எளியோருக்கான பணி கிறிஸ்துவின் அன்பின் வெளிப்பாடு ! | Veritas Tamil

அமெரிக்க கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களின் (Catholic Charities USA) இயக்குநர்கள் குழுவைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி ஊக்கமளித்தார்.

உயிர்ப்புப் பெருவிழாக் காலத்தில், இயேசுவின் உயிர்த்தெழுதலையும், தம் சீடர்களோடு எப்போதும் உடனிரு ப்பேன் என்ற அவருடைய வாக்குறுதியையும் நாம் ஆழமாகச் சிந்திக்கிறோம் என்றும், திருத்தூதர்கள் தங்களது நற்செய்திப் பணியைத் தொடங்கியபோது, அவர்கள் பல சவால்களை எதிர்கொண்டனர்; இருப்பினும், ஆண்டவர் அவர்களுக்குத் துணையாக இருந்து அவர்களை வலுப்படுத்தினார் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 04, திங்களன்று, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் அமெரிக்க கத்தோலிக்க தொண்டு நிறுவனங்கள் அமைப்பின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

ஏழைகளுக்கும் எளியோருக்கும் நீங்கள் ஆற்றும் பணி சவால்கள் நிறைந்ததுதான் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை,போதிய வசதிகள் இல்லாமை, சில நேரங்களில் ஏற்படும் சோர்வு, மற்றும் நீங்கள் விரும்பியவாறு உதவ முடியவில்லையே என்கிற மனவேதனை ஆகியவற்றை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றும், இருப்பினும், 'நான் எப்போதும் உங்களுடனேயே இருக்கிறேன்' என்ற கிறிஸ்துவின் வாக்குறுதி, இத்தகைய கடினமான தருணங்களில் உங்களுக்குப் ஊக்கமும் மறுநம்பிக்கையும் அளிப்பதாக அமையும் என்று எடுத்துரைத்தார்.

ஆண்டவரின் இரக்கமுள்ள பணியினை உங்கள் பணி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது என்றும்,  மக்களின் துன்பங்களைப் போக்குவதன் மூலமும், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளுக்குப் பதிலளிப்பதன் மூலமும், கிறிஸ்துவின் அன்பை உங்கள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்துகிறீர்கள் என்றும்  திருத்தந்தை குறிப்பிட்டார்.

மேலும் இந்த அன்புதான் உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் உந்துதலாக இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அப்போதுதான், நீங்கள் பணி செய்யும் மக்கள் வெறும் பொருள் உதவியை மட்டும் பெறாமல், தங்களின் மாண்பு, அரவணைப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றையும் உணர்ந்துகொள்வார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

பிறர் மீது காட்டும் உண்மையான அன்பு இறைவனின் மீதான அன்பின் வெளிப்பாடு என்றும், மற்றவர்கள் இறைவனைச் சென்றடைவதற்கான வழியாக அது அமைகிறது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை , தேவையிலுள்ளோருக்குச் சேவை செய்யும்போது நீங்கள் கிறிஸ்துவையே நேரில் சந்திக்கிறீர்கள் என்பதையும்  சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு, நீங்கள் ஆற்றும் தொண்டுப் பணிகள் வெறும் சமூகச் சேவையாக மட்டுமின்றி, அவை இறையருள் நிறைந்த தருணங்களாகவும் மாறுகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இத்தகைய பணிகள் உதவி செய்பவர், உதவி பெறுபவர் என இருதரப்பினரின் வாழ்விலும் ஆழமான மற்றும் உன்னதமான மாற்றத்தை உருவாக்கும் மகத்தான தருணங்களாக அமைகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக, உயிர்த்தெழுந்த ஆண்டவர் அளிக்கும் நம்பிக்கை உங்களை எப்போதும் வழிநடத்துவதாக என்று கூறி தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார்.

நன்றி வத்திக்கான் செய்தி