நாம் இறை விருப்பத்தை நிறைவேற்றுவதில் நமது மனநிலை என்ன? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருவருகை காலம்-மூன்றாம் வாரம் செவ்வாய்
I: செப்: 3: 1-2,9-13
II: திபா: 34: 1-2. 5-6. 16-17. 18,22
III: மத்: 21: 28-32
இறை விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது சற்றே கடினமான காரியம்தான். ஆனால் நிச்சயம் இயலாத காரியமல்ல. ஆனால் அதை நிறைவேற்ற நாம் கொண்டிருக்கும் மனநிலை என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அன்று விடுமுறை தினம். வீட்டில் இருந்த தன் மகனிடம் அம்மா கடைக்குச் சென்று பொருட்களை வாங்கச் சொன்னார். அதற்கு அந்த மகன் "அம்மா உங்களுக்கு வேலையில்லை இல்லை. விடுமுறை தினத்தில் என்னை சும்மா விடமாட்டீர்கள்" என்று எரிச்சலுடன் கூறிவிட்டு கடைக்குப் போனான். சிறிது நேரம் கழித்து அத்தாய் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு சாப்பிட அழைத்தார். சாப்பாடு பரிமாறும் போது தன் மகனை மிகுந்த பாசத்தோடு கவனித்துக் கொண்டார். இதைக் கண்ட கணவர் அவரிடம் "நீ ஒரு வேலை சொன்னால் உன் மகன் கோபப் படுகிறான். ஆனால் அவனுக்கு நீ ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் "கோபப் பட்டாலும் எரிச்சலுடன் நான் சொன்ன வேலையைச் செய்தாலும், சொன்னதை என் மகன் செய்துவிடுகிறான் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
இன்று நாம் நற்செய்தியில் காணக்கூடிய உவமை மேற்கூரிய நிகழ்வை ஒத்ததாகவும் நமது மனநிலையைச் சரிபார்க்க உதவுவதாகவும் உள்ளது. தந்தை கூறியதை செய்ய மறுத்த மூத்தமகன் தன் மனதை மாற்றிக்கொண்டு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார். இம்மூத்தமகன் யூத சமூகத்தில் பாவிகள் என்று ஒதுக்கப்பட்டிருந்த வரிதண்டுவோர் மற்றும் விலைமாதருடன் ஒப்பிடப்படுகிறார். அவர்கள் கடவுளின் வழியைவிட்டு விலகி இருந்தாலும் நற்செய்தி நம்பி மனமாற்றத்தில் வாழ முயற்சி செய்தார்கள். திருமுழுக்கு யோவனை ஏற்றுக்கொண்டது இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
உம் விருப்பத்தை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அதை வெறும் வார்த்தையோடு மட்டும் நிறுத்திக்கொண்ட இளைய மகன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத இனத்தவரோடு அதிலும் குறிப்பாக கட்டளைகளையும் சட்டங்களையும் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு கடவுளின் உண்மையான விருப்பத்தை அறிந்து செயல்படாத பரிசேயர், மறைநூல் அறிஞர் ஆகியோரோடு ஒப்பிடப்படுகிறார். யோவானையும் அவருடைய போதனைகளையும் ஏற்று மனமாறாத் தன்மை இரண்டாம் மகனுக்குரிய மனநிலையை எடுத்துரைக்கிறது.
நாம் வாழ்கின்ற சமூகத்தில் நாம் பலரை நல்லவர்கள் என்றும் பலரைக் கெட்டவர்கள் என்றும் தீர்ப்பிடுகிறோம். பல சமயங்களில் நாம்தான் நல்லவர்கள் எனவும், கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு நடக்கிறோம் எனவும் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் கெட்டவர்கள் என்று நாம் தீர்ப்பிட்டு ஒதுக்கியவருடைய வாழ்வோடு நம் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் அவர்கள் நம்மைவிடச் சிறந்தோராகவும், கடவுளின் திட்டத்தை மனமாற மறைவாக நிறைவேற்றுபவர்களுமாக இருப்பார்கள். நாம் தினமும் ஜெபிப்பதாலும், இறைவார்த்தை வாசிப்பதாலும், திருப்பலியில் பங்கேற்பதாலும் கடவுளின் பிள்ளைகளாகிவிட முடியாது. பல வேளைகளில் இறைவிருப்பம் நமக்கு மிகக் கடினமாக இருந்தாலும், நமக்கு பிடிக்வே இல்லை என்றாலும் கடவுளின் மனதை மகிழ்விக்க அதை ஏற்றுக்கொண்டு செயல்பட முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் எளிய மனத்தவராய் இருக்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் இறையளிக்கும் ஆறுதலான வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். இறுமாப்பு கொண்டவர்களாய் இல்லாமல் எளிய மனத்தவராய் வாழ்ந்து ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதே அவருடைய திருவுளம். அதை நிறைவேற்ற ஏதுவான மனநிலையை நமக்கு ஆண்டவர்தாமே வழங்க வேண்டும் என மன்றாடுவோம். ஏனெனில் எளியவர்களின் குரலை இறைவன் கேட்பார்.
இறைவேண்டல்
கடவுளே எங்கள் தந்தையே!உமது திருவுளத்தை பெயரளவில் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் செயலளவில் ஏற்றுக்கொண்டு உம்மை மகிழ்விக்கும் எளிய பிள்ளைகளாக எம்மை மாற்றும் ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்