திருத்தந்தையின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணம் ! | Veritas Tamil

கேம்ரூனின் திருஅவை மிகவும் வலிமை நிறைந்ததாகவே உள்ளது. இங்கு திருஅவையானது கல்விப்பணி, சுகாதாரப்பணி மற்றும் அமைதிக்கான பல்வேறு முயற்சிகளில் தன்னையே ஈடுபடுத்தியுள்ளது. எனவே திருத்தந்தை அவர்கள் அமைதி, ஒற்றுமை இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டல் என்னும் கருத்துக்களை திருத்தந்தை முன்னிறுத்துவார் என எதிர்பாக்கப்படுகிறது.

ஏப்ரல் 13 ஆம் தேதி திருத்தந்தை அவர்கள் திருத்தூதுப் பயணமாக அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்வேட்டோரியல் கினியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார்.

இது திருத்தந்தையின் மூன்றாவது திருத்தூதுப் பயணம். தனது பயணத்தின் முதல் கட்டமாக திருத்தந்தை அவர்கள் பண்டைய காலத்து கிப்போ நகரம் அதாவது இன்றைய நாளில் அன்னாபா என்ற அழைக்கப்படும் இடத்திற்கு செல்கின்றார். இது அல்ஜுரியா நாட்டில் உள்ள நகரமாகும்.

இந்த நகரத்தின் சிறப்பு என்னவென்றால் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தன்னுடைய முதல் ஊருக்கும் உலகிற்கும் என பொருள்படும் ஊர்பி எத் ஓர்பி என்ற சிறப்பு ஆசீர்வாதத்தின்போது அவரை தான் கிப்போ நகரப் புனித அகுஸ்தினாரின் மகன் என்று தம்மை பற்றிக் கூறினார். இப்போது பண்டைய காலத்து கிப்போ நகரப் புனித அகுஸ்தினாரின் இடத்திற்கு இன்றைய நாளில் அன்னாபா என்ற அழைக்கப்படும் இடத்திற்கு திருத்தூதுப் பயணம் செல்லும் முதல் திருத்தந்தையும் இவரே.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக (யோவான் 17:21). இதன் அடிப்படையில் இப்பயணம் எதிர்நோக்கு ஒப்புறவு மற்றும் அமைதியைக் கொணரக்கூடியதாக அமைகிறது. நாம் அனைவரும் நீதி அமைதி சகோதரத்துவத்தை கட்டியெழுப்புபவர்களாக இருக்க வேண்டும் என்றும் இந்த நான்கு நாடுகள் மத்தியில் ஒற்றுமையையும் எதிர்நோக்கையும் கொண்டு வரவேண்டும் என்பதே இந்தத் திருத்தூதுப் பயணத்தின் எதிர்பார்க்கப்படும் வெளிப்பாடு ஆகும்.

திருத்தூதுப்பயணத்தின் நான்கு நாடுகளும் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்திற்காக  தாயாரிக்கப்பட்ட சின்னத்தில் நான்கு அருமையான செய்தியை நமக்குக் கொடுக்கிறது.

அல்ஜீரியா நாட்டின் சின்னத்தில் உங்களுக்கு அமைதி உண்டாகுக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேம்ரூன் நாட்டின் திருத்தூது சின்னத்தில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்தின் விருதுவாக்காகிய அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக (யோவான் 17:21) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இது திருத்தந்தையின் ஆயர் திருநிலைப்பாட்டு விருதுவாக்காகிய அவரில் நாம் அனைவரும் ஒன்றே என்பதோடு இணைந்து செல்வதாக அமைகிறது.

அங்கோலா நாட்டின் திருத்தூது சின்னத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் எதிர்நோக்கு ஒப்புறவு அமைதியின் திருப்பயணம் அங்கோலாவை ஆசீர்வதிக்கிறது எனக்கு றிப்பிடப்பட்டுள்ளது.

ஈக்வேட்டோரியல் கினியா நாட்டின் திருப்பயணச் சின்னத்தில் கிறிஸ்து ஈக்வேட்டோரியாவின் ஒளி நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆக ஒவ்வொரு நாடும் பல்வேறு அடையாளங்களை உள்ளடக்கிய திருத்தூதுப்பயண சின்னத்தை வெளியிட்டு அதன் நோக்கத்தையும் வெளிப்படுத்தியிருப்பது இத்திருத்தூதுப் பயணம். கடவுளின் அமைதியை யும் ஒற்றுமையையும் இந்நாடுகள் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.

இப்போது இந்த நாடுகளின் பிண்னணிகளை சற்றுப் பார்ப்போம்:

அல்ஜுரியா

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா, பரப்பளவில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய நாடாகும். சஹாரா பாலைவனத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் கொண்டுள்ள இந்நாட்டின் பூர்வகுடி மக்கள் பெர்பர் இனத்தவர் ஆவர். காலப்போக்கில் பல்வேறு நாகரிகங்களின் கலப்பால் இவர்களின் கலாச்சாரம் செழுமை பெற்றுள்ளது.

