கீழ்ப்படிதல் இறைவனுடன் உறவை வளர்க்கும் பாதை | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 16ஆம் வாரம் – செவ்வாய்
மீக்கா 7: 14-15, 18-20
மத்தேயு 12: 46-50
கீகீழ்ப்படிதல் வழியாக இறைவனுடன் உறவு
முதல் வாசகம்.
இறைவாக்கினர் மீக்கா, தமது மக்களை நல்ல மேய்ப்பனைப் போல
வழிநடத்துமாறு ஆண்டவரிடம் பரிந்துரைத்து மன்றாடுகிறார்.
எகிப்திலிருந்து மக்களை விடுவித்ததுபோல் மீண்டும் தமது
வல்லமையையும் அதிசயங்களையும் வெளிப்படுத்துமாறு வேண்டுகிறார்.
மேலும், ஆண்டவர் அளவற்ற இரக்கமுள்ளவர்; அவர் பாவங்களை
மன்னித்து, தமது நிலையான அன்பையும் உண்மையையும் மக்கள்
மத்தியில் என்றும் வெளிப்படுத்துகிறார் என்றும் அவர் தம் மக்களின்
பாவச் செயலெகளை நினைவில் கொள்ளாமல் ஆழ்கடலில்
எறிந்துவிடுகிறார் என்றும் முன்னோர்களுக்குக் கொடுத்த உடன்படிக்கை
வாக்குறுதிகளை உண்மையுடன் நிறைவேற்றுகிறார் என்றும்
எடுத்துரைக்கிறார். இங்கே, இஇறைவனின் கருணை கடலைவிடப்
பெரிது என்பதை மக்களுக்கு விவரிக்கிறார்.
நற்செய்தி.
இயேசு மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய தாயும்
சகோதரர்களும் அவரைச் சந்திக்க வந்தனர். அப்போது இயேசு, "என்
தாயும் என் சகோதரர்களும் யார்?" என்று கேட்டுவிட்டு, தம் சீடர்களைக்
காட்டி, "விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றுகிறவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்"
என்று கூறினார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களான மீக்கா 7:14-15, 18-20 மற்றும் மத்தேயு
12:46-50 ஆகியவற்றை ஒருமித்துச் சிந்திக்கும்போது, கடவுளின் இரக்கம்,
நம்மிடையிலான உறவின் உண்மையான அர்த்தம், மற்றும் இறைவனின்
திருவுளத்திற்குக் கீழ்ப்படிதல் ஆகிய மூன்று முக்கிய உண்மைகள்
வெளிப்படுகின்றன எனலாம்.
மீக்கா இறைவாக்கினர், கடவுளை ஒரு ஆயராகப் பார்க்கிறார். அவரிடம்
தம் மக்களுக்காக மன்றாடுகிறார். அவர்களின் பாவங்களை மன்னித்து,
இரக்கத்தோடும் அன்போடும் அவர்களைப் பராமரிக்க வேண்டுகிறார்.
அவரது, "உம்மைப் போன்ற இறைவன் யார்?" என்ற கேள்வி,
இறைவனின் அளவற்ற இரக்கத்தைப் போற்றுகிறது. இறைவன்
தண்டிப்பதில் மகிழ்ச்சியடைவதில்லை; மன்னிப்பதிலும் இரக்கம்
காட்டுவதிலுமே மகிழ்கிறார் என்ற படிப்பினை மிளிர்கிறது.
நற்செய்தியில், இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைத் தேடி
வந்தபோது, "என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறவரே என்
சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்ற பேருண்மையைப்
பகிர்கிறார். இதன் மூலம், இயேசு இரத்த உறவை மறுப்பதில்லை;
மாறாக, இறைவனுடன் உள்ள ஆன்மீக உறவே உயர்ந்தது என்பதை
எடுத்துரைக்கிறார். இறைவனின் திருவுளத்தின்படி வாழ்பவர்கள்
அனைவரும் இறைவனின் குடும்பத்தில் இடம் பெறுகின்றனர் என்ற
ஆழ்ந்த படிப்பினையை இயேசு முன்வைக்கிறார்.
ஆகவே, இறைவன் நம்மை எப்படி அன்போடும் இரக்கத்தோடும்
ஏற்றுக்கொள்கிறாரோ, நாமும் அவருடைய திருவுளத்தைத் தேடி,
அதன்படி வாழ்வோராக இருக்க வேண்டும். அப்போது நாமும்
இறைவனின் குடும்பத்தில் உண்மையான உறுப்பினர்களாக
விளங்குவோம் என்பது திண்ணம்.
ஆம், மறுவாழ்வில் அல்லது விண்ணக வாழ்வில் நமது ஒன்றிப்பு இரத்த
உறவின் அடிப்படையில் அமைந்ததல்ல. அது, விண்ணகத் தந்தையின்
திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதன் மூலம் உருவாகும் ஆன்மீக
உறவாகும். ஆண்டவரின் கூற்றின்படி உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும்
திருமணம் செய்து கொள்வதில்லை (மத் 22:30)
எனவே, என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என்
சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்று இயேசு கூறியபோது,
அந்த வார்த்தைகள் எல்லோருக்கும் பொருந்தினாலும், முதன்மையாகவும்
முழுமையாகவும் அவரது சொந்தத் தாயாகிய அன்னை மரியாவுக்கே
பொருந்துகின்றன.
நிறைவாக, இறைவனுக்குக் கீழ்ப்படிதலும் அவருடைய விருப்பத்திற்கு
ஏற்ப வாழ்வதுமே உயர்ந்த உறவு என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது தாயாகிய கன்னி மரியாவின் பரிந்துரையின் வழியாக,
இறையுடனான என் ஆன்மீக உறவின் ஆழ்ந்த மறைபொருளுக்குள்
என்னை இன்னும் ஆழமாக வழிநடத்துவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
