உயிர்த்த கிறிஸ்துவின் ஒளியில் ஒரு புதிய தேசம் ! | Veritas Tamil
இயேசுவை நாம் குறிப்பாக நற்கருணை மற்றும் இறைவார்த்தையில் சந்திக்கிறோம். நற்கருணையில் அப்பம் பிட்கப்படும்போது சீடர்களின் கண்கள் திறக்கப்பட்டது போல, நாமும் நற்கருணையில் பங்கேற்கும்போது நமது இதயங்கள் புதுப்பிக்கப்பட்டு, சவால்களை எதிர்கொள்ளும் வலிமை பெறுகிறோம்.
ஏப்ரல் 19, ஞாயிறன்று, அங்கோலாவின் புதிய நகரமான கிலாம்பாவில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான திறந்தவெளி மைதானமான கிலாம்பா எஸ்பிளனேட் (Kilamba esplanade) மைதானத்தில் இடம்பெற்ற திருப்பலியின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை:
அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக உங்கள் அனைவரோடும் இணைந்து இந்த நற்கருணைப் பெருவிழாவில் பங்கேற்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எனக்கு அளித்த மகிழ்ச்சியான வரவேற்பிற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்மாவு பயணம்: வேதனையும் அங்கோலாவின் வரலாறும்
பாஸ்கா காலத்தின் இந்த மூன்றாம் ஞாயிறு, நற்செய்தி வாசகமானது எம்மாவு நோக்கிச் செல்லும் சீடர்களின் வரலாற்றை நமக்கு முன்வைக்கிறது. இயேசுவின் மரணத்தைக் கண்டபின், மிகுந்த துயரமும் மனச்சோர்வும் அடைந்த அவருடைய சீடர்கள் இருவர் எருசலேமை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அனைத்தையும்பற்றி ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே செல்கின்றனர்; தங்கள் வேதனையின் காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கின்றனர். இருப்பினும், அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் துயரத்தில் சிக்கிக்கொள்ளவும், நம்பிக்கையை இழக்கவும் நேரிடும் ஆபத்தில் இருக்கின்றனர். இந்தக் காட்சியில், அங்கோலாவின் வரலாற்றையே நாம் காண்கிறோம். அங்கோலா ஒரு அழகான நாடு, அதே வேளையில் அது போர்க்காயங்களின் வடுக்களைச் சுமந்து நிற்கிறது. இது நம்பிக்கை, அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக தாகம் கொண்டிருக்கிறது. எம்மாவு சீடர்களைப் போலவே, உங்கள் நாடும் மிகுந்த வேதனைகளை அனுபவித்துள்ளது; குறிப்பாக நீண்ட கால உள்நாட்டுப் போர், பிளவு, வறுமை மற்றும் இன்னல்களை உங்கள் பின்னே விட்டுச் சென்றிருக்கிறது. ஒரு மக்கள் இத்தகைய வேதனையில் நீண்ட காலம் வாழும்போது, அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடவும், முன்னோக்கிச் செல்லத் திறனற்றவர்களாக உணரவும் கூடிய ஆபத்து இருக்கிறது.
உயிர்த்த ஆண்டவர்: நற்கருணையில் மலரும் நம்பிக்கை
ஆனால்,இயேசு தருகின்ற நற்செய்தி இதுதான்: ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். அவர் உயிர்த்தெழுந்து, நமது வேதனையான மற்றும் குழப்பமான தருணங்களிலும் நமக்கு அருகிலேயே நடக்கிறார். அவர் எப்படி அந்தச் சீடர்களுடன் அவர்களின் பயணத்தில் இணைந்து கொண்டாரோ, அப்படியே இன்றும் அவர் உங்களோடு நடக்கிறார்; உங்கள் வலியைக் கடந்து பார்க்கவும், மீண்டும் நம்பிக்கையைக் கண்டறியவும் அவர் உங்களுக்கு உதவுகிறார். அவர் அவர்களுடன் அப்பத்தைப் பிட்கும்போது, அவர்களுடைய கண்கள் திறக்கப்படுகின்றன, அவர்கள் அவரை அடையாளம் காண்கிறார்கள். இதுவே உங்களுக்கான பாதையும்கூட: ஆண்டவர் உங்களோடு பயணிக்கிறார் என்பதை முழுமையாக நம்புவதும், அதற்குப் பதிலாக உங்கள் அர்ப்பணிப்பை வழங்குவதும்தான் அந்தப் பாதை நாம் அவரைச் சிறப்பாகச் செபத்திலும், அவரது வார்த்தைகளுக்குச் செவிமடுப்பதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக நற்கருணையிலும் சந்திக்கிறோம். அங்கே நமது இதயங்கள் புதுப்பிக்கப்படுகின்றன, நாம் வலிமை பெறுகிறோம். திருஅவையின் போதனைகளுக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக இருங்கள்; இறைவார்த்தையிலும், அப்பம் பிட்குதலிலும் தன்னை வெளிப்படுத்தும் இயேசுவின் மீது உங்கள் பார்வையை நிலைநிறுத்துங்கள்.
