செல்வம் ஆசீர்வாதமாக மாற வேண்டுமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின்  20 ஆம் திங்கள் 
I: நீதி:  6: 11-24
II: திபா: 85: 8. 10-11. 12-13
III: மத்: 19: 23-30

ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் வாழ்ந்தார்கள். ஒருவர் அதிக செல்வம் கொண்டவர். மற்றொருவர் நடுத்தரமான வசதியைக் கொண்ட ஒரு மனிதர். ஆனால் இந்த இருவரில் செல்வம் அதிகம் வைத்திருந்த மனிதரைவிட நடுத்தரமான வாழ்வை வாழ்ந்த அந்த மனிதரை தான் அந்த ஊரில் வாழ்ந்த  ஏழைகள்  செல்வர் என்று அழைப்பர். காரணம் செல்வம் நிறைய வைத்திருந்த மனிதர் ஒரு போதும் ஏழைகளின் மீது அக்கறையும் அன்பும் கொண்டதில்லை. ஆனால் அதிகமான செல்வம் இல்லாவிட்டாலும் தன்னிடமிருந்த குறைந்த செல்வத்தை வைத்து எண்ணற்ற ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வழக்கத்தை நடுத்தர வசதியுடன் வாழ்ந்த அம்மனிதர் கொண்டிருந்தார். எனவே எல்லா ஏழைகளும் அவரை செல்வர் என அழைத்தனர்.

நம்முடைய வாழ்விலே செல்வம் என்பது நாம் எவ்வளவு வைத்திருக்கின்றோம் என்பதைப் பொறுத்ததல்ல மாறாக,  எவ்வளவு பிறருக்கு கொடுக்கின்றோம் என்பதைப் பொறுத்ததாகும். நாம் எப்பொழுது பிறருக்கு கொடுக்கிறோமோ, அப்பொழுது நாம் பிறருக்கு கடவுளாக தெரிகிறோம். ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியின் வழியாக  செல்வத்தை எவ்வாறு ஆசீர்வாதமாக மாற்ற முடியும் என்ற வாழ்வியல் மதிப்பீட்டை நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.செல்வம் மனிதர்களான நமக்கு கட்டுப்பட்டது. மனிதர்கள் செல்வத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. எனவே செல்வத்தைத் தேடி ஓடாமல் , அதை பிறருக்கு வாழ்வு கொடுக்கும் கருவியாக  பயன்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு " செல்வர்  விண்ணரசில் புகுவது  கடினம் என  நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்" என்று கூறுவதால் செல்வர்களை அவர் பழிக்கிறார்  என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாகக் கடவுள் கொடுத்தக் கொடைதான் செல்வம். அந்த செல்வத்தை கடவுளுக்கு உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை தான் இயேசு முன்வைக்கிறார். செல்வந்தர்கள் திறந்த மன நிலையோடு இருக்க வேண்டும். ஆனால் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் செல்வந்தர்கள் திறந்த மனநிலையோடு இல்லை. பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலை அவர்களிடம் குறைவாக இருந்தது.பணம் படைத்த மனிதர்கள் நல்ல மனம் படைத்தர்களாக இல்லை.

எனவே தான் ஆண்டவர் இயேசு நகைச்சுவையோடு செல்வந்தர்களை விமர்சனம் செய்கிறார். "செல்வர்கள்  இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்று கூறியுள்ளார். ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது என்பது நடக்கும் காரியமல்ல. இயேசு இதைக் கூறியதற்கு காரணம் செல்வர்களுக்கு இறையாட்சிக்கு உட்படும் வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று சொல்வதற்கு அல்ல; மாறாக செல்வமானது  இல்லாதவர்களோடு  பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதான் இறையாட்சியில்   இடம் பெற முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

இன்றைய நற்செய்தியில் செல்வர்களை இயேசு சாடுவது போல இருந்தாலும் செல்வர்களும் இறையாட்சியின் மதிப்பீடுகளைப் பின்பற்றி மீட்புப் பெற வேண்டும் என்பதில் கரிசனையாக இருந்தார். ஏனெனில் இயேசுவின் இறையாட்சி பணியிலும் அவரின் வாழ்விலும் செல்வர்கள் மிகுந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர். செல்வர்களாக இருந்தும் இயேசுவின் நன்மதிப்பைப் பெற்றவர்களும் இருந்தனர். அதிலும் குறிப்பாக செல்வந்தரான சக்கேயு இயேசு கொடுத்த மீட்பை பெற்றார். அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு ஒரு மிகப் பெரிய செல்வந்தர். இவர் இயேசுவை முழுமையாக அன்பு செய்தவர். எனவேதான் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போய் கல்லறையில் அடக்கம் செய்தார்.  அதேபோல இயேசுவின் அடக்கச் சடங்கிற்காக உயர்ந்த நறுமணப் பொருட்களை வழங்கிய நிக்கதேம் ஒரு செல்வந்தர். அவரும் இயேசுவினுடைய வாழ்வில் முக்கிய பங்கு வகித்தார். இவ்வாறாக இயேசுவின் நோக்கம் செல்வர்களும் மீட்படைய வேண்டும் என்பதுதான். செல்வர்கள் தாங்கள் பெற்ற செல்வத்தை தங்களுக்குள்ள வைத்துக் கொள்ளாமல்     ஏழை எளிய மக்களும் பலன் பெறும் வகையில் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதைத்தான் இயேசு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு வாழ்ந்தவர்கள் இயேசுவின் காலத்தில் இயேசுவால் பாராட்டப்பட்டனர். அவ்வாறு வாழாதவர்கள் இயேசுவால் எச்சரிக்கப்பட்டனர். 

நம்முடைய வாழ்வில் செல்வம் ஆசீர்வாதமாக இருப்பதும் சாபமாக மாறுவதும் நமது கையில் தான் இருக்கின்றது. நம்முடைய வாழ்வில் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நம்மிடமுள்ள செல்வத்தை பிறருக்கு கொடுக்கும் மன நிலையைப் பெறுவோம்.  இறைவனுக்கு   முன்னுரிமை கொடுக்கும் மனநிலை இல்லாத பொழுது பகிரும் மனநிலை இல்லாமல் இருக்கும். எனவே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முயற்சி செய்வோம். நம்மிடம் இருப்பதை ஏழைக் கைம்பெண்ணைப் போலவும் சக்கேயுவைப் போலவும் பகிர முன்வருவோம். அப்பொழுது நாமும் மீட்பின் கனியை  முழுமையாக சுவைத்து, நிலையான வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.அத்தகைய மனநிலையையும் தேவையான அருளையும் ஞானத்தையும் வேண்டுவோம்.

 இறைவேண்டல் :
செல்வராயிருந்தும் எமக்காக ஏழையானவரே இயேசுவே! எங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பயன்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் நல்ல மனதைத் தரும். அதன் வழியாக உம் வான்வீட்டில்  இடம்பெற்று உமது அன்பு என்ற செல்வத்தைப் பெற்றுக்கொள்ளும் வரத்தைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்