதர்களை நண்பர்களைப் போல ஏற்று அவர்களை வழிநடத்த முயற்சி செய்வோம். இயேசுவைப் போல நண்பருக்கு உரிய மனநிலையில் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் தலைமைத்துவப்பண்போடு செயல்படுவோம். இயேசுவின் தலைமைத்துவப் பாதையில் பயணிக்க தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்: 

எம் தலைவராம் இறைவா! எங்களுடைய பணியின் பொருட்டும் கடமையின் பொருட்டும் வரக்கூடிய பொறுப்புகளில் இயேசுவின் தலைமைத்துவப் பண்போடு அனைவரையும் வழிநடத்த தேவையான அருளைத் தரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்