அடையாளங்களில் அல்ல, ஆண்டவரில் நம்பிக்கை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 16ஆம் வாரம் – திங்கள்
மீக்கா 6: 1-4, 6-8
மத்தேயு  12: 38-42

அடையாளங்களில் அல்ல, ஆண்டவரில் நம்பிக்கை!

முதல் வாசகம்.

இன்றைய வாசகத்தில், ஆண்டவர் தம் மக்களிடம், "நான் உனக்கு என்ன
குறை செய்தேன்?" என்று கேட்டு, தம்முடைய அன்பையும் மீட்புச்
செயல்களையும் நினைவூட்டுகிறார். இறைவன் பலிகளையோ வெளிப்புற
சடங்குகளையோ விரும்பவில்லை.

மாறாக, நீதியுடன் நடப்பதும், இரக்கத்தை ஏற்பதும், , தாழ்மையுடன்
இறைவனோடு வாழ்வதுமே அவருக்குப் பிரியமான உண்மையான
வழிபாடு என்பதை இறைவாக்கினர் மீக்கா வலியுறுத்துகிறார்.

நற்செய்தி.

மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவிடம் ஓர்
அடையாளத்தை (அற்புதத்தை) கேட்டபோது, அவர்களின்
நம்பிக்கையின்மையைக் கண்டித்து, யோனா இறைவாக்கினரின்
அடையாளம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறுகிறார்.

யோனா மூன்று நாட்கள் பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல்,
மானிடமகனான இயேசுவும் மூன்று நாட்கள் பூமியின் மடியில் இருப்பார்
என்று தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை முன்கூட்டியே
அறிவிக்கிறார். மேலும், நினிவே மக்கள் யோனாவின் போதனையைக்
கேட்டு மனந்திரும்பினார்கள்; சாலொமோனின் ஞானத்தைக் கேட்க
தெற்கின் அரசி வந்தாள். ஆனால், அவர்களைவிடப் பெரியவராகிய
இயேசு தங்களிடையே இருந்தும் அவரை ஏற்காதவர்களை அவர்
எச்சரிக்கிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவன் மீக்கா இறைவாக்கினர் வழியாக
மக்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார்: "நான் உனக்கு
என்ன குறை செய்தேன்?" என்று. பின்னர், பலிகளையும்
காணிக்கைகளையும் விட இறைவன் விரும்புவது என்ன என்பதை
தெளிவாகச் சொல்கிறார்: நீதியைச் செயல்படுத்துதல், இரக்கத்தை
வெளிப்படுத்துதல், தாழ்ச்சியோடு இறைவனோடு நடத்தலே
மேலானவை.

நற்செய்தியில், மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவிடம் ஒரு
அடையாளத்தை வேண்டுகின்றனர். ஆனால், ஏற்கனவே அவர்களுக்கு
முன்பாக பல அற்புதங்களைச் செய்திருந்தாலும், அவர்கள் நம்ப
மறுத்தனர்.

இயேசு வல்ல செயல்கள் செய்து காட்டுவதற்குப் பதிலாக, “யோனா
இறைவாக்கினரின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும்
கொடுக்கப்படாது” என்று கூறுகிறார். உண்மையில், இது அவரது
மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறிப்பதாகும். அதுவே,
அவர்களுக்கான உண்மை அடையாளமாக விளங்கும் என்று இயேசு
கருதியிருக்கலாம்.

ஆம், இயேசு அவரது வாழ்வின் மறைபொருளை ஆழமாகச் சிந்திக்கவும்,
தூய ஆவியின் வெளிப்பாட்டிற்கு மனதைத் திறக்கவும், நம்பிக்கையுடன்
பதிலளிக்கவும் அவர்களை இயேசு அழைத்தார். அந்த சமயத்
தலைவர்களில் சிலர் பின்னர் தங்கள் இதயங்களைத் திறந்து இயேசுவை
மெசியாவாக ஏற்றிருக்கலாம். ஆனால் அவர்களில் முரண்பாடு
தென்பட்டது. யோனாவின் போதனையைக் கேட்டு நினிவே மக்கள்
மனம் மாறினர்; ஆனால், அவர்களை விடப் பெரியவரான இயேசு
அவர்களிடையே இருந்தும் பலர் மனம் மாறவில்லை.

எனவேதான், “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச்
சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக,
விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே
செல்வர்” (மத் 7:21) என்றார் ஆண்டவர்.

இந்த இரண்டு வாசகங்களும் நமக்கு ஒரே செய்தியை வழங்குகின்றன.
இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது வெளிப்புற சடங்குகளோ, புதிய
அற்புதங்களைத் தேடுவதோ அல்ல. அவருடைய வார்த்தையைக் கேட்டு
மனம் மாறி, நீதியுடனும் இரக்கத்துடனும் வாழும் உண்மையான சீடத்துவ
வாழ்வு.

இறைவேண்டல்.

ஆண்டவரே, வெளிப்புற அடையாளங்களைத் தேடாமல், உமது
வார்த்தையை நம்பி, நீதியுடனும் இரக்கத்துடனும், தாழ்மையுடன்
உம்மோடு நடக்க எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.

Tamil Survey Popup Image