இறைவன் என்னை அழைத்ததன் நோக்கம் என்ன? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின் இரண்டாம் வெள்ளி 
I: எபி: 8: 6-13
II: திபா: 85: 7,9. 10-11. 12-13
III: மாற்: 3: 13-19

தாயின் கருவில் உருவாகும் முன்பே நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் என்பது இறைவன் எரேமியா இறைவாக்கினருக்கு அளித்த அழைப்பு. இவ்வழைப்பு நம்மில் பலருடைய வாழ்க்கைக்கு உரமூட்டுவதாகவும் நம் அழைத்தல் வாழ்வை திடப்படுத்துவதாகவும் அமைகிறது என்றால் அது மிகையாகாது. திருமுழுக்கு பெற்ற நாம் அனைவருமே அழைக்கப்பட்டவர்களே. பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் தன் மக்களை விடுதலையாக்க நீதித்தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் அரசர்களையும் அழைத்தார். புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் இயேசு தம் பணியைத்தொடர திருத்தூதர்ளை அழைத்தார். அதே வரிசையில் நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வழைப்பின் நோக்கம் இன்றைய நற்செய்தியில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவதாக "தம்மோடு இருக்க" . கடவுளோடு இணைந்திருப்பது என்பது அவரோடு செபத்தில் இணைந்திருப்பதைக் குறிக்கிறது. அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பதைக் குறிக்கிறது. இது நம்மை செப வாழ்விற்கு அழைக்கிறது.

இரண்டாவதாக "அனுப்பப்படுதல்" .கடவுளோடு செபத்தில் இணைந்தால் மட்டும் போதாது. மாறாக அவரோடு உள்ள உறவை பணிவாழ்வின் மூலம் பிறருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். 

இருத்தலும் அனுப்பப்படுதலும் அதாவது செபவாழ்வும் பணிவாழ்வும் இணைந்து இருப்பதே கடவுள் நம்மை அழைத்ததன் நோக்கம். நாம் எல்லாருமே இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளோடு செபவாழ்வில்  இணைந்து இருந்து அவருடைய பணியை நாம் செய்ய வேண்டும். இது குருக்கள் துறவியருக்கு மட்டும் தரப்பட்டுள்ள அழைப்பல்ல. கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்குமான அழைப்பு. செபவாழ்வும் பணிவாழ்வும் நம் அழைத்தலின் இருதூண்கள் என உணர்ந்து அழைத்தலுக்கேற்ற வாழ்வு வாழ முயலுவோம்.

 இறைவேண்டல் 
பெயர்சொல்லி அழைத்தவரே இறைவா நாங்கள் உம்மோடு இருந்து அவ்வனுபவத்தை பிறருக்கு பறைசாற்ற அனுப்பப்பட்டவர்கள் என உணர்ந்து வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்