இறை நம்பிக்கைக்கு அடித்தளமிட்ட முடியப்பர் சுவாமி அவர்களின் நினைவு நாளை கொண்டாடிய கிராம மக்கள் ! | Veritas Tamil

திருவரங்கம் பங்கின் முதல் பங்குத்தந்தையும், அந்த மண்ணின் ஆன்மீகச் சிற்பியுமான அருட்தந்தை ஸ்டீபன் லெபோர்த் (முடியப்பர் சுவாமி) அவர்களின் நினைவு நாள், ஒரு வரலாற்று நிகழ்வாகப் பங்கு மக்களால் நன்றியுணர்வுடன் கொண்டாடப்பட்டது. 20 ஆண்டுகள் இப்பங்கில் பணியாற்றி, திரு இருதய ஆண்டவருக்கு ஆலயம் எழுப்பி, ஒரு செழிப்பான கிராமத்தையே உருவாக்கிய அந்த மாமனிதரின் நினைவுகள் இன்றும் அந்த மண்ணில் பசுமையாக உள்ளன.

பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இயேசு சபையின் (Jesuits) உயரிய நோக்கத்திற்காகத் தமிழகம் வந்தவர் அருட்தந்தை முடியப்பர் சுவாமி. திருவரங்கம் பங்கின் வளர்ச்சிக்கும் இறைநம்பிக்கைக்கும் அடித்தளமிட்ட அந்த மாமனிதரை, ஒவ்வொரு ஆண்டும் இறந்த விசுவாசிகள் நினைவு நாள் அன்று, கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரின் கல்லறை முன் நின்று கண்ணீர் மல்க செபித்து, அவருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

திருவரங்கம் மக்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்காக ஒப்புக்கொடுக்கும் ஒவ்வொரு திருப்பலியிலும், முதல் பெயராக 'முடியப்பர் சுவாமி' அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு செபிப்பதையே பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.
பங்கு மக்களின் முன்னெடுப்பினாலும் பங்குத் தந்தை அவர்களின் வழிகாட்டுதலிலும் முடியப்பர் சுவாமியின் நினைவகத்திற்கு  28 ஜூலை 2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.  

முடியப்பர் சுவாமி அவர்கள் இயற்கை எய்திய பிப்ரவரி 25-ஆம் நாளை, ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு நன்றி செலுத்தும் திருவிழாவாகக் கொண்டாடப் பங்கு மக்கள் தீர்மானித்துள்ளனர். அந்த வகையில், கடந்த புதன்கிழமை அன்று இந்த விழா இரண்டாவது ஆண்டாக கிராம மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு குறித்துப் பங்குத்தந்தை அவர்கள் உரையாற்றுகையில், ஆண்டவர் மோசே மற்றும் ஆரோனிடம் புளிப்பற்ற அப்ப விழா குறித்துக் கூறிய "இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும்; தலைமுறைதோறும் ஆண்டவரின் விழாவாக இதைக் கொண்டாடுங்கள்" (வி.ப 12:14).
என்ற இறைவார்த்தைகளை நினைவு கூர்ந்ததுடன்,  திருவரங்கம் மண்ணிற்கு இறைநம்பிக்கையையும், வாழ்வாதாரத்தையும் தேடித்தந்த முடியப்பர் சுவாமியின் நினைவு நாளும், இக்காலத்து விசுவாசிகளுக்கு ஒரு புனிதமான நினைவு நாளாகவும், நன்றியறிதல் விழாவாகவும் மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் , இந்த நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் முடியை சுவாமியின் நினைவகத்தின் முன்பு கூடி நிற்க திருவரங்கம் பங்கின் மூத்த அருள்பணியாளரான அருள்பணி I. அருள் SJ அவர்கள் திருவரங்கம் கிராம மக்கள் முடியப்பர் சுவாமியின் மீது கொண்டிருக்கும் அன்பையும் நன்றி உணர்வையும் நினைவுகூர்ந்து தொடக்க செபம் செபித்தார். பிறகு பங்குத் தந்தை அருள்பணி. M.R. ஜேசு, திரு இருதய மேல்நிலைப் பள்ளி தாளாளரும் முடியப்பர் மாணவர் இல்லத்தின் இயக்குநருமான அருள்பணி. சகாயம், உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. பிரான்சிஸ் பால் MIC, பங்கின் மூத்த குரு அருள்பணி. I. அருள் SJ, அருள்பணி. ஆரோக்கியசாமி ஆகிய அருள்பணியாளர்கள் அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

பிறகு அருள்பணி. ஆரோக்கியசாமி அவர்கள் நிறைவேற்றிய திருப்பலி மறையுறையின்போது முடியப்பர் சுவாமி அவர்கள் இந்த கிராமத்தை உருவாக்க தானே வரைபடம் வரைந்து மிக நேர்த்தியாக கிராமத்தின் தெருக்களை வடிவமைத்தது குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து  திருப்பலியில் திருவரங்கம் பங்கில் பணி செய்யும் அமலவை அருள் சகோதரிகளும் லெயூகா அருள்சகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

திருப்பலிக்கு பிறகு மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
சிறப்பாக முடியப்பர் சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் கும்மி பாடலுக்கு பெண்களின் கும்மியடித்து ஆடினர். பங்கின் செசிலி பாடல் குழுவை வழிநடத்தும் செல்வன் சாமு எழுதி இசையமைத்து பாடகர் குழு உறுப்பினர்களால் உருவான இந்தப் பாடல் பலரின் பாராட்டைப் பெற்றது. நிறைவாக உறவின் விருந்தோடு இந்த விழா நிறைவுற்றது.

இறுதியாக, விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப விதைத்தவர் விண்ணடி சேர்ந்தாலும் அவர் விதைத்த விதைகள் விண்ணை நோக்கி இன்று விருட்சங்களாக உயர்ந்து நிற்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது.