கிறிஸ்தவ வாழ்வு புனிதத்துவ வாழ்வுக்கு அழைப்பா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம் 12 வாரம் செவ்வாய்
I: தொநூ: 13: 2,5-18
II: திபா 15: 2-3. 3-4. 5
III:மத்: 7: 6,12-14
கிறிஸ்தவ வாழ்வு என்பது புனிதத்துவ வாழ்வுக்கு அடிப்படையான ஒன்றாகும். இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் புனிதத்துவத்தோடு வாழ அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் புனிதத்துவ வாழ்விற்கு பொறுப்பாவர். நம்மைப் படைத்த கடவுள் தூய்மையானவர். அவரின் சாயலில் படைக்கப்பட்ட நாமும் புனிதத்துவ வாழ்விற்குச் சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தியின் வழியாக ஆண்டவர் இயேசு இரண்டு விலங்குகளை உருவகமாக சுட்டிக்காட்டி புனித வாழ்வு வாழ்வது எப்படி? என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மத்தேயு நற்செய்தியாளர் யூதக் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு அச்செய்தி எழுதினார். எனவேதான் யூதர்களின் மனநிலை நற்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யூதர்களைப் பொறுத்தவரை நாய் மற்றும் பன்றி அருவருப்பான விலங்குகளாக கருதப்பட்டன. எனவேதான் இறையாட்சி என்னும் முத்தை தேவையான இடத்தில் விதைத்து புனிதத்துவத்தின் வழியாகச் சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம்.
இயேசு இறையாட்சியை அதன் மதிப்பு தெரியாத மக்களிடத்தில் விதைப்பதை விட அதை ஏற்றுக்கொண்ட மக்களிடத்தில் விதைக்க அழைப்பு விடுக்கிறார்.
இதன் இறையியல் பின்னணி என்னவென்றால் தொடக்க கால யூத கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டும் ஆழமற்ற நம்பிக்கையில் வாழ்ந்தனர். ஆனால் தொடக்கத்தில் புறவினத்தார் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர். எனவேதான்இயேசு கூறியதை மத்தேயு நற்செய்தியாளர் தெளிவாக எழுதியுள்ளார். "பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" என்று இயேசு கூறியுள்ளார். பிறர் நமக்கு நன்மை செய்ய வேண்டும் நாம் நினைக்கலாம். அதையே பிறருக்கும் செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பிறருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வதும் வழிகாட்டுவதும் தூய வாழ்வே ஆகும்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் நம்முடைய மதிப்பீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாத இடத்திலே மனம் வருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் மதிக்கப்படும் இடங்களில் நம்முடைய மதிப்பீடுகளை முழு மனதோடு பிறருக்கு கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த மன நிலை புனிதத்துவ வாழ்வுக்கு சான்றாக இருக்கின்றது. எனவே இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்களை கண்டு மனம் தளராமல், மன மாற்றத்தை நோக்கி இறுதிவரை புனிதத்துவ வாழ்விற்கு சான்று பகர அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
அன்பான ஆண்டவரே! தூய்மையான உள்ளத்தோடு பிறர் நலனில் அக்கறை கொண்டு வாழத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்