லெபனோனில் மனிதாபிமானப் பேரழிவைத் தடுக்க வேண்டுகோள் ! | Veritas Tamil
"நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதும், பொது அமைதியை வலுப்படுத்துவதும், நாட்டின் அனைத்து ஆயுதங்களும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை உறுதி செய்வதும் தலைவர்களின் தலையாயக் கடமையாகும்" என்று லெபனோன் அரசியல் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
"மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனோனின் கத்தோலிக்க முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் பேரவை அமைதிக்கான ஒரு வலுவான வேண்டுகோளை விடுத்துள்ளது.
அப்பாவிப் பொதுமக்கள், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் மற்றும் அதிகரித்து வரும் இன்னல்கள் குறித்த தங்களது ஆழ்ந்த கவலையை அந்நாட்டுக் கத்தோலிக்கத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
"தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் மனித மாண்பு, நீதி மற்றும் நிலைத்தன்மையை அச்சுறுத்துவதாக எச்சரித்துள்ள ஆயர்கள், "அமைதி என்பது ஒரு இரண்டாம் நிலை அல்லது தற்காலிகமான விருப்பம் அல்ல, மாறாக அது ஒரு மானுடக் கடமை மற்றும் கூட்டுப் பொறுப்பு" என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வன்முறையை உடனடியாக நிறுத்தவும், பேச்சுவார்த்தைக்குத் திரும்பவும் மற்றும் பொறுப்புமிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அந்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
"நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதும், பொது அமைதியை வலுப்படுத்துவதும், நாட்டின் அனைத்து ஆயுதங்களும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை உறுதி செய்வதும் தலைவர்களின் தலையாயக் கடமையாகும்" என்று அந்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.
போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும், மனித மாண்பின் அடிப்படையில் அமைந்த நியாயமான தீர்வுகளை முன்னெடுக்கவும் தங்களது முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு அனைத்துலகச் சமூகத்திற்கு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளதையும்,போரினால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒன்றிப்புடன் இருக்கவும், இடம்பெயர்ந்த பொதுமக்களை வரவேற்று ஆதரிக்கவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக , லெபனோன், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த உலகையும் இறைப்பராமரிப்பில் ஒப்படைத்து நிலையான அமைதி நிலவ வேண்டுமென்ற நம்பிக்கையுடன் இந்த அறிக்கையை நிறைவு செய்துள்ளது லெபனானின் கத்தோலிக்க முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் பேரவை.
நன்றி வத்திக்கான் செய்தி