செவிகளைத் திறப்போம்- வாழ்வு தரும் வார்த்தைக்கு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
13 பிப்ரவரி 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் –வெள்ளி
1 அரசர் 11: 29-32; 12: 19
மாற்கு 7: 31-37
செவிகளைத் திறப்போம்- வாழ்வு தரும் வார்த்தைக்கு!
முதல் வாசகம்.
இந்தப் பகுதி சாலமோனுக்கு அடுத்ததாக நிகழ்ந்த இஸ்ரயேலின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வைக் விவரிக்கிறது. சாலமோன் அரசவையில் அதிகாரியாக இருந்த எரொபவாம் எருசலேமை விட்டு வெளியேறும்போது, அகியா எனும் இறைவாக்கினர் அவரை வயலில் தனியாக சந்திக்கிறார்.
அகியா அவர் அணிந்தருந்த புதிய அங்கியைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழிக்கிறார். அவர் எரொபவாமிடம் பத்து துண்டுகளைக் கொடுத்து, கடவுள் சாலமோனிடமிருந்து அரசை ப் பிரித்து இஸ்ரயேலின் பத்து கோத்திரங்களின் மீது உனக்கு ஆட்சியைக் கொடுப்பார் என்று கூறுகிறார்.
என் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேம் நகரை முன்னிட்டும் ஒரு குலம் மட்டும் (யூதா) அவன் கையில் இருக்கும் என்று தெரியப்படுத்துகிறார். இதன்பின் ஒன்றுபட்ட இஸ்ரயேல் கி.மு. 932-ல் வட நாடு மற்றும் தென்னாடு என் இரண்டாகப் பிரிய காரணமாக அமைந்தது.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில், கலிலேயா கடலோரப் பகுதியில் காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவருக்கு இயேசு குணமளிக்கிறார். 'எப்பத்தா' ('திறக்கப்படு') என்றவுடன் அவருடைய காதுகள் திறக்கப்பட்டதோடு, அவரது நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இவருடைய குரலைக் கேட்டவர்களும் திக்கிப் பேசியவர் சரளமாகப் பேசுவதையும் கேட்டவர்கள் வியந்தனர். 'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்!' என்று இயேசுவைப் பாராட்டினர்.
ஆனால், இயேசுவோ, இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள் என்று, மாற்கு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இயேசு வெறுமனே எட்டியிருந்து குணப்படுத்துவதில்லை; அவர் அந்த மனிதனைத் தொட்டு, அவர்மீது தனிப்பட்ட அக்கறையைக் காட்டுகிறார்.
வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, “எப்பத்தா” அதாவது ‘திறக்கப்படு’ மூலம் என்பதன் மூலம் இந்த குணப்படுத்துதல் தந்தையுடனான அவரது நெருங்கிய உறவிலிருந்து வருகிறது என்பதைக் காட்டுகிறார்.
இங்கே, எப்பத்தா என்ற வார்த்தை உடல் ரீதியான குணப்படுத்துதலுக்கு மேலாக ஒன்றை வெளிப்படுத்துகிறது. ஆம், அது கடவுள் நம் இதயங்களையும் மனதையும் திறந்து, அவரைக் கேட்கவும், அவருடைய படிப்பினையைப் பேசவும் விரும்புவதைக் குறிக்கிறது.
முதல் வாசகத்தில் கடவுளால் அரசராக அருள்பொழிவு ச் செய்யப்பட்ட சாலமோன் அவரது படிப்பினைகளுக்குச் செவிசாயக்கவில்லை. உண்மை கடவுளைப் புறக்கணித்து, அன்னிய தெய்வங்களை நாடினான், வழிபட்டான். ஆன்மீகத்தில் தடம்புறண்டான். எனவே, அவது நாடு உடைப்பட்டது.
நற்செய்தியில், மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று இயேசு மக்களிடம் கேட்டிருந்தாலும், அவர்களின் ஆச்சரியமும் சாட்சியமும் ஊர் முழுவதும் பரவியது. கடவுள் நம் வாழ்வில் செயல்படும்போது, நாம் சாட்சிகளாக அழைக்கப்படுகிறோம் என்பதை இது காட்டுகிறது. கேட்க செவியுள்ளவன் கேட்க வேண்டும். அதற்காகவே, நமது காதுகளுக்குக் கேட்கும் புலனை கடவுள் தந்துள்ளார்.
இயேசு புறவினத்தாரிடையே பணி செய்ய அவர்களது ஊர்களுக்குச் செல்கிறார். யூதர்களைப் பொருத்தமட்டில் புறவினத்தார் விருத்தசேதனம் செய்யாதவர்கள். எனவே, சடங்கு ரீதியாக அசுத்தமானவர்கள், இஸ்ரேலின் உடன்படிக்கை சமூகத்திற்கு வெளியே உள்ளவர்கள். இருப்பினும், இயேசு தீர், சீதோன் மற்றும் தெக்கப்போலி போன்ற புறவினத்தார் பகுதிகளுக்குச் சென்றார். இது அவரது துணிவைக் காட்டுகிறது. அவர்கள் இயேசுவை வரவேற்றனர்.
கடவுளின் வார்த்தையைக் கேட்க நம் ஆன்மீகக் காதுகள் திறந்திருக்கிறதா? அன்பு, இரக்கம் மற்றும் உண்மையைப் பற்றிப் பேச நம் நாக்கு சுதந்திரமாக இருக்கிறதா? என்று சிந்திக்க இன்று அழைக்கப்படுகிறோம்.
இறைவேண்டல்.
என் ஆண்டவரே, நான் சந்திக்கும் அனைவருக்கும் உமது நற்செய்தியின் கருவியாக இருக்க எனக்கு துணிவையும் ஞானத்தையும் அருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452