துணையென்று இருந்தால்...| Veritas Tamil
சென்னைக்கு புறப்படும் பேருந்துக்காக பெஞ்சில் அமர்ந்து காத்திருந்த ஒரு பெரியவரின் பார்வை பிச்சையெடுத்துக் கொண்டி ருந்த பார்வையற்ற மனிதர் ஒருவர்மீது பதிந்தது. 'நன்றாகக் கண் தெரிந்தவனே நல்லபடி வாழ முடியாத உலகம் இது. பார்வையே இல்லாமல் வாழ்வது எவ்வளவு பெரிய சவால்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அந்தப் பெரியவர்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்தக் குருட்டுப் பிச்சைக்காரர் தன் கையில் வைத்திருந்த தடியை தரையில் ஊன்றி தடம் தேடி நடந்து பிச்சை யெடுத்துக் கொண்டிருந்தார். பெரியவரை அவர் நெருங்கும் வேளை, தன்னை யாரோ அழைப்பது போலிருக்க அவர் நின்றார். கால் நொண்டியபடி நடந்து வந்த வாலிபன் ஒருவன் பார்வையற்ற வரை நோக்கி "என்ன வீரண்ணே, நான் உன்னை அந்தப் பக்கம் தேடிக் கொண்டிருந்தேன். நீ தனியா இந்தப் பக்கம் வந்திருக்கே?" என்றான்.
கொஞ்ச நேரம் உனக்காகக் காத்திருந்தேன்,நீ அந்தப் பக்கத்தில் தொழிலில் இருக்கிறாய் என்றெண்ணிதான் இங்கே வந்துவிட்டேன்" என்றார் பார்வையற்றவர்.
இப்போது அந்தக் குருடரை முடவனான அந்த இளைஞன் வழிநடத்தியபடி பிச்சைக் கேட்பதை பெரியவர் கவனிக்கலானார். இருவரையும் பார்க்கும்போது அவருக்கு மிகுந்த இரக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவருமே அவர் இருந்த பெஞ்சை நோக்கி வந்தனர்.
ஒருவருக்கொருவர் பிச்சை எடுப்பதில்கூட எவ்வளவு உதவியாக இருக்கிறார்கள் என்று எண்ணிய பெரியவர், தன் மேல் சட்டைப் பையிலிருந்து இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். தர்மமாக இருபது ரூபாய் நோட்டு என்றவுடன் அதைக் கண்ட முடவனின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
"ஐயா இருபது ரூபாய் நோட்டு கொடுத்திருக்கிறார்" என்றான் பார்வையற்றவரிடம்.
"நீங்க நல்லா இருக்கணும்” என்று வாழ்த்திய குருடர் "இந்தக் காலத்தில் பத்து ரூபா நோட்டு கூட எப்போதாவதுதான் எங்களுக்குக் கிடைக்கும். மற்றபடி எல்லாம் சில்லறை தான்" என்றார்.
அக்குருடர் சொல்வதைப் புரிந்து கொண்டவராக பெரியவர் புன்னகைத்தபோது உடனிருந்த முடவன் "ஐயா, வீரண்ணனுக்குச் சின்ன வயசில் கண் தெரியும். வளர்ந்தப்போ பெரியம்மை பாதிப்பால் இரண்டு கண்ணிலும் பார்வை போச்சு. நானும் பத்து வயசுவரை நல்லாத்தான் நடந்தேன், ஓடியாடுவேன். போலியோ நோயால் ஜூரம் வந்து படுத்து எழுந்த போது நடக்க முடியாமல் போச்சு. ஊனமுற்றவர்களை வீட்டில் யாரும் கவனிக்கத் தயாராயில்லை.வேறு வேறு ஊர்களிலிருந்து இங்கே வந்து இரண்டு பேரும் சேர்ந்திருக்கோம். ஒருத்தருக்கொருத்தர் துணையாய் இருக்கோம்" என்றான்.
எதற்காக இவன் தன்னிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறான் என்று அப்பெரியவருக்குப் புரியவில்லை. இருந்தாலும் தங்கள் கவலைகளை யாராவது காது கொடுத்துக் கேட்பார்களா என்று எதிர்பார்ப்பவர்கள் உலகத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று நினைத்தபோது, அந்த இரு பிச்சைக்காரர்கள் மீது அவருக்குப் பரிதாபமே வந்தது.
