உரோமை மறைமாவட்டத்திற்கு நான்கு புதிய துணை ஆயர்கள் நியமனம் ! | Veritas Tamil

திருத்தந்தையின் இந்த நான்கு நியமனங்களும் உரோமை மறைமாவட்டத்தின் ஆன்மிகத் தலைமைத்துவத்தை வலுப்படுத்துகின்றன. மேலும் இங்குத் திருத்தந்தையே ஆயராகச் செயல்படுகிறார் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

உரோமை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத் தளங்களில் பணியாற்றி வரும் நான்கு அருள்பணியாளர்களை உரோமை  மறைமாவட்டத்தின் பணிகளுக்காகப் புதிய துணை ஆயர்களாக நியமனம் செய்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள துணை ஆயர்கள் ஸ்தேவனோ ஸ்பரபானி (Stefano Sparapani), அலெஸாண்ட்ரோ செனோபி (Alessandro Zenobbi), அந்திரேயா கார்லேவேலே (Andrea Carlevale) மற்றும் மார்கோ வாலென்தி (Marco Valenti) ஆவர். இவர்கள் நால்வரும் உரோமை மறைமாவட்டத்தின் நீண்டகால அனுபவம் வாய்ந்த அருள் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்பணியாளர் ஸ்தேவனோ ஸ்பரபானி

அருள்பணியாளர் ஸ்தேவனோ ஸ்பரபானி அவர்கள், 1956-ஆம் ஆண்டு உரோமையில் பிறந்தார். 1991-இல் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், புனித பசிலியோ பங்குத் தளத்தின் பங்குத் தந்தையாகவும், இன்னும் பல ஆன்மிகப் பணிகளை ஆற்றியுள்ளார். மேலும், 2025-ஆம் ஆண்டு முதல்

உரோமையின் வடக்கு மண்டிலத்திற்கான ஆயர் பதிலாளாகப் (Episcopal Vicar) பணியாற்றி வருகிறார்.

அருள்பணியாளர் அலெஸாண்ட்ரோ செனோபி

அருள்பணியாளர் அலெஸாண்ட்ரோ செனோபி அவர்கள்,1969-இல் பிறந்தார். 1996-ஆம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், புனித பொலிகார்ப்போ மற்றும் புனித லூசியா உள்ளிட்ட பங்குத்தளங்களை வழிநடத்தியுள்ளார். மேலும், 2025-ஆம் ஆண்டு முதல் உரோமையின் மேற்கு மண்டிலத்திற்கான ஆயரின் பதிலாளாகப் பணியாற்றி வருகிறார்.

அருள்பணியாளர் அந்திரேயா கார்லேவேலே

அருள்பணியாளர் அந்திரேயா கார்லேவேலே அவர்கள், 1971-இல் பிறந்தார். 1998-ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், பங்குத் தளங்கள் மற்றும் குருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது அப்பியோ-இலத்தீனோ (Appio-Latino) பகுதியில் உள்ள புனித திருமுழுக்கு யோவான் தெ ரோஸி (San Giovanni Battista de Rossi) பங்குத் தளத்தின் பங்குத் தந்தையாகப் பணியாற்றி வருகிறார்.

அருள்பணியாளர் மார்கோ வாலென்தி

அருள்பணியாளர் மார்கோ வாலென்தி அவர்கள் 1961-இல் பிறந்தார். 1986-ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோமையின் பல்வேறு பங்குத் தளங்களில் பணியாற்றியுள்ளார். 2024-ஆம் ஆண்டு முதல் ஆண்டவரின் உருமாற்றப் (Transfiguration of Our Lord Jesus Christ) பங்குத் தளத்தின் பங்குத் தந்தையாகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நியமனங்கள் உரோமை மறைமாவட்டத்தின் ஆன்மிகத் தலைமைத்துவத்தை வலுப்படுத்துகின்றன; இங்குத் திருத்தந்தையே ஆயராகச் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வத்திக்கான் செய்தி