பங்குதாரர்கள் | Veritas Tamil

உரோமை நகரிலே படித்துக் கொண்டிருக்கும்போது, ஒருநாள் நண்பர்களோடு சீன உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கே பணியிலிருந்த சீனப் பெண்மணி ஒருவர் எங்களிடம் பேசும்போது 'R' என்ற எழுத்தை உச்சரிக்க சிரமப்படுவதைக் கவனித்தேன். இறுதியாக எங்களிடம் அவள் பேசிய வார்த்தை 'Grazie' (கிராட்சியே), அதன் பொருள் 'நன்றி. ஆனால் 'R' என்ற எழுத்தை உச்சரிக்க முடியாமல் அதை 'Glazie' (கிளாட்சியே), என்று சொல்லிவிட்டார். அதைக் கேட்டு நண்பர்கள் அனைவரும் சிறிது நேரம் சிரிக்க, பிறகு அதை மறந்து விட்டோம். ஆனால் எங்களோடு வந்த நண்பன் ஒருவன் அதை அடிக்கடி சொல்லி கிண்டல் அடித்துக்கொண்டே இருந்தான். 'Grazie' (கிராட்சியே) என்று சொல்லும் நேரமெல்லாம், 'Glazie' (கிளாட்சியே) என்றுதான் சொல்லி கொண்டிருந்தான். நாங்களும் அதைக் கேட்டு நையாண்டித்தனமாக சிரித்துக்கொண்டிருந்தோம். இறுதியாக, அந்த நண்பனின் இரண்டு ஆண்டு படிப்பின் உச்சகட்டமான வாய்மொழித் தேர்வு (Vivavoca) வந்தது. மிகவும் அருமையாக தேர்வை எதிர்கொண்டவன், கடைசியில் நன்றி சொல்லும் நேரத்தில் 'Grazie' (கிராட்சியே) என்ற வார்த்தையை அவன் மறந்தவனாய், Glazie' (கிளாட்சியே ) என்ற நையாண்டி வார்த்தையை இயல்பாக சொல்லிவிட்டான். கூட்டத்திலிருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். கிண்டலடித்துக் கொண்டிருந்த வார்த்தை, அவனின் சொந்த வார்த்தையாகவே மாறிவிட்ட சோகம். ஒரு சிலவற்றை நாம் பழக்கமாகக் கொண்டிருந்தால் அவையே நமது வழக்கமாகவும் மாறிவிடுகிறது என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு பட்டறிவு பாடமாக சொல்லுகிறது.

ஆனால் நிகழ்வு அத்தோடு முடியவில்லை. அந்த நண்பன் Glazie (கிளாட்சியே) என்ற வார்த்தையை பயன்படுத்தியபோதெல்லாம் நானும் அதை ஆதரித்து நையாண்டித்தனமாக கிண்டலடித்தேனே தவிர, அவனை திருத்திக்கொள்ள முயலவில்லை, முன்வரவில்லை, எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை என்பது என்னை சிந்திக்க வைத்தது. அவனின் நையாண்டித்தனத்தில் எனக்கும் பங்கு உண்டு என்பதுதான் நிதர்சனம். நான் மட்டுமல்ல, எனது நண்பர்கள் அனைவருமே ஒருவகையில் இந்த நையாண்டித்தனத்திற்கு பங்காளிகள் என்னும் உண்மை எனது சிந்தனையின் ஆழத்தை எட்டியது. சிறிய நிகழ்வாக இருந்தாலும், அது தந்த பாடம் பெரியது. இன்று நமது அருகாமையில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நாமும் பங்குதாரர்களாக இருக்கின்றோம் என்பது தான் - வருத்தம். குறிப்பாக நம்மைச் சுற்றி நடக்கும் 5 தீமைகளுக்கு நமது பங்களிப்பும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அவற்றில் சிலவற்றை நாம் மறைமுகமாகவும், சிலவற்றை நேரடியாகவும், சிலவற்றை நம்மை அறியாமலும் ஆதரித்து பாசாங்கு பங்குதாரர்களாக மாறிக்கொண்டு இருக்கின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

எடுத்துக்காட்டாக சிறுவன் ஒருவன் தவறான செயல் ஒன்றை செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அதைத் தட்டிக்கேட்க எவரும் இல்லாமல், அவன் தவறை உணர வைக்க முடியாமல், சில வேளைகளில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு
பதில் அளிக்க தெரியாதவர்களாய், மேலும் மேலும் தவறான செயல்களில் அவனைத் தொடரத் தூண்டுவதுதான் இன்றைய சமுதாயத்தின் எதார்த்த நிலை, அந்த செயலை அவன் அவ்வாறு செய்யத் தூண்டியது எது? அதன் பின்புலம் என்ன? அவன் வளர்த்த உறவுகள் என்ன? அவனின் பெற்றோர்கள். நண்பர்கள், அவனைச் சுற்றியிருப்பவர்கள் அவனுக்கு கற்றுக் கொடுத்தது என்ன? என்று பல கோணங்களில் நமது சிந்தனையை செலுத்தினோமென்றால் உண்மை புரியும்: அந்த தவறான செயலை அவன் தனியாக செய்யவில்லை. மாறாக பல பேர் அதற்கு பங்காளிகளாக இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. கவலை என்னவென்றால், பெரியவர்கள் செய்யும் தவறுகளே இன்று சிறியவர்களுக்கு பாடங்களாக அமைந்துவிடுகிறது. நாம் செய்யும் நன்மைத்தனத்தைவிட, செய்யும் சிறு சிறு தவறுகளே சிறார்களின் கவனத்தை மிக விரைவாக ஈர்க்கின்றன. தவறுகள் பெருக, திருத்திக்கொள்ள முடியாத செயல்கள் மலிந்து கிடக்கின்றன. ஒரு தவறான செயல் மற்றொரு தவறான செயலைத் தூண்ட, இன்று நம்மிடையே தீச்செயல்கள் தீயாய் பரவிக் கிடக்கின்றன.

ஆக! ஒரு மனிதனின் செயலுக்கு பல பங்குதாரர்கள் இருக்கின்றார்கள். மிக முக்கியமாக இன்றைய நமது சமுதாயத்தில், தீமையான செயல்களுக்கு பலரின் பங்களிப்பு கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் நற்செயல்கள் பங்காளிகள் இல்லாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அருகாமையில் நடக்கும் அநியாயங்களைக் கண்டும் காணாமல் செல்வது, எனக்கென்ன என்று விலகிச்செல்வது, தனக்கு பாதிப்பு இல்லாதவரை ஒதுங்கியே நிற்பது, பிறரோடு சேர்ந்து நையாண்டி செய்வது என இவை அனைத்துமே தீச்செயல்களுக்கு நமது பங்களிப்பை அதிகரிப்பதாகும். அத்தோடு, நாம் செய்யும் தீச்செயல்கள், மேலும் பல தீமைச்செயல்களுக்கு அடித்தளமாகிறது என்பதை மறந்துவிடவேண்டாம். தீச்செயல்களால் காயப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த உலகம். நற்செயல்களுக்காக ஏங்கி நிற்கிறது வெளிச்சம். நற்செயல்களால் இந்த உலகை, நமது அருகாமையை நிறைக்கும்போது. நன்மைத்தனத்திற்கு நாம் பங்குதாரர்களாக மாறுகின்றோம். பாசாங்கு பங்குதாரர்களை விட, பாசமான செயல்களுக்கு பங்குதாரராக மாறுவோம்! நற்செயல்களை நம் செயல்களாக மாற்றி, நம்மை சார்ந்திருப்பவர்களையும் நமது பங்காளிகளாக மாற்றுவோம்!