நம்மை பசும்புல் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்பவர் இயேசு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பாஸ்கா4-ம் வாரம் – திங்கள்
தி.பணிகள் 11: 1-18
யோவான் 10: 11-18
நம்மை பசும்புல் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்பவர் இயேசு!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம், புனித பேதுரு புறவினத்தார் வீட்டிற்குள் நுழைந்து அவர்களுடன் உணவருந்தியதை விவரிக்கிறது. இவ்வாசகத்தில் பிற இனத்தார்மீதும் தூய ஆவியார் பொழியப்பட்டதைக் குறித்து வாசிக்கின்றோம். ஒரு காலத்தில் யூதருக்கு மட்டுமே மீட்பு உண்டு என்று நினைத்திருந்த பேதுரு, பிற இனத்தார் மீது தூய ஆவியார் பொழியப்பட்டதைக் கண்டு, அவர்களுக்கும் மீட்பு என நம்பத் தொடங்குகின்றார். கடவுள் யூதர்மீது மட்டுமல்லாமல், பிற இனத்தார்மீதும் தூய ஆவியாரைப் பொழிந்ததன் மூலம் எல்லாரும் அவரது மக்கள்; அவர்கள் மீட்புப் பெற இயேசுவின் வழியாக வர வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றார். இது வரை, அனைத்து கிறிஸ்தவர்களும் யூதர்களாகவோ அல்லது யூத மதத்திற்கு மாறியவர்களாகவோ இருந்தனர்.
பேதுரு தனக்குக் கிடைத்த ஒரு இறைவெளிப்பாட்டையும், ஒரு புறவினத்தாருக்குக் கிடைத்த மற்றொரு வெளிப்பாட்டையும் விவரிப்பதன் மூலம் தனது செயலை நியாயப்படுத்துகிறார். இது மூன்றாவது "பெந்தெகொஸ்தே" ஆகும், ஏனெனில் இது தூய ஆவி புறவினத்தாருக்கு வழங்கப்படுகிறது. முதல் பெந்தெகொஸ்தே எருசலேமில் உள்ள யூதர்களுக்கும்; இரண்டாவது யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவில் உள்ள யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் அருளப்பட்டதை நாம் அறிவோம்.
நற்செய்தி.
இனைறய நற்செய்திப் பகுதியில் இயேசு தம்மை “நல்ல ஆயன்” என்று தன்னை வெளிப்படுத்துகிறார். இதன் மூலம், நல்ல ஆயன் ஆடுகளுக்காக தன் உயிரைக் கொடுப்பான் என்ற படிப்பினையை முன்வைத்து, இயேசு தம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு சாதாரண தலைவரல்ல; தம் மக்களுக்காக தன் உயிரையே அர்ப்பணிக்க வல்லவர் என்பதை புலனாகிறது.
மாறாக, கூலிக்கு ஆண்டுகளை மேய்ப்பவனோ ஆடுகளை உண்மையாக அன்பு செய்வதில்லை. அவன் ஆபத்து வந்தால் ஓடிவிடுவான். ஆனால் நல்ல மேய்ப்பன் ஆடுகளை பாதுகாக்க தன்னையே பலியாக்குவான் என்கிறார். தொடர்ந்து, இயேசு, “நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன” என்ற உறவை வலியுறுத்துகிறார்.
நிறைவாக, இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும்” என்றும் உலகில் அவரது கடப்பாட்டை எடுத்துரைக்கிறார். இது யூதர்களுக்கு மட்டும் அல்லாமல், எல்லா மக்களையும் (புறவினத்தாரையும் ) மீட்க இயேசு வந்தார் என்பதைக் குறிக்கிறது.
முதல் வாசக்தில், ஒரு காலத்தில் யூதருக்கு மட்டுமே மீட்பு உண்டு என்று நினைத்திருந்த பேதுரு, பிற இனத்தார் மீது தூய ஆவியார் பொழியப்பட்டதைக் கண்டு, அவர்களுக்கும் மீட்பு என நம்பத் தொடங்குகின்றார் என்று லூக்கா குறிப்பிட்டுள்ளதை மனிதல் கொள்வோம்.
