அடிமட்ட மக்களிடமிருந்தே பாலம் கட்டும் பணி தொடங்க வேண்டும் – பாகிஸ்தான் டொமினிக்கன் அருட்பணியாளர் | FABC | Veritas Tamil
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஜூலை 20 முதல் 26 வரை நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப் பேரவையை முன்னிட்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த டொமினிக்கன் அருட்பணி ஜேம்ஸ் சன்னான், உண்மையான "பாலம் கட்டும் பணி" அடிமட்ட மக்களிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒத்திசைவான மனமாற்றத்திற்கும் ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் கட்டுவோராகவும் அழைக்கப்படுகிறோம் என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இப்பொதுப் பேரவையை முன்னிட்டு, Radio Veritas Asia (RVA)க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் தனது அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துள்ளார்.
அருட்பணி ஜேம்ஸ் சன்னான், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் கிறிஸ்தவ–முஸ்லிம் நல்லுறவையும் சமய நல்லிணக்கத்தையும் மேம்படுத்தி வரும் முன்னணி சமாதானப் பணியாளர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
பாலம் கட்டுவது என்பது ஒரு கருத்தாக மட்டும் இல்லாமல், அன்றாட வாழ்வில் பொறுமை, உடனிருப்பு மற்றும் செயல்மிக்க ஈடுபாட்டின் வழியாக வெளிப்படும் பணியாகும் என்று அவர் கூறுகிறார்.
லாகூரில் இயங்கி வரும் சமாதான மையத்தின் மூலம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து பரஸ்பர மரியாதையையும் புரிதலையும் வளர்த்துக் கொள்கின்றனர். சமூகத்தில் பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும்போது, மதத் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் இணைந்து செயல்படுவதன் மூலம் மோதல்கள் பெரிதாகாமல் தடுக்கப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.
1977ஆம் ஆண்டு, இளம் குருத்துவ மாணவராக இருந்தபோது, முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட பாகிஸ்தானில் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆழமான அழைப்பை உணர்ந்ததே தனது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
மத தீவிரவாதம், வன்முறைகள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், சமாதானத்தின் பாதையை விட்டு விலகக் கூடாது என அருட்பணி ஜேம்ஸ் சன்னான் வலியுறுத்தினார்.
"இருளை சபிப்பதை விட, நம்பிக்கையின் ஒரு விளக்கை ஏற்ற வேண்டும்" என்ற எண்ணத்தோடு, சமாதான மையங்கள், சமய நல்லிணக்க ஆணையங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
மதச் சுதந்திரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், கட்டாய மதமாற்றங்கள், கட்டாயத் திருமணங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானில் இளைஞர்களை சமாதானத் தூதர்களாக உருவாக்குவதற்கு கருத்தரங்குகள், தேசிய மாநாடுகள், பிற மதத் தலைவர்களுடன் நேரடி சந்திப்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உரையாடல் சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் எடுத்துக்காட்டி, அடுத்த தலைமுறையினரை இந்தப் பணியில் ஈடுபட ஊக்குவித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆசியா முழுவதும் சமய நல்லிணக்க உரையாடலை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குறிப்பாக கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில், சமய உரையாடல் என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல; அமைதியான இணை வாழ்விற்கான இன்றியமையாத திருப்பணியாகும் என்று வலியுறுத்தினார்.
