இருக்கின்ற இடங்களில் நற்செய்தியை அறிவிப்போமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-மூன்றாம் புதன்
I: திப:8: 1-8
II: திபா :66: 1-3. 4-5. 6-7
III:யோவான் :6: 35-40
உயிர்த்த ஆண்டவர் இயேசு தான் விண்ணேற்றம் அடையும் முன்பு சீடர்களுக்கு அளித்த கட்டளை "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" என்பதே.சீடர்கள் இயேசுவின் கட்டளையை நிறைவேற்றனர். ஆனால் அப்பணி சீடர்களோடு மட்டும் முடியவில்லை. அவர்கள் வழியாக இயேசுவை ஏற்றுக்கொண்டு நம்பியவர்களால் அப்பணி தொடரப்பட்டது. அதனால்தான் உலகமெங்கும் இன்றும் கிறிஸ்தவ மறை சிறந்து விளங்குகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் இச்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது. ஸ்தேவானின் இறப்புக்குப்பின், சவுல் கிறிஸ்தவர்களைத் தாக்க கிறிஸ்தவர்கள் சிதறுண்டு போயினர்.சிதறுண்டு போனவர்கள் பயந்து நடுங்கிக்கொண்டு அடைபட்டுக் கிடக்கவில்லை. மாறாக அவர்கள் இருந்த இடங்களிலெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றினர். அவர்கள் மூலம் விதைக்கப்பட்ட நம்பிக்கை விதை பலன் கொடுக்க ஆரம்பித்தது.
திருமுழுக்குப் பெற்றுள்ள கிறிஸ்தவர்களாகிய நாமும் இப்பணியைச் செய்ய பணிக்கப்பட்டுள்ளோம். நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்குக் கேடு என பவுலடியார் கூறியதைப் போல நற்செய்தியை அறிவிப்பது நமது தலையாய கடமை. இக்கடமையை எந்த அளவுக்கு நான் செய்கிறேன் என ஒவ்வொருவரும் சுய ஆய்வு செய்ய வேண்டும். ஊர் ஊராகச் சென்று நற்செய்தியைப் போதிக்காவிட்டாலும் குடும்பத்தில், நண்பர்கள் மத்தியில்,அண்டை அயலார் நடுவில்,பணி செய்யும் இடங்களில், பிற சமயத்தைத் தழுவும் சகோதரர்கள் மத்தியில் என்னுடைய உடனிருப்பால், வாழ்வால், என்னுள் இருக்கும் இயேசுவை நான் பிறருக்கு வழங்குகிறேனா? என சிந்திக்க வேண்டும்.
நற்செய்தியில் இயேசு தன்னிடமும் தன்னை அனுப்பிய தந்தையிடமும் நம்பிக்கை கொள்ள அழைப்புவிடுக்கிறார்.நம்பிய அனைவருக்கும் நிலைவாழ்வை வாக்களிக்கிறார். அந்த நம்பிக்கையில் நாம் வளரவும் மற்றவர்களுக்கும் நற்செய்தியை வழங்கி இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளச் செய்யவும் தேவையான வரம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே நாங்கள் நம்பிக்கையில் வளர்ந்து எங்கள் வாழ்வின் மூலம் நாங்கள் இருக்கின்ற இடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றவும் அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Daily Program