1830 முதல் 1962 வரை பிரெஞ்சு ஆட்சி இருந்தது. பின்னர் விடுதலை பெற்றது. 1990களில் “கருப்பு தசாப்தம்” எனப்படும் உள்நாட்டுப் போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கத்தோலிக்கர்கள் மிகக் குறைவாக உள்ளனர் (சுமார் 5000 பேர்) மற்றும் மத சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே திருத்தந்தையின் இப்பயணம் மதங்களிக்கிடையே உரையாடலையும் அமைதியையும் வலியுறுத்துவதாகவும், 19 அன்பின் மறைசாட்சிகளின் மரபினை எடுத்துரைப்பதாகவும் அமையும்.

கேமரூன்

கேமரூன் — ஆப்பிரிக்காவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் ஒரு நாடு. இங்கு 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் காலனித்துவ வரலாற்றைக் கடந்து 1961-இல் சுதந்திர நாடாக உருவெடுத்தது. பொருளாதார ரீதியாக இயற்கை வளங்கள் மற்றும் வேளாண்மையைச் சார்ந்துள்ள கேமரூன், அண்மைக்காலமாகத் தீவிரவாத அச்சுறுத்தல்களால் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்யப் போராடி வருகிறது.

கேம்ரூனின் திருஅவை மிகவும் வலிமை நிறைந்ததாகவே உள்ளது. இங்கு திருஅவையானது கல்விப்பணி சுகாதாரப்பணி மற்றும் அமைதிக்கான பல்வேறு முயற்சிகளில் தன்னையே ஈடுபடுத்தியுள்ளது. எனவே திருத்தந்தை அவர்கள் அமைதி, ஒற்றுமை இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டல் என்னும் கருத்துக்களை முன்னிறுத்துவார் என எதிர்பாக்கப்படுகிறது. சுருங்ககூறின் திருஅவை சமாதானத்தின் கட்டிட நிபுணர் எனக்கூறலாம்.

அங்கோலா

அங்கோலா 1975ல் போர்ச்சுகலிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பின்னர் உள்நாட்டுப் போர் நீண்ட காலம் நடைபெற்றது; 2002ல் அமைதி ஏற்பட்டது. உள்நாட்டுப் போரின் நினைவுகளுடன் வாழும் நாடாக இருக்கிறது. இந்நாடு மதச்சுதந்திரத்தையும் அரசும் திருச்சபையும் பிரிக்கப்பட்ட அமைப்பையும் அங்கீகரிக்கிறது. இங்கு அன்னை மரியாவின் பக்தி மையங்கள் நிறைந்திருக்கின்றன. திருஅவை மக்களோடு இணைந்து செயல்படுகிறது. திருத்தந்தையின் செய்தியானது ஒப்புறவு, நீதி, மனித மாண்பு  பற்றியதாகவும் அமையும் எனவும் இது ஒரு புதிய நம்பிக்கைக்கு அழைப்புவிடுக்கும் பயணம் எனவும் கூறப்படுகிறது.

ஈக்வேட்டோரியல் கினியா

ஈக்வேட்டோரியல் கினியாவின் தொடக்க வரலாறு, பிக்மி (Pygmy) இன மக்களின் குடியேற்றத்துடன் தொடங்குகிறது. 1471ல் போர்ச்சுகீசியர்கள் வந்தனர்; பின்னர் ஸ்பெயின் ஆட்சி செய்தது. 1968ல் சுதந்திரம் பெற்றது ஆனால் அரசியல் நிலைமை சீராக இல்லை. 1995ல் எண்ணெய் கண்டுபிடிப்பு பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தியது; ஆனால் சமூக சமத்துவம் இன்னும் சவாலாக உள்ளது.  திருஅவை மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. திருத்தந்தையின் செய்தி அவர்களின் குடும்பம் நம்பிக்கை வளர்ச்சி சமூகநீதி பற்றியதாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

சுருங்ககூறின் இந்த நான்கு நாடுகளும் வரலாற்று சவால்களைக் கடந்தவை, மத சமூக பல்வகைமையைக் கொண்டவை. அமைதி,நம்பிக்கை,ஒற்றுமை தேவைப்படும் நாடுகளாக இருக்கின்றது. எனவே திருத்தந்தையின் இந்த திருத்தூதுப்பயணம் இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்துவம் மற்றும்  ஒப்புறவில் மற்றங்களை ஏற்படுத்தும். இது திருத்தந்தையின் மூன்றாவது திருத்தூதுப் பயணம் என்பதால் மூவொரு இறைவன் தன்னுடைய திருவுளப்படி நம்முடைய திருத்தந்தையை இந்த திருத்தூதுப் பயணத்தில் வழிநடத்தவும் இந்நாடுகளில் மூவொரு இறைவனின் அருள் நிறைவாய் தங்கும்படியாகவும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

நன்றி வத்திக்கான் செய்தி