வாழ்க்கை ஒரு நெடிய பயணம். முடியாதவர்கள், பார்க்க முடியாதவர்கள், பேச நடக்க முடியாதவர்கள், கேட்க முடியாதவர்கள் என இயலாதவர்களும் இந்தப் பயணத்தில் கலந்திருந் தாலும், வாழ்வின் பாதையை எல்லோருமே கடந்துதான் போக வேண்டும் என்பதுதான் உலக நியதி. இன்பமோ - துன்பமோ, இலாபமோ- நஷ்டமோ, இணைப்போ-இழப்போ இதில் இயன்றவர்கள்-இயலாதவர்கள் என எல்லோருமே இவற்றைக் கடக்க வேண்டியது கட்டாயம். இவற்றையெல்லாம் உறவுகளோடு கடந்து விடலாம், இதில் உறவுகளற்ற அனாதைகளுக்கும், ஊனமுற்றவர்களுக்குமே பிரச்சனை.
இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த பெரியவரை 'அப்பா...' என்றழைத்தபடி அவர் தோளைத் தொட்டான் அவர் மகன். பெரியவர் திரும்பிப் பார்த்தார். அவன் தன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டியபடி "எல்லாக் கடைகளிலும் ரொம்பக் குளிர்ச்சியாகத்தான் வச்சிருந்தாங்க. கூலிங் இல்லாத தண்ணீர் வாங்கத்தான் கொஞ்சம் தாமதமாயிடுச்சு" என்றவன், "என்னப்பா இது? நாம் ஊரிலிருந்து பஸ்ஸில் வரும்போது என்னிடம் கொடுத்ததை கேட்காமல் விட்டுட்டீங்களே" என்றவனே, தன் சட்டைப் பையிலிருந்து அவருடைய காது கேட்கும் கருவியை (ஹியரிங் எய்ட்) அவரிடம் கொடுத்தான். அவரும் அதை தன் காதில் பொருத்திக் கொண்டார்.
இந்தக் காட்சியை தற்செயலாகப் பார்த்த நொண்டிப் பிச்சைக்காரன் இலேசான திகைப் போடு "வீரண்ணே, நமக்கு இருபது ரூபா கொடுத்தாரே பெரியவர், அவருக்குக் காது கேட்காது போல. அவருடைய மகன்னு நினைக்கி றேன், இப்பதான் அவரிடம் காது கேட்கும் மெஷினைக் கொடுத்தான். அப்ப நான் சொன்ன கதையெல்லாம் அவருக்குக் கேட்டே இருக்காதே! பரவாயில்ல, நாம் கண்ணிருந்தும் குருடர்களை, காதிருந்தும் கேட்காதவர்களை நிறையப் பார்த்திருக்கிறோம். பெரியவருக்குக் காது இல்லாதிருந்தும் நான் சொன்னதைக் கேட்டார். ஏதோ நம் மனக்குறையை மற்றவர்களுக்குச் சொல்வதுபோல இவரிடமும் சொன்னதாக வைத்துக்கொள்வோம். உலகத்தில் காதிருந்தும் கேட்காதவர்கள்தானே அதிகம்” என்று முடித்தான்.
அவன் பார்வை தூரத்தே தன் உறவினால் பரிவோடு அழைத்துச் செல்லப்படும் பெரியவரை நோக்கின.
'திக்கற்றவர்களுக்கும் மனித வடிவில் தெய்வமே துணை நிற்கிறது' என்று எண்ணிப் பெருமூச்சுவிட்ட அந்த முடவன், இலேசாகக் கனத்த மனத்துடன் உடன் வரும் பார்வையற்ற வரை நோக்கினான். அந்தப் பார்வையற்றவரோ செவிவழிச் செய்திகள் தவிர, கண்வழி நிகழ்வுகளுக்கும், தனக்கும் தொடர்பே இல்லாதவராக தன் நிகழ்கால உறவான கால் ஊனமுற்றவனின் துணையோடு அந்தப் பகுதியைக் கடந்து கொண்டிருந்தார்.
எழுத்து: ரோனா ஆல்பர்ட்
இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.