திருத்தந்தை பிரான்சிஸ் சிங்கப்பூரில் ஆற்றிய இறுதி உரையாடல்
திருத்தந்தை பிரான்சிஸ் சிங்கப்பூரில் ஆற்றிய இறுதி உரையாடல்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது அப்போஸ்தலிக்கப் பயணத்தை முடிப்பதற்கு முன், செப்டம்பர் 13 அன்று சிங்கப்பூரில் உள்ள கத்தோலிக்க கல்லூரியில் பல்வேறு நம்பிக்கை மற்றும் கத்தோலிக்கர் அல்லாத இளைஞர்களைச் சந்தித்தார்.
இந்த அர்த்தமுள்ள சர்வசமய கூட்டத்தில், விமர்சனங்கள், சொகுசான இடத்தில் இருந்து வெளியே காலடி எடுத்து வைப்பதன் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு ஆகிய மூன்று முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்து இளைஞர்களுடன் உற்சாகமாக உரையாடலில் ஈடுபட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மதங்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் பல்வேறு மதங்களில் ஒற்றுமையைப் பின்தொடர்வதன் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.
சொகுசான சூழ்நிலையை விட்டு வெளியே வருதல் :
இளைஞர்கள் மன உறுதியோடு , அவர்களின் சொகுசான சூழ்நிலையை விட்டு அப்பால் செல்ல வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார், வளர்ச்சி மற்றும் வாழ்க்கைக்கு நல்ல முயற்சி மற்றும் துணிந்து முடிவு எடுக்கும் திறன் தேவை என்பதை வலியுறுத்தினார்.
மேலும் "உங்கள் வயிற்றைக் கொழுக்க வைக்காதீர்கள்,அதன் காரணமாக உங்கள் மூளையும் கொழுப்பு படிந்து சிந்திக்க முடியாமல் செய்து விடும் என்று கூறினார் "
மன உறுதியுடன் முடிவுகள் எடுப்பதில் வெட்கப்பட வேண்டாம் என்று இளைஞர்களை ஊக்குவித்தார், பயம் திணறடிக்கக்கூடும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார்: "பயம் ஒரு சர்வாதிகார அணுகுமுறை." தவறுகள் தவிர்க்க முடியாதவை, ஆனால் அவை வளர்ச்சிக்கு அவசியம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
"தவறு செய்வது நல்லது, ஆனால் நீங்கள் தவறு செய்யும் போது அவற்றை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்," என்று அவர் கூறினார். திருத்தந்தை ஒரு சிந்தனையைத் தூண்டும் கேள்வியை முன்வைத்தார்: "என்ன மோசமானது - நீங்கள் முயற்சித்ததால் தவறு செய்வது அல்லது தவறுகளைத் தவிர்க்க எதுவும் செய்யவில்லையா?"
இலகுவான அதே சமயம் ஆழமான முறையில், “முயற்சி எடுக்காத இளைஞன் ஏற்கனவே வயதாகிவிட்டான்” என்று முடித்தார்.
வீசப்படும் விமர்சனங்கள் :
விமர்சனங்களைக் கையாள்வது பற்றிக் கேட்டபோது, திருத்தந்தை பிரான்சிஸ், கருத்துக்களை வழங்குதல் மற்றும் பெறுதல் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
"மற்றவர்களை விமர்சிக்க முடியும் என்றால், உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நீங்களும் ஏற்றுக்கொள்வது அவசியம்" என்று கூறிய அவர், இளைஞர்களை விமர்சனத்திற்கு மனம் திறந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம் :
இளைஞர்களின் வாழ்வில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்தும் உரையாற்றிய திருத்தந்தை , சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிடாமல் இருக்க இந்த கால தலைமுறையினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
"தொழில்நுட்பம், ஊடகங்கள் மற்றும் உங்கள் தொலைபேசிகளை சரியான வழியில் பயன்படுத்துங்கள், அவர்களுக்கு அடிமையாக இருக்காதீர்கள்," என்று அவர் அறிவுறுத்தினார், டிஜிட்டல் கருவிகளை சமநிலை மற்றும் கவனத்துடன் பயன்படுத்துவதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மதங்களுக்கு இடையேயான உரையாடல் :
மதங்களுக்கு இடையேயான உரையாடல் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ், இளைஞர்கள் தங்கள் நம்பிக்கையைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபடுமாறு ஊக்குவித்தார், ஆனால் மரியாதையுடனும் பணிவுடனும்.
"உன்னுடைய மதத்தை விட என் மதம் முக்கியம்" அல்லது "என் மதம் மட்டுமே உண்மையானது , ஆனால் உன்னுடையது இல்லை" என்று எவரும் சொல்லக்கூடாது" என்று அவர் கூறினார்.
நம்பிக்கையில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திருத்தந்தை , “ஒவ்வொரு மதமும், வெவ்வேறு மொழிகள் இருந்தாலும், கடவுளை அடைவதற்கான வழி. கடவுள் அனைவருக்கும் கடவுள் என்பதை நாம் உணர வேண்டும் என்று கூறினார். ”
வெவ்வேறு நம்பிக்கைகளுக்கு இடையேயான உரையாடலுக்கு "தைரியம்" மற்றும் "மரியாதை" இரண்டும் தேவை என்றும், மரியாதையான உரையாடல் புரிதல் மற்றும் அமைதியை வளர்ப்பதற்கு முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வன்கொடுமை :
ஒரு கட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் வன்கொடுமைகளுக்கு எதிராக திரும்பினார், மேடையில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பத்து இளைஞர்களிடம் அவர்களின் எண்ணங்களைக் கேட்டார்.
அவர்களின் பதில்கள் "ஒருவருக்கு ஆறாத வலி நிராகரிப்பு " என்பதில் தொடங்கி "ஒருவரைப் புரிந்து கொள்ளாமல் கீழே போடு மிதிப்பது " வரை என்று பலரின் வேதனையாக இருந்தது.
திருத்தந்தை அவர்களின் நுண்ணறிவுகளை ஏற்றுக்கொண்டார் மேலும் உடல்ரீதியாக கொடுமைப்படுத்துதல் குறிப்பாக அடக்குமுறை வாயிலாக "பள்ளிகளில், மாற்றுத்திறனாளி நபர்களைப் போன்ற பலவீனமானவர்களுக்கு கொடுமைப்படுத்துதல் பெரும்பாலும் நிகழ்கிறது"என்று குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரின் திறன்களையும் குறைபாடுகளையும் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “திருத்தந்தைக்கும் கூட அவரது சொந்த குறைபாடுகள் உள்ளன” என்று கூறினார். மரியாதையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதன் மூலம் உறவுகளை பேண முடியும் : "உரையாடலில் மரியாதை மிகவும் முக்கியமானது." என்று நிறைவு செய்தார்.
ஒற்றுமையின் சின்னம்:
அவரது உரைக்குப் பிறகு, திருத்தந்தை பிரான்சிஸ் மாணவர்களுடன் சேர்ந்து ஓவியம் வரைவதற்கான அடையாளச் செயலில் ஈடுபட்டார், இது பல்வேறு நம்பிக்கைகளில் ஒத்துழைப்பையும் நட்பையும் வளர்ப்பதில் அவர்களின் கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும்
பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை திருத்தந்தையின் இந்த செயல் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.