நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? : கிறிஸ்துவின் கேள்வியும் நமது பதிலும் ! | Veritas Tamil
இளைஞர்கள் மற்றவர்களுக்குப் பொருள்சார்ந்த உதவியையும் ஆன்மீக ஊட்டச்சத்தையும் கொண்டு செல்லும் 'நம்பிக்கையின் கருவிகளாக' மாற அழைக்கப்படுகிறார்கள்.
ஏப்ரல் 17, வெள்ளியன்று கேமரூனின் துவாலா நகரத்தில் அமைந்துள்ள ஜப்போமா மைதானத்தில் இடம் பெற்ற திருப்பலியின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இந்த யோவான் நற்செய்தி (யோவான் 6:1–15) மனித குலம் முழுவதற்குமான மீட்பைப் பறைசாற்றுகிறது மற்றும் இறைவனின் அன்பையும் நமது ஒன்றிப்பையும் வெளிப்படுத்துகிறது. யோவான் விவரிக்கும் அந்தப் பெருந்திரளான மக்களைப் போலவே, நாமும் நமது தேவைகளோடும் பலவீனங்களோடும் ஒன்று கூடி நிற்கிறோம். திரளான மக்களின் பசியையும், ஒரு சிறுவன் அளித்த ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள் என்ற மிகச் சிறிய உதவியைக் கண்டபோது, இயேசு இன்றும் நம்மிடையே ஒரு கேள்வியைக் கேட்கிறார்: 'நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?' இந்தக் கேள்வி, பெற்றோர், திருஅவைத் தலைவர்கள் அரசு அதிகாரிகள், செல்வந்தர்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என ஒவ்வொருவரையும் நோக்கியது. ஏனெனில், மனிதத் தேவைகளும், இறைவனைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் நம் அனைவருக்கும் ஒன்றே.
நமது பதிலுக்காகக் காத்திருப்பதற்கு முன்பாகவே, இயேசு தனது பதிலைத் தருகிறார். அவர் தன்னிடம் இருப்பதைக் கையில் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பகிர்ந்து அளிக்கிறார். இந்தச் செயலின் மூலம், அற்பமானது அமுதமாகப் பெருகுகிறது. அப்பங்களும் மீன்களும் பெருகிய அந்த அற்புதம், பகிர்ந்து அளிக்கும் செயலில் நிகழ்கிறது. கைம்மாறு கருதாமல் தாராளமாக வழங்கப்படும்போது, அது அனைவருக்கும் போதுமானதாக அமைகிறது. உண்மையான நிறைவு என்பது பிடித்து வைத்துக்கொள்வதால் ஏற்படுவதல்ல, மாறாகக் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியுணர்விலிருந்து பிறக்கும் தாராள குணத்தாலேயே உண்டாகிறது என்பதை இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.
பகிர்தலில் நிகழும் அற்புதம்
இந்த அற்புதம் இறைவனின் அன்பிற்கு ஒரு சான்றாகும். கடவுள் மனிதனின் தேவைகளை நிறைவு செய்வது மட்டுமல்லாமல், ஒருமைப்பாடு, மன்னிப்பு மற்றும் பிறர் மீதான அக்கறை ஆகியவற்றின் வழியாக அந்தப் பராமரிப்பில் நம்மைப் பங்கேற்கவும் அவர் அழைக்கிறார் என்பதை இது காட்டுகிறது. நன்மையின் ஒவ்வொரு செயலும் அமைதி, நீதி மற்றும் மாண்பு வேண்டிப் பசியாய் இருக்கும் இந்த உலகிற்கு ஊட்டச்சத்தாக அமைகிறது. இருப்பினும், வெறும் பருப்பொருள் சார்ந்த உணவு மட்டும் போதுமானதல்ல; மனிதகுலத்திற்கு ஆன்மீக ஊட்டச்சத்தும் தேவைப்படுகிறது. இது கிறிஸ்துவிலேயே, குறிப்பாக நற்கருணையில் நமக்கு வழங்கப்படுகிறது; இது நம்மை வலிமைப்படுத்தி நிலைநிறுத்துகிறது.
ஆன்மீகப் பசியும் நற்கருணை வாழ்வும்
நற்கருணை என்பது வெறும் நினைவுக்கூறுதல் மட்டுமல்ல, அது கிறிஸ்துவுடனான ஒரு உயிருள்ள சந்திப்பாகும். இது நம்பிக்கையைப் புதுப்பித்து, ஒன்றிப்பை உருவாக்கி, அதைப் பெறுவோரை உருமாற்றுகிறது. பலிபீடத்தைச் சுற்றி, துன்பங்களுக்கும் அநீதிகளுக்கும் மத்தியிலும் நாம் நம்பிக்கையைக் காண்கிறோம்; ஏனெனில் நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ள கடவுள் நம்மை அழைக்கிறார், அதன் மூலம் அது அன்பினால் பலமடங்காகப் பெருகுகிறது.
மனிதாகப் பிறந்த இயேசு, நமது போராட்டங்களையும் தேவைகளையும் நன்கு புரிந்து கொள்கிறார். பசி என்பது நமது வறுமையை மட்டுமல்ல, இறைவனின் இரக்கத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவையில் இருக்கும் ஒருவரை நாம் சந்திக்கும் போதெல்லாம், கிறிஸ்துவின் அந்தக் கேள்வி மீண்டும் நம் செவிகளில் ஒலிக்கிறது: "நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" அவரைப் பின்பற்றுவதற்குத் சுயநலத்தையும் அகந்தையையும் வெல்ல வேண்டும்; அதற்குப் பதிலாக இறைவனின் வலிமையிலும் வழிகாட்டுதலிலும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
நம்பிக்கையின் கருவிகளாக இளைய தலைமுறை
இளைஞர்களுக்கு ஒரு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது: அவர்கள் தங்கள் திறமைகளை நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தாராள மனப்பான்மையுடன் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்குப் பொருள்சார்ந்த உதவியையும் ஆன்மீக ஊட்டச்சத்தையும் கொண்டு செல்லும் 'நம்பிக்கையின் கருவிகளாக' மாற அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். வறுமை, மனச்சோர்வு மற்றும் அநீதி போன்ற சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் விழுமியங்களான நம்பிக்கை, குடும்பம், விருந்தோம்பல் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றில் உறுதியாக நின்று, ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தொடக்ககால கிறிஸ்தவர்களின் முன்மாதிரி இந்தப் பணிக்கு ஊக்கமளிக்கிறது. துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும், அவர்கள் இயேசுவை மிகுந்த துணிச்சலுடன் தொடர்ந்து பறைசாற்றினார்கள். அதேபோல, ஒவ்வொரு கிறிஸ்தவரும் நற்செய்திக்குச் சாட்சியாக இருக்கவும், இவ்வுலகில் நீதி, அமைதி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக மாறவும் அழைக்கப்படுகிறார்கள். நற்கருணையைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், இந்தப் பணிக்காக நாம் வலுப்படுத்தப்படுகிறோம். மகிழ்ச்சியான நம்பிக்கையுடன், ஆண்டவரின் கொடைகளை நமக்குள் பெருகச் செய்யுமாறு அவரிடம் வேண்டுகிறோம்; இதன் மூலம், நாம் அனைவரும் நலம் பெறும் பொருட்டு அவருடைய அன்பின் கருவிகளாக மாற இயலும்
நன்றி வத்திக்கான் செய்தி