நிலைக் கண்ணாடி | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

"ஆண்டவரே உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை. இந்த மண்ணக வாழ்வின் உறைவிடம் முடிந்ததும், விண்ணகத்தில் நித்திய வீடு ஆயத்தமாயிருக்கிறது”.

நாம் வாழ்கின்ற இந்த மண்ணக வாழ்வின் கடைசி உறைவிடம் கல்லறை. கல்லறையோடு அது முடிவடைவது இல்லை. மறுவாழ்வின் தொடக்கமாகவும், கனவுகளின் பிறப்பிடமாகவும் இருக்கிறது.

மிகவும் புகழ்பெற்ற தொழிற்சாலை ஒன்றில் ஒரு வித்தியாசமான இறுதிச்சடங்கு நடந்தது. அன்று காலை வழக்கம்போல் எல்லாரும் அவரவர் பணிக்கு வந்தனர். வந்தவர் அனைவருடைய பார்வையும் ஒரே இடத்தில் நிலைக்குத்தி நின்றது. ஏனெனில் தொழிற்சாலையின் வாயிலில் ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது.

அதில், "நமது தொழிற்சாலையின் வளர்ச்சியில் அக்கறையில்லாதவர், தன் கடமையைச் செய்யத் தவறியவர், பொறுப்பற்றவர், தொழிலில் நட்டம் ஏற்படக் காரணமானவர், எவ்வகையிலும் தன்னை முன்னேற்றிக் கொள்ளாதவர் -இவர் நேற்றுக் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்த அனைவரும் வருக!" என்று எழுதியிருந்தது.

எல்லாரும் அதைப் படித்துவிட்டு அமைதியாக அவரவர் வேலையில் ஈடுபட்டனர். எல்லாருடைய மனதிலும், 'இப்படி ஒரு கேடுகெட்ட மனிதர் யார்? அவரைப் பார்க்க வேண்டுமே" என்ற கேள்வி எழ, இறுதிச் சடங்கு ஊர்வல நேரத்திற்காகக் காத்திருந்தனர். அந்த நேரமும் வந்தது.

தொழிற்சாலையின் வளாகத்திலே ஒரு மூலையில் கல்லறைக் குழி தோண்டப்பட்டிருந்தது. ஒரு பெரிய அரங்கினுள் சவப்பெட்டி வைக்கப் பட்டிருந்தது. யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஊர்வலம் தொடங்கியது. வந்தவர்கள் அனைவரும் ஒரு விதக் குழப்பத்தோடு ஊர்வலத்தில் இணைந்தனர். சவப்பெட்டியானது தொழிற்சாலையை ஒரு சுற்று சுற்றிக் கல்லறையை வந்தடைந்தது. அங்கு வைத்தவுடன் தொழிற்சாலையின் இயக்குநர் சொன்னார், “இப்போது ஒவ்வொருவராக வந்து, இத்தொழிற்சாலையின் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தாது, வாழ்க்கையை இன்பமாக வாழத்தவறியவர் யார் என்று பார்த்துவிட்டு தனித்தனியாக அஞ்சலி செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

அனைவரும் வரிசையாக வந்து நின்றனர். ஒவ்வொருவராக சவப்பெட்டியை குனிந்து பார்த்தனர். திகிலடைந்து, வாயடைத்து நின்றனர். காரணம் அந்த சவப்பெட்டியில் ஒரு நிலைக்கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அவரவர் உருவத்தை அவரவர் கண்டபோது வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவர் தாங்களே என்று உணர்ந்தனர்.

மீண்டுமான ஒரு புதிய வாழ்வினை அக்கல்லறையிலிருந்து தொடங்கினர். அத்தொழிற்சாலையின் தொலைநோக்கிற்கான கனவுகள் அக்கல்லறையிலிருந்தே தொடங்கின. கல்லறை அது இறந்தோரின் உறைவிடம் அல்ல. வாழ்வோர் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளும், கனவுகளும் தொடங்குமிடம்.

நமது பூதஉடல் அடக்கம் செய்யப்படுமிடம் மட்டுமல்ல கல்லறை. நமது வலிகள், வேதனைகள், பலவீனங்கள், கோபங்கள், பகைமையுணர்வுகள், எதிர்மறை எண்ணங்கள், வளர்ச்சியற்ற நிலைகள், பொறுப்பற்றத் தன்மை இவையனைத்தும் புதைக்கப்படும் இடம்கூட கல்லறைதான். இவை அனைத்தையும் புதைப்போம். இக்கல்லறையிலிருந்து உயர் கனவுகளும், உன்னத வாழ்வும் பிறக்கட்டும்.... நமது கனவுகளைத் தொலைத்துவிடாமல் நனவாக்குவோம். புது வாழ்வு வாழ்வோம்.