அழிவுக்குரிக்குரியவை அழிவுக்கு இட்டுச் செல்லும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

19 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 20ஆம் வாரம் – செவ்வாய்
நீதித்தலைவர்கள் 6: 11-24
மத்தேயு 19: 23-30
அழிவுக்குரிக்குரியவை அழிவுக்கு இட்டுச் செல்லும்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், கடவுள் எவ்வாறு பலவீனமானவர்களையும் அற்பமானவர்களையும் பயன்படுத்தி கடவுளின் மக்களுக்குப் பாதுகாப்பையும் விடுதலையையும் அளிக்கிறார் என்பதைப் பார்க்கிறோம்.
கிதியோன் இஸ்ரயேலின் கோத்திரங்களில் ஒன்றான மனாசே என்பதில் ஒரு குடும்பத்தின் உறுப்பினர். பலவீனமுற்ற கோத்திரமாக மனாசே இருந்தது. கிதியோனும் அவரைச் சார்ந்த "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும்" மீண்டும் மிதியானியர்களால் ஒடுக்கப்படுகிறார்கள்.
இஸ்ரவேலரை மிதியயானியர்களிடமிருந்து விடுவிக்க கடவுள் கிதியோனை அழைக்கிறார். இந்த பணிக்கு தன்னை அழைப்பது உண்மையில் ஆண்டவரா என்று சோதித்த பிறகு, கடவுளை (அல்லது கடவுளின் தூதனை) பார்த்து அவர் இறக்காமல் இருப்பது எவ்வளவு பாக்கியம் என்பதை கிதியோன் உணர்கிறார். கடவுள் கிதியோனோடு ‘ஷாலோம்’ (அமைதி) பற்றிய செய்தியைப் பகிர்கிறார்.
பின்னர், ஆண்டவர் அவரிடம், “உனக்கு நலமே ஆகுக! அஞ்சாதே! நீ சாக மாட்டாய்” என்றார். கிதியோன் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி எழுப்பினார். அதை ‘நலம் நல்கும் ஆண்டவர்’ என அழைத்தார்.
நற்செய்தி.
நற்செய்தியில், தங்கள் செல்வங்களுக்குக் கட்டப்பட்டு அவையே பெரிதென கருதி வாழ்பவர்கள், கடவுளின் ஆட்சியில் நுழைவது எவ்வளவு கடினம் என்பதற்கான கூடுதல் விளக்கத்தை இயேசு அளிக்கிறார். "அப்படியானால் யார் மீட்கப்பண முடியும் முடியும்?" என்று சீடர்கள் கேட்கும்போது, இயேசு பதிலளிக்கிறார்.
"நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்ற பேதுருவின் கேள்விக்கு ஊக்கமளிக்கும் பதில் கிடைக்கிறது: “புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்கிறார். ஆம், மாட்சிமிகு விண்ணக வாழ்வு உண்மை சீடர்களுக்கு உரித்தாகும் என்கிறார்.
நிறைவாக, முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று முடிக்கிறார் ஆண்டவர்
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைப் பற்றி நான் சிந்திக்கும்போது, வாழ்க்கையில் எனது முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க நான் அழைக்கப்படுகிறேன் என்பதை உணர்கிறேன். முதல் வாசகத்தில் ஆண்டவர் கிதியோனிடம் “உனக்கு நலமே ஆகுக! அஞ்சாதே! நீ சாக மாட்டாய்”என்று கடவுளை நோக்கிக் கூப்பிட்ட கதியோனிடம் கூறிய அதே வார்த்தையை நமக்கும் கூறுகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் வாக்கு மாறாதவர்
மேலும் இன்று ‘ஷாலோம்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை ஆண்டவர் தருகின்றார். ‘ஷாலோம்’ என்றால் "அமைதி" என்று பொருள் கொண்டால் போதுமானது.
அடுத்து, இந்த உலகக் காரியங்களில் உண்மையிலேயே செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு, இந்த நற்செய்தி பகுதியைப் படிப்பதும் சிந்திப்பதும் கடினமாக இருக்கலாம். எப்படி நுழைய முடியும் என்று இயேசுவிடம் கேட்ட பணக்கார இளைஞனைக் குறிப்பிடும் விதமாக இது பேசப்பட்டது. இயேசுவின் பதில், "போ, உன்னிடம் உள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடு, அப்போது உனக்குப் விண்ணக வாழ்வு சாத்தியமாகும் " என்பதாகும். அப்போது, பணக்கார இளைஞன் தனது செல்வத்தின் மீது அதிகளவு பற்று கொண்டிருந்ததால் சோகமாகச் சென்றுவிட்டான்.
கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை. செல்வங்களின் மீது அதீத பற்றுதலுடன் போராடும் எவரும் இந்த உண்மை கூற்றை கவனமாக சிந்தித்து நம்ப வேண்டும். அதிகமாக ஆசைப்படுவது என்பது நமது உள்ளத்தை நிலை நிறுத்தாது. மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதுபோல அடுத்தடுத்து அது தாவிக்கொண்டே இருக்கும். யோபு நூலில் 1:21-ல் உள்ளதுபோல்,
“என் தாயின் கருப்பையினின்று
பிறந்த மேனியனாய் யான் வந்தேன்;
அங்கே திரும்புகையில் பிறந்த
மேனியனாய் யான் செல்வேன்’ என்பதுதான் பேருண்மை. இதை உணர்ந்து வாழ்ந்தோமானால், அமைதியின் அரசர் நம்மை அமைதியின் அரசுக்குள் கொண்டு சேர்ப்பார் என்பது திண்ணம்.
பணம் பாதாளம் வரை பாயும். ஆனால், அது பரலோகம் (விண்ணகம்) வரை பாயுமா? சிந்திப்போம்...
இறைவேண்டல்.
அமைதியின் அரசரே இயேவே, என் வாழ்வில் உமது தூய ஆவியின் வல்லமையால் என்னை தொடர்ந்து திடப்படுத்துவீராக. உலக செல்வத்தில் அல்ல, மாறாக எளிமையில் எனது அழைப்புக்கேற்ற வாழ்வுக்கு என்னை இட்டுச்செல்ல உம்மை மன்றடுகிறேன். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
