இரக்கமில்லா தீர்ப்பு அன்பின்மையின் வெளிப்பாடு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

23 மார்ச் 2026

தவக்காலம் 5ஆம் வாரம் –திங்கள்
தானி (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62                                                                                                            யோவான் 8: 1-11

இரக்கமில்லா தீர்ப்பு அன்பின்மையின் வெளிப்பாடு!

முதல் வாசகம.

முதல் வாசகம் என்பது சூசன்னாவின் கதை. அவள் பாபிலோனுக்கு  நாடுகடத்தப்பட்ட ஓர் அழகான  யூதப் பெண். அவளுடைய கணவர் யோவாக்கிம். இவர் யூத சமூகத்தில் மதிப்புக்குரியவர், செல்வந்தர்.  அக்கலத்தில் நடுவராக நியமிக்கப்பட்டிருந்த இரு முதியவர், யோவாக்கிம் தோட்டத்திற்கு வந்தபோது சூசன்னாவைப் பார்த்து அவள் மீது காமவேட்கை கொண்டனர். 
ஒருநாள் சூசன்னா தோட்டத்திற்கு வந்து குளிக்கச் சென்றாள். யாரும் இல்லாத நேரத்தில் இரு முதியவரும் அங்கு வந்து அவளைத் தங்களோடு படுக்குமாறு கட்டாயப்படுத்தினர். அவள் மறுத்து, ‘ ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதை விட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக்கொள்வதே மேல்” என்றார். அவள் சத்தம் போடவே, இரு முதியவரும் அதிகமாகக் கூச்சலிட்டு, சூசன்னா மீது பழியைப் போட்டனர். மறு நாள் யோவாக்கிம் வீட்டில் விசாரனை நடந்தது. அப்போது, சூசன்னா தோட்டத்தில் இரு இளைஞர்களோடு படுத்திருந்ததாகவும்,  தங்களைக் கண்டதும் அவன் ஓடிவிட்டதாகவும் இரு முதியவரும் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டனர்.  
அதை நம்பிய மக்கள், சூசன்னாவுக்கு மரண தண்டனை தீர்ப்பிட்டு, கொலை களத்தற்கு இழுத்துச் சென்றனர்.  ஆனால், சூசன்னாவோ கடவுளிடம் மன்றாடிக்கொண்டருந்தார்.  கடவுள்   அக்கூட்டத்தில் இருந்த தானியேல் என்றவரைத் தூண்டிவிடவே, அவர் மக்களின் தீர்ப்பு தவறானது என்றும் மறுவிசாரனை வேண்டும் என்றும் கூறினார். தானியேல் இரு முதியவரையும் தனித்தனியே விசாரித்தார். ‘நீர் எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்” என்று கேட்டார்.    ஒருவர் “விளா மரத்தடியில்” என்றார். மற்றொருவர் “கருவாலி மரத்தடியில்” என்றார். அவர்கள் பொய்யர் என்ற மக்கள் அறிந்து கொண்டனர். மக்கள் சூசன்னாவுக்கு அளித்தத் தீர்ப்பை அவர்களுக்கே அளித்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.   இதைக் கேட்டதும், பரிசேயர், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது” என்றனர்.   

நற்சசெய்தி.

 இன்றைய நற்செய்தியில், இயேசு ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது, மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை கொண்டு வந்தார்கள். “மோசேயின் சட்டப்படி இப்படிப்பட்டவர்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்?” என்று இயேசுவைக் கேட்டு  சோதித்தார்கள்.

இயேசு முதலில் எதுவும் பேசாமல் தரையில் ஏதோ  எழுதினார். பின்னர்,
“உங்களில் பாவமில்லாதவர் முதலில் கல்லெறியட்டும்” என்று சொன்னார். இதைக் கேட்டவர்கள், தங்களது மனசாட்சியால் குற்றமுணர்ந்து, முதலில் மூத்தவர்கள் தொடங்கி அனைவரும் விலகிச் சென்றார்கள். அடுத்து,  இயேசு அந்த பெண்ணிடம் ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்று அமைதியாக அனுப்பிவைத்தார் என்று யோவான் பதிவு செய்துள்ளார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில் பொய் குற்றம் சாட்டப்பட்ட  சூசன்னா கடவுளால் காப்பாற்றபட்டாள். அவளது உண்மையான நம்பிக்கை வாழ்வு அவளுக்கு துணைபுரிந்தது.  நற்செய்தியில், விபச்சாரத்தில்  கையும் களவுமாகப் பிடிப்பட்டவளை எப்படி காப்பாற்றுவது? மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிட்டார்கள். அவளால் தப்பிக்க இயலாது. கல்லெறிந்து கொல்ல கற்களோடு நிற்கிறார்கள். 

