இறைவேண்டுதல் செய்யத் தயாரா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 11 வியாழன்
I: 2 கொரி: 11: 1-11
II: திபா 111: 1-2. 3-4. 7-8
III:மத்: 6: 7-15
கிறிஸ்தவ வாழ்வில் 'செபித்தல்' என்ற பண்பானது மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. ஒரு மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பதுஉயிர் வாழ எவ்வளவு முக்கியமோ, அதே போல துடிப்புள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ செபம் என்ற இதயத்துடிப்பு மிகவும் அவசியமாகும். செபித்தல் என்பது மளிகைக் கடையில் பொருட்களை வாங்கச் செல்லும் போது கொண்டு செல்லும் சீட்டை போலத் தேவைகளை மட்டும் அடுக்கிக்கொண்டே போகும் செயலல்ல. மாறாக கடவுளோடு ஒன்றித்திற்கும் ஒரு நிலையாகும். அப்படியென்றால் செபம் என்பது என்ன? என்ற கேள்வி நமக்கு எழலாம்.
கடவுளைப் போற்றுவதும், அவருக்கு நன்றி செலுத்துவதும் தான் உண்மையான செபம். உலகிலேயே மிகவும் போற்றப்படக்கூடிய செபம் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் சீடர்களுக்குக் கற்பித்த இறைவேண்டல். பக்தி முயற்சி என்ற பெயரில் கிறிஸ்தவர்களாகிய நாம் திருப்பயணம் செல்கிறோம், திருச்செபமாலை செபிக்கிறோம், நேர்ச்சை செய்கிறோம். ஆனால் அனைத்தையும் தாண்டி நம்முடைய அன்றாட வாழ்வில் இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் நாம் கடவுளுக்கு புகழ்ச்சியும் நன்றியும் செலுத்தும் பொழுது நம் வாழ்விலே கடவுளின் ஆசீரை நிறைவாக அனுபவிக்க முடியும். புனித அல்போன்ஸ் அவர்கள் நம்முடைய இந்திய நாட்டிலே பிறந்தவர். இவர் தன்னுடைய வாழ்வு முழுவதும் செப வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இவர் சிறு வயதிலிருந்தே அதிகமாக நோய்வாய்படுவது வழக்கம். இவர் அதிகமாக நோயுற்று இருப்பதால் இவர் தன்னுடைய துறவற வாழ்வில் சந்தித்த துன்பங்கள் துயரங்கள் கேலிப் பேச்சுக்கள் ஏராளம்.
ஆனால் அனைத்துத் துன்பங்களையும் கடவுளிடம் ஒப்படைத்து "இறைவா துன்பங்கள் வேண்டாம் என்று நான் கூறவில்லை . ஆனால் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் மன வலிமையை தாரும்" என்று வேண்டுவார். கடவுள் தந்த ஆற்றலின் வழியாகத்தான் ஒரு தலைசிறந்த புனித வாழ்வை புனித அல்போன்ஸாவால் வாழ முடிந்தது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும் என்று தம் சீடர்களுக்குக் கற்பித்துள்ளார். முதலாவதாக "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம்" என்று ஆண்டவர் இயேசு கூறியுள்ளார். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பிற இனத்தவர் சிலர் தங்களை இறைபக்தி மிகுந்தவர்களாகக் காட்டிக்கொள்ள பிறருக்கு முன்னால் இறைவேண்டல் செய்வதைப்போல பிதற்றல் செய்வார்கள். அதிகமான சொற்களைப் பயன்படுத்தி கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று சொல்லி இறைவேண்டல் செய்வர். பிற இனத்தவரைப் போல இஸ்ரவேல் மக்களும் மக்கள் பார்க்க வேண்டுமென செபிக்கத் தொடங்கினார். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பரிசேயர்களும் சதுசேயர்களும் ஆவர். ஆண்டவர் இயேசு இவ்வாறு இறைவேண்டல் செய்வது தவறான ஒன்று என்று என்பதையும் அவர்களைப் போல் இருக்கக் கூடாது என்றும் இயேசு இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவதாக இறைவனிடம் எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதையும் இன்றைய நற்செய்தி வழியாகக் கற்பித்துள்ளார். இயேசு தம் சீடர்களுக்கு இறைவேண்டல் செய்வது எப்படி என்பதை நற்செய்தியின் இரண்டாம் பகுதியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறைத் தந்தையின் தூய தன்மையைப் போற்றிப் புகழவும் இறைவனின் ஆட்சி இந்த உலகில் மலர வேண்டுமென்றும் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான உணவைத் தங்களுக்குத் தர வேண்டும் என்றும் கடவுள் நம் குற்றங்களை மன்னித்ததுப் போல நாமும் பிறருடைய குற்றங்களை மன்னிக்க இயேசு அழைப்பு விடுக்கிறார். சோதனை தீமை ஆகிய அனைத்திலிருந்தும் விடுதலைபெற செபிக்க ஆண்டவர் இயேசு அழைப்பு விடுகிறார். மேலும் விண்ணகத் தந்தையின் மன்னிப்பைப் பெறுவதற்கு நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை மன்னிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ஏனெனில் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அனைவருமே அன்பையும் மன்னிப்பையும் சுவைக்க வேண்டும். இதில்தான் உண்மையான இறைவேண்டல் அமைந்துள்ளது. இவ்வாறு இயேசு கற்றுத் தந்த இறைவேண்டலின் மதிப்பீடுகளின் படி வாழ முயற்சி செய்யும்பொழுது நம் வாழ்வு இயேசுவின் மனநிலையில் வாழக்கூடிய வாழ்வாக மாறும். இதன் வழியாகத்தான் இறையாட்சி மதிப்பீடுகளை இந்த உலகிற்கு கொண்டுவர முடியும். இறைவேண்டல் செய்ய தயாரா?
இறைவேண்டல் :
அன்பான ஆண்டவரே! இறைவேண்டலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நீர் கற்றுத் தந்த மதிப்பீடுகளின் படி வாழத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்