அனைவரும் ஒரே ஆயரின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்பதே கடவுளின் திட்டம் என தந்தையின் மீட்புத் திட்டத்தை இயேசு வலியுறுத்துகிறார்.
சிந்தனைக்கு.
அக்கால இஸ்ரயேலர் மத்தியில் ஆடுகள் இடையர்கள் ஆடுகளை மேய்ப்பது ஒரு தொழிலாகக் கருதப்பட்டது. அவர்கள் வழக்கமாகக் கூலிக்கு ஆடுகளை மேய்ப்பவர்களாக இருப்பார். ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் கிடைத்ததா இல்லையா என்பது பற்றி அவர்களுக்குக் கவலை கிடையாது. மேலும், ஆடுகளைத் தாக்கும் கொடிய விலங்குகள் வந்தாலும், தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் எடுப்பர். அடுத்து, மந்தையில் இருக்கும் கொழுத்தவற்றை கொன்று தின்று, காட்டு விலங்குகள் கொன்றுவிட்டதாகப் பொய் கணக்குக் காண்பிப்பர். ஆம், அவர்கள் ஆடுகளை மேய்ப்பதற்குப் பதில் ஆடுகளை மேய்ந்தார்கள் என்று எசேக்கியேல் கூறக் கேட்கிறோம். (எசே 33: 3,8).
எனவேத்தான், இயேசு தம்மை ஒரு நல்லாயனாக வெளிப்படுத்துகிறார். நல்லாயன் தம் கண்காணிப்பில் உள்ள ஆடுகளுக்காக தம் உயிரையும் கொடுக்கவல்லவர். தம் ஆடுகளைப் பசும்புல் தரைகளுக்கும் நீர்நிலைகளுக்கும் ஓட்டிச் செல்வார். தீய மேய்ப்பர்கள் சுயநலவாதிகள். வேலியே பயிரை மேய்ந்தாற்போல் அவர்களது கையில் ஆடுகளுக்குப் பாதுகாப்பு கிடையாது.
இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது, திருஅவையில் தலைமைத்துவத்திற்குபொறுப்புகளுக்கும் அமர்த்தப்படவர்கள் கிறிஸ்தவ தலைமைத்துவம் என்றால் என்ன என்பது பற்றி அறியாமலேயே பொறுப்பேற்கிறார்கள். திருஅவையில் வழிநடத்தப்படும் மந்தைகளான இறைமக்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடையவும், தலைவர்களால் அவர்களுக்குத் தேவையானதை வழங்கப்படுவம் அவர்களில் நல்வாழ்வுக்காக தேவையான அனைத்தையும் கண்காணித்துச் செயலாற்ற வேண்டும்.
ஆம், கடவுளின் திட்டத்திற்கு ஏற்றவாறு, வழிநடத்தப்படுபவர்களுக்காக எதையும் செய்யத் தலைவர் தயாராக இருக்க வேண்டும். ஆண்டவர், இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும்” என்கிறார்.
எனவே, நற்செய்தி நம்மோடு இருந்துவிடாமல் அடுத்திருப்பவர்களுக்கு நமது அன்பு பணியாளும் படிப்பினையாளும் கொண்டு செல்லப்பட வேண்டும். இது நமக்கான பணி. இயேசு கொண்ட ஆயர் பணி நமக்கும் உரியது என்பதை மறுப்பதற்கில்லை.
இயேசு நம்முடன் இருக்கிறார், அவர் நம்மைப் பாதுகாக்கிறார் என்பதை ஒவ்வொரு வினாடியும் நாம் உறுதி செய்வது இன்றியமையாதது. ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கொரு குறையுமிராது என்பது வெறும் பாட்டு அல்ல. அது நமது நம்பிக்கை வாழ்வின் அச்சாரமாகும். நல்லாயனாகிய இயேசுவின் மந்தையாக இருக்க நாம் அவருடைய குரல் கேட்டு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு.ம் (யோவா 10:3).
இறைவேண்டல்.
நல்லாயனாகிய ஆண்டவரே, வாழ்க்கையிலும் பணியிலும் உமது குரல்கேட்டு உம்மோடு இணைந்த வாழ்க்கை வாழ என்னை வளரச் செய்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452