திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வுகள்! | Veritas Tamil
ஏப்ரல் 21, செவ்வாய்கிழமை அன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அங்கோலா நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்கிறார். லுவாண்டா விமானநிலையத்தில் பிரியாவிடைபெற்று, எக்குவட்டோரியல் கினியா நாட்டின் மலாபோ நகருக்கு செல்கிறார். அங்கு அந்நாட்டின் அதிபர், அதிகாரிகள், தூதரகத்தினரைச் சந்தித்த பின்னர், நாட்டின் கலாச்சார பிரதிநிதிகளை லியோன் XIV வளாகத்தில் சந்திக்கிறார். தொடர்ந்து அங்குள்ள ஜீன் பியர் ஒலி மனநல மருத்துவமனையைப் பார்வையிட்டார் .
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் ஒன்பதாம் நாளை இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி செவ்வாய்கிழமை தொடங்கியிருக்கிறார்.
இன்று அங்கோலா நாட்டில் தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்கிறார். அதன் நிறைவாக காலை மணி 8:45 க்கு லுவாண்டாவின் பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு பிரியாவிடை கொடுக்கப்படுகிறது.
காலை மணி 9:15 க்கு எக்குவட்டோரியல் கினியின் தலைநகராகிய மலாபோவிற்கு தனது பயணத்தைத் தொடங்குகிறார். பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள, ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியைக் குறிக்கும் (Gulf of Guinea) பழமையான பெயர். அதனால், “பூமத்திய ரேகைக்கு (Equator) அருகிலுள்ள கினியா நாடு”என்பதே முழுப் பொருள்.
இப்பகுதியில் முதலில் பிக்மி (Pigmies), ஃபாங் (Fang), மற்றும் புபி (Bubi) இன மக்கள் வாழ்ந்து வந்தனர். 15 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இப்பகுதிக்கு வந்தனர். பின்னர் 1778 இல் இது ஸ்பெயினின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு, 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியன்று ஸ்பெயினிடமிருந்து இந்நாடு சுதந்திரம் பெற்றது. இந்நாடு ஒரு குடியரசு நாடாக இருந்தாலும், 1979 முதல் அதிபர் தியோடோரோ ஒபியாங் நுகுமா எம்பசோகோ (Teodoro Obiang Nguema Mbasogo) தான் இன்னும் அதிகாரத்தில் உள்ளார்.
1990-களின் நடுப்பகுதியில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்நாட்டின் பொருளாதாரம் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். எண்ணெய் கண்டுபிடிப்புக்கு முன்பு கோகோ (Cocoa), காபி மற்றும் மரம் ஏற்றுமதி முக்கிய வருவாயாக இருந்தது. இங்கு ஸ்பானிஷ், பிரஞ்சு, போர்ச்சுகீசியம் மொழியை அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 85 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். இந்நாட்டில் ஐந்து மறைமாவட்டங்கள் உள்ளன. அவற்றில் மலாபோ உயர்மறைமாவட்டம் முதன்மையானதாக திகழ்கிறது. கத்தோலிக்க திருஅவை இந்நாட்டில் வெறும் மத நிறுவனமாக மட்டுமல்லாமல், ஒரு சமூக சக்தியாகவும் செயல்படுகிறது. நாட்டின் மிகச்சிறந்த பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பலவற்றை திருஅவை நடத்துகிறது. இது மக்களின் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
அரசு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் தமது மருத்துவமனைகள், சுகாதாரச் சேவைகள், ஏழைகளுக்கான நிதி உதவி, உணவு வழங்கல் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாகத் திருஅவை செயல்படுகிறது. உள்ளூர் ஆப்பிரிக்க மரபுகளையும் கத்தோலிக்க வழிபாட்டு முறைகளையும் ஒருங்கிணைத்து, மக்களின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதில் கத்தோலிக்க திருஅவையின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
லுவாண்டாவிலிருந்து புறப்பட்டு காலை மணி 11:45 க்கு திருத்தந்தை அவர்கள் மலாபோ சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்குகிறார்கள். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு விழா நடைபெறுகிறது.
