வத்திக்கானில் தவக்காலத் தியானம் தொடக்கம் ! | Veritas Tamil

ஆயர் வார்டன் அவர்கள், தனது உரையில் தவக்கால ஒறுத்தல் முயற்சிகளை அகச் சுதந்திரத்திற்கான பாதையாக ஏற்குமாறு வலியுறுத்திய அதேவேளை, தீமைகளைத் தவிர்த்து, நன்மைகளைப் பெருக்கி, அமைதியை நிலைநாட்ட அறைகூவல் விடுத்தார்.

வத்திக்கானில் இடம்பெறும் தவக்காலத் தியானம் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் புனித பவுல் சிற்றாலயத்தில் தொடங்கியது. இதில் திருத்தந்தை பதினான்காம் லியோ, உரோமையில் வசிக்கும் கர்தினால்கள் மற்றும் பல்வேறு திருப்பீடத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நார்வேயின்  ட்ரொண்ட்ஹைம் (Trondheim) மாநிலத்தின் டிராப்பிஸ்ட் ஆயர் எரிக் வார்டன் அவர்கள், 'மறைந்திருக்கும் மகிமையால் ஒளியூட்டப்பட்ட' எனும் கருப்பொருளில் இந்தத் தவக்கால ஆன்மிகத் தியானத்தை வழிநடத்தி வருகிறார்.

"தவக்காலத்திற்குள் நுழைதல்" எனும் தலைப்பில் தனது தொடக்க உரையை ஆற்றிய ஆயர் வார்டன் அவர்கள், இக்காலத்தின் ஆன்மிக மேன்மைகளை எடுத்துரைத்ததுடன், தவக்காலம் என்பது நம்மை மிக முக்கியமான வாழ்வியல் உண்மைகளை நோக்கச் செய்யும் மற்றும் தேவையற்ற கவனச்சிதறல்களைக் களைந்து நம்மைத் தூய்மைப்படுத்தும் ஒரு தருணம் என்று குறிப்பிட்டார்.

பிப்ரவரி 22, ஞாயிறன்று தொடங்கிய இந்தத் தவக்காலத் தியானம், பிப்ரவரி 27, வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும். இவ்வாரத் தியானங்களில் கடவுளின் பேருதவி, ஆன்மிக விடுதலை, உண்மைத்தன்மை, மனஉறுதி மற்றும் எதிர்நோக்கு ஆகிய மையக்கருத்துகளின் அடிப்படையில் எண்ணங்கள் பகிர்ந்துகொள்ளப்படவிருக்கின்றன.

மேலும், திங்கள் முதல், காலை மற்றும் மாலை என நாள்தோறும் இருவேளை தியானங்களை ஆயர் வார்டன் அவர்கள் வழிநடத்துவார். இத்தியானத்துடன் இறைவழிபாடும், திருநற்கருணை ஆராதனையும் நடைபெறும்.

தனது தொடக்கவுரையில், தவக்கால ஒறுத்தல் முயற்சிகளை அகச் சுதந்திரத்திற்கான பாதையாக ஏற்குமாறு  வலியுறுத்திய ஆயர் வார்டன் அவர்கள், தீமைகளைத் தவிர்த்து, நன்மைகளைப் பெருக்கி, அமைதியை நிலைநாட்ட அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

புனித பெர்னார்டை இறையருள் நிறைந்த சீடத்துவத்திற்கு இலக்கணமாகச் சுட்டிக்காட்டிய ஆயர், 'அடிமைத்தளையிலிருந்து வாக்களிக்கப்பட்ட புனித நாட்டை நோக்கிய விடுதலைப் பயணப் பாதையில் பயணிக்குமாறும், நற்செய்தி விழுமியங்களின் மீது ஆழ்ந்த பற்றுடனும் தெளிந்த சிந்தனையுடனும் வாழுமாறும் அவர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

நன்றி வத்திக்கான் செய்தி