சென்னை புனித அன்னாள் சபை: ஆன்மீக வளர்ச்சி... ஆளுமையின் முதிர்ச்சி... | Veritas Tamil

 சென்னை புனித அன்னாள் சபை நடத்திய ஆண்டு தியானம் 

      ஆன்மீக வளர்ச்சி... ஆளுமையின் முதிர்ச்சி...

                 "நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்"

 அக்டோபர்  மாதம்  17 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை சென்னை புனித அன்னாள் சபையைச் சார்ந்த 38 அருட்சகோதரிகள்  தங்களின் ஆண்டு தியானத்தில்  கலந்துக் கொண்டார்கள்.  அருட்தந்தை M.A. Joe சே.ச. அவர்கள் ஆண்டு தியானத்தை வழிநடத்தினார்.

நான் யார்? என்ற கேள்விக்கு...

"நான் கடவுளின் அன்பான மகள். என்னை குறித்து கடவுள் பூரிப்படைகிறார்". என்னும் ஆணித்தரமான உண்மையை ஏற்றுக்கொள்ள அழைக்கப்பட்டோம்.

கடவுளால் அன்பு செய்யப்பட்ட என்னை...

1.அவர் தேர்ந்தெடுக்கிறார் - எவ்வாறு?

என்னில் உள்ள தனித்துவத்தை கண்டு, என்னால் மட்டுமே இதை செய்ய முடியும் என்னும் நம்பிக்கையில், தனக்குரியவளாக மாற்றிக் கொள்கிறார்.

2.அவர் ஆசீர்வதிக்கிறார் - எதற்காக?

சாபங்கள் நீங்கப்பெற்று, நான் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்று, அனைவருக்கும் ஆசீரை வழங்கிட

அவர் உடைக்கிறார் - ஏன்?

நான் புதுப்படைப்பாக மாற, புதிய பாதையில் மீட்பின் பாதையில் பயணிக்க.

அவர் கொடுக்கிறார் - யாருக்கு?

இறைவனால் மிகவும் தனித்தன்மையோடு அன்பு செய்யப்பட்ட நான், பிறர்வாழ்வு பெற என்னையே முழுவமும் கொடுக்க கற்றுத்தருகிறார். முகம் மலர்ந்து, மனம் மகிழ்ந்து,அகம் குளிர்ந்து கொடுக்க.
 

நமது பார்வை - எப்படி இருக்க வேண்டும்?

அனைத்தையும் கடவுள் பார்ப்பது போல் பார்த்தால், உலகம் அழகாய் இருக்கும்.

இவ்வாறு, எதற்கு? ஏன்? யாருக்கு? எவ்வாறு? என்னும் கேள்விகளுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில், புதிய செடியாய் துளிர்விட்ட பொழுதுதான் தெரிந்தது நான் மட்டும் கடவுளின் பிள்ளை அல்ல, மாறாக என்னோடு வாழ்பவர்களும், நான் வாழும் சமூகம் என்னும் பெரிய குடும்பமும், கடவுளின் அன்பு பிள்ளைகள் என்று. இத்தோடு நிறைவடைய வில்லை ஆண்டு தியானத்தின் அற்புத நாட்கள். நம்முடைய மனவெழுச்சிகளை முறையாக கையாண்டு முழுவளர்ச்சி பெற்று, மனதை பக்குவபடுத்தி, மனித மாண்போடு வாழவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கோபத்தை நேர்த்தியான முறையில் கையாண்டு, அனைவரும் கடவுளின் குழந்தைகள் என மதித்து, ஆத்மார்ந்தமான செவிமடுத்தல் மூலம், நாம் பெற்ற கொடைகளை தாராள உள்ளத்தோடு பகிர்ந்து, ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் சிறப்புச் செய்ய ஆசீர் பெற்றோம். வாழ்வின் விழுமியங்களை விலை பேசாமல், எப்போதும் இரக்கம் நிறைந்த அன்பும், முறிவு பெறாத உறவும், உண்மையான மகிழ்ச்சி, இறைநம்பிக்கையோடு காலங்களை கருத்தாய் கழித்திட வரங்கள் பெற்றோம். கொடுத்து கொடுத்து வறியவர் ஆகியோர் எவருமில்லை. எனவே வாழும் வரை நல்லதை செய்ய, நல்லதை கொடுக்க, நல்லவற்றை பேச கற்றுக்கொண்டே இருப்போம்.

 

நிறைவு நாள் திருப்பலியின் போது சென்னை மாநில தலைமை அன்னை அருட்சகோதரி ஸ்ரீமா அவர்கள் அருட்சகோதரிகளோடு இணைந்நுது செபித்தார்கள். அனைத்து சகோதரிகளும் தங்களின் துறவற வார்த்தைப்பாடுகளை புதுபித்து இறைவனுக்கு நன்றிகூறினார்கள்.


வாழும் வரை போராடு, சாகும் வரை கொடுத்துக் கொண்டே இரு... கடவுள் உனக்கு வான் வீட்டில் நிறைய மகிழ்ச்சியை அள்ளி அள்ளி வழங்குவார்.