மனசாட்சிக்கு பயந்து வாழ்வோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் நான்காம் வெள்ளி
I: எபி: 13: 1-8
II: திபா 27: 1. 3. 5. 8-9
III: மாற்: 6: 14-29

கடவுள் மனிதராகிய நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கின்றார் என்பது நமது நம்பிக்கை. நாம் நடக்க வேண்டிய பாதையை நமக்குள் இருந்து சொல்லித்தருபவர் கடவுள். நம் மனதோடு அவர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார் மனசாட்சி வழியாக. ஆம் பலமுறை நாம் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, நாம் செய்பவை சரியா தவறா என்றெல்லாம் நமது மனசாட்சி நமக்கு சொல்லிக்கொண்டே தான் இருக்கும். நாம் மனசாட்சிக்கு செவிகொடுக்காத சமயங்களில் கடவுள் பிறர் மூலமாகவும் நம் மனசாட்சியை தூண்டி எழுப்புவார். 

மேற்கூறிய இந்தக் கருத்துக்களை மெய்ப்பிக்கும் வண்ணமாய் அமைந்துள்ளது இன்றைய நற்செய்தி வாசகம். ஏரோது மன்னன் தவறுக்கு மேல் தவறுகள்  செய்ததால் அவனுள்ளேயே அவனுடைய மனசாட்சி மழுங்கடிக்கப்பட்டது. திருமுழுக்கு யோவான் வழியாக அவருக்கு மனம்மாற அழைப்பு கொடுக்கப்பட்டது. அவனுடைய மனசாட்சி தட்டி எழுப்பப்பட்டது.
இருப்பினும் ஏரோதியாவின் சொல்லைக் கேட்டு யோவானை சிறையிலடைத்தார். ஏரோதியாவின் தூண்டுதலுக்கு இணங்கி யோவானுடைய தலையைக் கேட்ட ஏரோதியாவின் மகளுக்கு, முன்மதியின்றி அனைவர்முன்னும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ,யோவானின் தலையையும் வெட்டினான். 

இங்கே ஏரோது மன்னனின் மனதிலே நடைபெற்ற போராட்டத்தை நம்மால் உணரமுடிகிறது. மனசாட்சி வேண்டாம் என்றது. உலக மாயக் கவர்ச்சி மனசாட்சிக்கு பயப்பாடமல் உலக மோக வாழ்க்கையை வாழத் தூண்டியது.இங்கே ஏரோது தோற்றுப்போகிறார். வாழ்வில் நிறைவு இல்லை. குற்ற உணர்வு அவரைக் கொல்லாமல் கொல்கிறது.

அன்புக்குரியவர்களே! மனிதன் தன் மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்தால் தன் வாழ்வை யாருடைய உதவியுமின்றி தானாகவே செம்மையாக்க அவனால் முடியும். ஆம் இக்கூற்று நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். அன்றாட வாழ்க்கைச் சூழலில் நாம் இடறி விழுவதற்கு காரணம் நாம் நம் மனச்சான்று வழியாய் கடவுளின் குரலைக் கேட்க மறுப்பதே. பல சமயங்களில் மனசான்றுக்கு பயந்து வாழ முயன்றாலும் நமது முயற்சியில் தோற்று பாவத்திலே மூழ்கி விடுகிறோம். இத்தகைய நிலையை  மாற்ற தொடர் முயற்சி அவசியம். இறைவேண்டல் அவசியம். ஏரோதின் வாழ்வை மாதிரியாய் எடுத்துக்கொண்டு மனசாட்சிக்கு பயப்படாமல் வாழ்ந்தால் நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம். கடவுளின் குரலை நம் மனசாட்சியின் வழியாய்க் கேட்டு நல்வாழ்வு வாழ முயற்சிப்போம்.

 இறைவேண்டல் 

அன்பு இறைவா! எம் மனசாட்சிக்கு பயந்து நேர்மையான, தூய்மையான, உண்மையான வாழ்வு வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்