மனமாறுவோருக்கு கடவுளின் தயவு கண்டிப்பாகக் கிட்டும். அங்கிருந்த இயேசுவோ பாவத்தை ஏற்கவில்லை, ஆனால் பாவியை அன்பு செய்தார். இந்தப் பாவங்கள் குறித்த இயேசுவின் அணுகுமுறை, பழைய ஏற்பாட்டுச் சட்டங்களுக்கு முற்றிலும் முரணாகத் தோன்றுகிறது; விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் அவர் காட்டிய இரக்கமே இதற்குச் சான்றாகும்.

அவர் இரக்கத்தையும் மன்னிப்பையும் வழங்குவதன் மூலம் நீதியை, மனிதநேயத்தை முதன்மைபடுத்துகிறார்.   அதே நேரத்தில் பாவியை மனமாற்றத்திற்கும் மனந்திரும்புதலுக்கும் அழைக்கிறார். இதுவே மோசேயின் சட்டத்தின் ஆழமான நோக்கமாகும்—வெறும் தண்டனை அல்ல, மாறாக இதயத்தை கடவுளை நோக்கி மாற்றுவதே ஆகும். பரிசேயர்களும் மறைநூல் அறிஞரும் தங்களைப் பரிசோதித்துப் பார்த்தனர். உண்மை அவர்களை உறுத்தியது. அவர்கள் அப்பெண் மேல் கல்லெறிய யோக்கியவான்கள் அல்ல என்று உணரந்து மறைந்தனர். 

இயேசு அவர்களைத் திட்டவில்லை, அவர்களோடு அப்பெண்ணுக்காக வாதாடவுமில்லை. உண்மை உரைத்தார், அதுவே அப்பெண்ணை விடுவித்தது. 

இன்றைய நற்செய்தியில் வரும் அந்த ஏழைப் பெண்ணின் பாவ நிலையை வாசித்து விட்டு, திருவிவிலியத்தை மூடி வைப்பதில் பயனில்லை.  நாம் அவளை நமக்குள் காண வேண்டும்—மேலும் ஒவ்வொருவரையும் அவளுக்குள் காண வேண்டும். நாம் அனைவரும் ஏதோ சிலவகை பாவங்களைச் செய்த குற்றவாளிகளே, ஆனால் இயேசுவோ, தமது இரக்கத்தினால், அந்தத் தண்டனையைத் தாமே ஏற்றுக்கொண்டார். அவர் அவற்றைச் சுமக்க திருவுளமானார், சுமந்தார். 

“இனி பாவம் செய்யாதே” என்பது வாழ்க்கையை மாற்றும் அழைப்பு. இயேசு நம்மை தண்டிக்க வரவில்லை; நம்மை மாற்றவும் மீட்கவும் வந்தார். அவர் நமக்கு இரக்கத்தையும் புதிய வாழ்க்கையையும் தருகிறார். அவரது தயவு என்றும் நமக்குண்டு. மற்றவர்களையும் அதே இரக்கத்துடனும் மனிதநேயத்துடனும்  நடத்துமாறு அவர் நம்மை அழைக்கிறார்.

நிறைவாக, கடவுளின் இரக்கம் மற்றும் தயவு என்பது பாவத்தைத் தொடர்வதற்கான அனுமதியல்ல, மாறாக மனந்திரும்பி ஒரு புதிய வாழ்க்கையை வாழ்வதற்கான அழைப்பாகும். நம்மையே நாம் அறிய முற்பட வேண்டும். 

இறைவேண்டல்.

‘உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்காதீர்’ என்று அறிவுறுத்திய ஆண்டவரே, உமது அருளால், உமது அன்பையும் நீதியையும்  பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழ எனக்கு உதவுவீராக. ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452