மனிதாபிமான உதவிகளில் உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் தேவை ! | Veritas Tamil
மனிதாபிமான உதவிகளில் உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் தேவை!
உள்ளூர் அமைப்புகள் மனிதாபிமான உதவிகளை செயல்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் நிலைநிறுத்தவும் ஏதுவாக, நெகிழ்வான நிதியுதவி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை வழங்க வேண்டும் என்று நன்கொடையாளர்கள், ஐநா அமைப்புகள் மற்றும் அனைத்துலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு தனது அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர்மயமாக்கல் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், மனிதாபிமான உதவிகள் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரமும் கட்டுப்பாடும் இன்னும் அனைத்துலக அமைப்புகளிடமே குவிந்துள்ளதாக ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
"மனிதாபிமான நடவடிக்கைகளில் உள்ளூர் தலைமையை மேம்படுத்துதல்" என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, உள்ளூர் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கான ஆதரவு சீரற்றதாகவும் போதுமானதாக இல்லாமலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், குறிப்பாக, உலகளாவிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.
"உள்ளூர் அமைப்புகளுக்கு அதிக நிதியுதவி கிடைப்பதும், சமமான கூட்டாண்மைகளை ஊக்குவிக்கும் கொள்கைகள் இருப்பதும் உண்மைதான் என்றாலும் எந்தவொரு நன்கொடையாளரோ, ஐ.நா. அமைப்போ அல்லது அனைத்துலகத் தன்னார்வத் தொண்டு நிறுவனமோ தங்களின் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை" என்று அதன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் "உள்ளூர் அமைப்புகள் இன்றும் பெரும்பாலும் திட்டங்களைச் செயல்படுத்துபவைகளாக மட்டுமே உள்ளன" என்றும், "முக்கிய முடிவுகள், ஆதாரங்கள் மற்றும் இடர்பாடுகள் அனைத்தும் அனைத்துலக அமைப்புகளின் ஆதிக்கத்திலேயே உள்ளன" என்றும் அதன் அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர் பேரருள்திரு.மைக்கேல் லாண்டாவ் அவர்கள், “மனிதாபிமான நடவடிக்கைகள் பயனுள்ளதாகவும் நீதியானதாகவும் அமைவதற்கு உள்ளூர் தலைமையே அடிப்படை" என்றும், "நிறுவன ரீதியான மாற்றமும் அரசியல் உறுதியும் இல்லாமல், இந்த முன்னேற்றம் அதன் முழுத் திறனை எட்ட முடியாது" என்றும் தெரிவித்துள்ளார்.
"உலகளாவிய மனிதாபிமான நிதித் தேவையில் 28 விழுக்காடு மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நிதி வெட்டுக்கள் உள்ளூர் அமைப்புகளைப் பெருமளவில் பாதிக்கின்றன என்றும் அதன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும், "உள்ளூர் அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் கூட்டு நிதியுதவிகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற நம்பிக்கையளிக்கும் நடைமுறைகள் ஆங்காங்கே இருந்தாலும், அவை தனிமைப்படுத்தப்பட்டவையாகவும் போதிய ஆதரவற்ற நிலையிலுமே உள்ளன" என்று அதன் அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
உள்ளூர் அமைப்புகள் மனிதாபிமான உதவிகளை செயல்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் நிலைநிறுத்தவும் ஏதுவாக, நெகிழ்வான நிதியுதவி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை வழங்க வேண்டும் என்று நன்கொடையாளர்கள், ஐநா அமைப்புகள் மற்றும் அனைத்துலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நன்றி வத்திக்கான் செய்தி