கேமரூன் பயணத்தின் நினைவுகளும் திருத்தந்தையின் பார்வையும் ! | Veritas Tamil
கேமரூனை "ஆப்பிரிக்காவின் இதயம்" என்று வர்ணிக்கும் திருத்தந்தை, அந்நாட்டின் கலாச்சாரச் செழுமையையும், அதே சமயம் அங்கு நிலவும் சமூக சமத்துவமின்மையையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஏப்ரல் 19, ஞாயிறன்று, யாவுண்டே (Yaoundé) நகரிலிருந்து லுவாண்டா (Luanda) நகருக்குச் செல்லும் விமானப் பயணத்தின் போது, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய செய்தி:
கேமரூனிலிருந்து அங்கோலா நோக்கிப் பயணம் செய்யும் இவ்வேளையில், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணத்தை நான் நினைவு கூறுகிறேன். கே மரூன் நாடு ஆப்பிரிக்காவின் இதயம் போன்றது; பண்பாடு, பல மொழிகள் மற்றும் பல்வேறு வாய்ப்புகள் நிறைந்த நாடு அது. அதே வேளையில், அங்கு சமத்துவமின்மையும் நிலவுகிறது. நான் ஒரு மேய்ப்பனாக அங்கேயுள்ள கத்தோலிக்க மக்களைச் சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களோடு துணை நிற்கவும் சென்றிருந்தேன். குறிப்பாக, கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் புனித அகுஸ்தினாரை முன்னிறுத்தி, திருஅவையின் நற்பணியை நான் எடுத்துரைத்தேன்.
அனைத்து மதத்தினரிடையே உரையாடல், சகோதரத்துவம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக நான் இமாம்களையும் சந்தித்தேன்; இது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும். அமெரிக்க அதிபரின் கருத்துக்களுக்குப் பிறகு, சில ஊடகங்கள் இந்த நிகழ்வுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு சித்தரித்தன. ஆனால், எனது செய்தி எப்போதும் அமைதியைப் பற்றியதாகவே இருந்திருக்கிறது, விவாதத்தைப் பற்றியது அல்ல.
பயணம் முழுவதிலும், நம்பிக்கை, நீதி மற்றும் ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்து, நற்செய்தியை நாங்கள் பறைசாற்றுகிறோம். கேமரூனில் எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கு நான் நன்றி கூறுகிறேன். மக்களின் மகிழ்ச்சியும் உற்சாகமும் அவர்களின் துடிப்பான நம்பிக்கையை ஆழமாகப் பிரதிபலித்தன. மிக்க நன்றி. உங்கள் பணிகளுக்கும் ஆதரவிற்கும் எனது நன்றிகள். நாம் இணைந்து தொடரும் இந்தப் பயணத்தில் ஆண்டவர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
நன்றி வத்திக்கான் செய்தி