பிட்கப்பட்ட அப்பம்: ஒருமைப்பாட்டிற்கான அழைப்பு
அதே வேளையில், கிறிஸ்துவை அடையாளம் காண்பது என்பது அவரை மற்றவர்களிடத்தில் காண்பதையும் குறிக்கிறது. குறிப்பாக எங்கே மக்கள் அன்பிலும் இரக்கத்திலும் தங்களையே அர்ப்பணிக்கிறார்களோ, அங்கே அவரைக் காணலாம். இயேசு எப்படி அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தாரோ, அதேபோல நாமும் ஒருவருக்கொருவர் 'பிட்கப்பட்ட அப்பமாக' மாற அழைக்கப்படுகிறோம்; நமது வாழ்வைச் சேவை, மன்னிப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் வழியாக மற்றவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். தொடர்ச்சியான சவால்களைக் கொண்டுள்ள உங்கள் நாட்டின் வரலாறு, மக்களுடன் இணைந்து பயணிக்கும், அவர்களின் அழுகுரலைக் கேட்கும் மற்றும் நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்யும் ஒரு திருஅவையை எதிர்பார்க்கிறது. அமைதியைக் கட்டியெழுப்பவும், சகோதரத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான களங்களை உருவாக்கவும், தங்களையே தாராளமாக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் அங்கோலாவிற்குத் தேவை.
புதிய தேசம்: நீதியால் இளைஞர்களுக்கு விடியல்
உயிர்த்த கிறிஸ்துவின் அருளினால், நம்மால் எதார்த்தங்களை மாற்றியமைக்க முடியும். நாம் அனைவரும் ஒரே உடலாகவும் ஒரே ஆவியாகவும் இருக்கிறோம் என்பதை நற்கருணை நமக்கு நினைவூட்டுகிறது. பிரிவினைகளைக் கடந்து, வெறுப்பும் வன்முறையும் மறைந்து, ஊழலுக்குப் பதிலாக நீதியும் பகிர்தலும் நிலவுகின்ற ஒரு நாட்டை உங்களால் இணைந்து கட்டியெழுப்ப முடியும். அப்போதுதான், குறிப்பாக நம்பிக்கையை இழந்து தவிக்கும் பல இளைஞர்களுக்கு, ஒரு வளமான எதிர்காலத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும். இன்று, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்க வேண்டியத் தேவையும், அந்த நம்பிக்கையைச் செயலில் கட்டியெழுப்ப வேண்டியத் தேவையும் நமக்கு இருக்கிறது. அவ்வாறு செய்ய நீங்கள் அஞ்சாதீர்கள். உங்களோடு பயணித்து, உங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த உயிர்த்த இயேசு, உங்களை அவரது உயிர்த்தெழுதலின் சாட்சிகளாகவும், புதிய மனிதநேயம் மற்றும் சமுதாயத்தைப் படைப்பவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கிறார்.
உங்கள் இந்தப் பயணத்தில், எனது நெருக்கத்தையும் செபங்களையும் நீங்கள் எப்போதும் உறுதியாக நம்பலாம். அதேபோல, நானும் உங்களை நம்பியிருக்கிறேன், உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கை, உண்மை மற்றும் அன்பில் நீங்கள் என்றும் நிலைத்திருக்க அங்கோலாவின் பாதுகாவலியாம் முக்ஸிமா அன்னையின் பாதுகாப்பிலும் பரிந்துரையிலும் உங்களை ஒப்படைக்கிறேன்.