மலாபோ எக்குவட்டோரியல் கினியா நாட்டின் தலைநகர் ஆகும். இது முதலில் ஆங்கிலேயர்களால் போர்ட் கிளாரன்ஸ் (Port Clarence) என்று நிறுவப்பட்டது. அடிமை வணிகத்தை தடுப்பதற்கான ஒரு கடற்படை தளமாக இது பயன்படுத்தப்பட்டது. ஸ்பெயின் இந்த தீவை கைப்பற்றிய பிறகு, இதற்கு சாண்டா இசபெல் (Santa Isabel) என்று பெயரிடப்பட்டது. 1973 ஆம் ஆண்டு, சுதந்திரத்திற்குப் பிறகு, பயோகோ (Bioko) தீவின் பூர்வகுடி மக்களான ‘புபி’ (Bubi) இனத்தின் கடைசி மன்னரான மலாபோ லோபெலோ மெலாகா என்பவரின் நினைவாக இந்நகரம் மலாபோ எனப் பெயரிடப்பட்டது. இவர் காலனித்துவத்திற்கு எதிராக போராடிய முக்கியமான தலைவர்.
20-ஆம் நூற்றாண்டில், மலாபோ உலகின் உயர்தர கோகோ உற்பத்தியின் மையமாக இருந்தது. இன்றும் இங்கு புகழ்பெற்ற கோகோ தோட்டங்கள் உள்ளன. 1990-களில் கடலோரப் பகுதிகளில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்நகரம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. இது ஆப்பிரிக்காவின் முக்கியமான எண்ணெய் மையங்களில் ஒன்றாக மாறியது.
சாண்டா இசபெல் கதீட்ரல் (Cathedral of Santa Isabel) இந்நகரத்தின் மிக முக்கியமான அடையாளம் ஆகும். இது ஸ்பானிஷ் கோதிக் (Gothic) பாணியில் கட்டப்பட்டது. இதன் வெளிர் ஆரஞ்சு நிற கோபுரங்கள் 40 மீட்டர் உயரம் கொண்டவை. 1897-இல் இதன் கட்டுமானம் தொடங்கியது. இது எக்குவடோரியல் கினியாவின் ஆன்மீக அடையாளமாகத் திகழ்கிறது. மலாபோவில் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கத்தோலிக்க திருஅவையாலேயே நடத்தப்படுகின்றன. காரித்தாஸ் (Caritas) போன்ற அமைப்புகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் இதர உதவிகளை கத்தோலிக்க திருஅவை வழங்குகிறது. நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர் பராமரிப்பு, மனநிலையற்றவர்களுக்கான மருத்துவம், இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் அரசியல் மற்றும் சமூக பதற்றங்களில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் கத்தோலிக்க திருஅவை பெரும்பங்காற்றுகிறது.
மதியம் மணி 12:30 க்கு அந்நாட்டின் அதிபர் தியோடோரோ ஒபியாங் நுகுமா எம்பசோகோ அவர்களை அதிபர் மாளிகையில் சந்திக்கிறார். இவர் 1979-ஆம் ஆண்டு முதல் எக்குவடோரியல் கினியாவின் அதிபராக இருந்து வருகிறார். உலகின் மிக நீண்ட காலம் பதவியில் இருக்கும் அரச குடும்பத்தைச் சாராத தலைவர் இவர்தான். இவர் ‘எக்குவடோரியல் கினியா ஜனநாயகக் கட்சி’ (PDGE) என்ற கட்சியின் தலைவராவார். இக்கட்சியே நாட்டில் பெரும்பாலான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அதிபரைச் சந்தித்த பிறகு மதியம் 1:00 மணிக்கு அதிபர் மாளிகையிலேயே அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்திக்கிறார்.
மாலை 4:00 மணிக்கு எக்குவடோரியல் கினியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் (UNGE – Universidad Nacional de Guinea Ecuatorial) மலாபோவிலுள்ள முக்கியமான வளாகமாகிய “லியோன் XIV” (Leon XIV Campus) வளாகத்தில் பல்கலைக்கழக நாட்டின் கலைஞர்கள் மற்றும் கலாச்சார அறிஞர்களைச் சந்தித்து உரையாடுகிறார். இந்த வளாகத்தில் கலை, கலாச்சாரம் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த துறைகள் செயல்படுகின்றன.
மாலை மணி 5:15 க்கு ஜீன் பியர் ஒலி (Jean Pierre Olié) மனநல மருத்துவமனைக்குச் சென்று, அங்குள்ள நோயாளிகள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தனது ஆசீர்வாதங்களையும் ஆறுதலையும் வழங்குகிறார். மேலும், மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அத்தகைய நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தவும் இந்த வருகை ஒரு முக்கிய தூண்டுதலாக அமையும் எனக் கருதப்படுகிறது.
அதன்பின் மாலை 7 மணிக்கு ஆயர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார். இத்துடன் இன்றைய நாளுக்கான திருத்தந்தையின் பயணம் திட்டக் குறிப்பு நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து வத்திக்கான் வானொலியுடன் இணைந்திருங்கள். உடனடித் தகவல்களைப் பெற்று பயன்பெறுங்கள்.
நன்றி வத்திக்கான் செய்தி