நற்செய்தியில் வேரூன்றிய வாழ்வும் ஒற்றுமைப் பயணமும் | Veritas tamil

ஜூன் 08, திங்களன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக மேட்ரிட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சாண்டியாகோ பெர்னாவியூ மைதானத்தில் மேட்ரிட் உயர் மறைமாவட்டத்தின் இளைஞர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரை திருத்தந்தை சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை.

அன்பான சகோதர சகோதரிகளே,

இந்த மாலைப் பொழுது நம்பிக்கையி ன் ஒரு அழகான கீதமாக மாறியுள்ளது. இறைவனைப் போற்றுவதிலும், இந்த அற்புதமான திருஅவைக் குடும்பத்தின் உறவுகளை வலுப்படுத்துவதிலும் உங்களுடன் என் குரலையும் இணைத்துக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம் இதயங்கள் கண்டிப்பாகப் பாட வேண்டும்; ஏனெனில் நம்பிக்கை என்பது வெறும் உண்மைகளையும் எண்களையும் பற்றியது மட்டுமல்ல, அது இறைவனின் அன்பின் ஒளியில் வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை ஒன்றிணைந்து கண்டறிவதாகும். நீங்கள் பன்முகத்தன்மை, வாய்ப்புகள், சவால்கள் மற்றும் மாற்றங்கள் நிறைந்த ஒரு மாபெரும் நகரத்தின் மையப்பகுதியில் வாழும் திருஅவையாக இருக்கிறீர்கள். இத்தகையதொரு சூழலில், நற்செய்தி நமக்கு நம்பிக்கையின் ஊற்றாக மாறுகிறது. கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது கடந்து போகும் ஒரு தற்காலிக உணர்ச்சியாக மட்டும் இருந்துவிடக் கூடாது; அது இயேசு கிறிஸ்துவுடனான சந்திப்பில் ஆழமாக வேரூன்றிய ஒரு நிலையான வாழ்க்கை முறையாக மாற வேண்டும். அவரது வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை வரலாற்றையும் நம் இதயங்களையும் தொடர்ந்து மாற்றியமைக்கின்றன.

திருமுழுக்கின் வழியாக, நம் வாழ்வு மாற்றமடைகிறது. நம்முடைய கொடைகள், அனுபவங்கள் மற்றும் திறமைகள் இனி நமக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல; அவை பொதுநலனுக்கான சேவையில் ஒப்படைக்கப்படுகின்றன. இது எல்லோரையும் ஒரே அச்சில் வார்ப்பதற்கு வழிவகுக்காது, மாறாகப் பன்முகத்தன்மையில் ஒருமித்த ஒத்திசைவுக்கு வழிவகுக்கிறது. திருஅவையானது செவிமடுத்தல், உரையாடல் மற்றும் ஒன்றிணைந்த பயணம் (Synodality) ஆகியவற்றின் மூலம், வேறுபாடுகளை ஒரு புதிய ஆற்றலாக மாற்றவும், நீதியையும் சகோதரத்துவத்தையும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பவும் அழைக்கப்பட்டுள்ளது.

இன்று, புதிய கருத்துக்கள், கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் உருவாகி வரும் இந்த நகரத்தின் மையப்பகுதியைச் சென்றடைய வேண்டிய சவாலைத் திருஅவை எதிர்கொள்கிறது. நமக்கு நன்கு பழகிய குழுக்களுக்குள்ளேயே நம்மை நாம் சுருக்கிக் கொள்வதைத் தவிர்த்து, மற்றவர்களைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உண்மை என்பது ஒரு கூட்டு இசைவிருந்தைப் போன்றது (Symphonic); அது எந்தவொரு தனிமனிதக் குரலை விடவும் மிக வளமானது. நமக்கு முன்பாகவே சென்று, நாம் இன்னும் சிந்தித்துப் பார்க்காத இடங்களில் நமக்காகக் காத்திருக்கும் உயிர்த்தெழுந்த ஆண்டவரை நாம் தொடர்ந்து தேட வேண்டும்.

மேட்ரிட் (Madrid) என்பது பல பாரம்பரியங்களையும் மக்களையும் கொண்ட ஒரு நகரம். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதரையும் இறைவன் அறிவார், அவர்கள் மீது அன்பு கூர்கிறார். இயேசு கிறிஸ்துவே நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தி; அதை நாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். ஏனெனில், அனைவரும் வாழ்வைப் பெறுவதற்கும், அதை முழுமையாகப் பெறுவதற்கும் படைக்கப்பட்டவர்கள். தூய ஆவியானவர் திருஅவைக்கு என்ன சொல்கிறார் என்பதை ஒன்றிணைந்து கேட்பதற்கும், கூட்டாகப் பகுத்தறிந்து தெளிவடைவதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் அருள்பணியாளர்களையும் நம்பிக்கையாளர்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். ஒன்றிணைந்த பயணம் என்பது ஏதோ ஒரு அலுவலக நடைமுறை அல்ல; அது செவிமடுத்தல், மனமாற்றம் மற்றும் மறைபரப்புப் பணி ஆகியவற்றின் பாதையாகும். தூய ஆவியானவர் அழைப்புகளை எழுப்புகிறார், சமூகங்களைப் புதுப்பிக்கிறார், நம்மைப் புதிய எல்லைகளை நோக்கி வழிநடத்துகிறார்.

இன்று நாம் கேட்ட சாட்சியங்கள், மக்கள் தங்களுக்குரிய அங்கீகாரம், பொறுப்புணர்வு மற்றும் நன்றியுணர்வை எங்கு கண்டுகொள்கிறார்களோ, அத்தகைய ஒரு வாழும் திருஅவையை நமக்கு வெளிப்படுத்துகின்றன. உங்கள் முகங்களிலும் உங்கள் வாழ்விலும் இறைவனின் வார்த்தை தெளிவாகத் தெரியும்படி, நீங்கள் ஒவ்வொருவரும் அனைவருக்கும் ஒரு "திறந்த விவிலியமாக" திகழுங்கள். அன்பு மட்டுமே ஒவ்வொரு மனிதரையும் தன் சொந்த இல்லத்தில் இருப்பது போல உணரச் செய்யும் மொழியாகும்.