ஆழமான நம்பிக்கையின் அடையாளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

08 அக்டோபர் 2026
 
கலாத்தியர் 3: 1-5
லூக்கா 11: 5-13


 விடாமுயற்சியுள்ள இறைவேண்டல் – ஆழமான நம்பிக்கையின் அடையாளம்!

 
முதல் வாசகம்.


இவ்வாசகத்தில், பவுல் கலாத்தியர்களிடம், கிறிஸ்துவின் சிலுவைப் பலியை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட கலாத்தியரை, இப்போது ஏன் திருச்சட்டத்தின்  செயல்களால் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ முயற்சிக்கிறீர்கள் என்று வினவுகிறார். ‘தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனித முயற்சியால் நிறைவு செய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா?’ என்று கேட்கிறார்.


நற்செய்தி.


நேற்று ஒரு மாதிரி  இறைவேண்டலைத் தந்த இயேசு, இன்று இறைவேண்டலில் இருக்க வேண்டிய தன்மையை விவரிக்கிறார். அவர் தம் சீடர்களுக்கு  இறைவேண்டலில் விடாமுயற்சியின் வசியத்தை வலியுற்றுத்துகிறார்.  இதனை விவரிக்க நள்ளிரவில் நண்பனிடம் அப்பம் கேட்கும் மனிதனின் உவமையை கையாள்கிறார். கடவுளிடம் மனம் தளராது கேட்டுக்கொண்டே இருக்கிறவருக்கு தேவையானது கிடைக்கும் என்பதை விளக்குகிறார். பின்னர், 

•    கேளுங்கள் — உங்களுக்குக் கொடுக்கப்படும்.
•    தேடுங்கள் — நீங்கள் கண்டடைவீர்கள்.
•    தட்டுங்கள் — உங்களுக்குத் திறக்கப்படும். என்றும், 

நமது மண்ணுலக தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு தீயவற்றை கொடுக்காமல்  நல்லவற்றைக் கொடுப்பதைப் போல,  விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!” என்று இறைவேண்டலில் தன்மையை எடுத்துரைக்கிறார்.  


சிந்தனைக்கு.


இறைவேண்டல் என்பது  கடவுளிடம் கொண்ட உரையாடல். அது வெறுமனே, போரப்போக்கில் நாலு வார்த்தைகளை அடுக்கி விட்டு போவதல்ல. இறைவேண்டலில், இயேசு முதலில் வலியுறுத்தும் பண்பு விடாமுயற்சி ஆகும். எதிர்பாராத விதமாக ஒரு விருந்தினர் வந்ததால், அவருக்குக் கொடுக்க அப்பம் கேட்பதற்காக நள்ளிரவில் தன் நண்பனின் கதவைத் தட்டும் ஒருவனைப் பற்றி அவர் ஓர் உவமையைக் கூறுகிறார். நண்பன், கதவு ஏற்கனவே பூட்டப்பட்டுவிட்டது என்றும், தானும் தன் குடும்பத்தினரும் தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்றும் பதிலளிக்கிறான் வீட்டுக்குச் சொந்தக்காரர்.  இருந்தபோதிலும், அந்த மனிதன் விடாமல் தொடர்ந்து கேட்டால், வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறகிறான்.


அப்போது இயேசு கூறுகிறார்: “அவன் தன் நண்பன் என்பதற்காக எழுந்து அப்பங்களைக் கொடுக்காவிட்டாலும், அவனுடைய விடாமுயற்சியின் காரணமாக அவனுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பான்” என்று உறுதிபட கூறுகிறார்.  இங்கு “விடாமுயற்சி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையை இன்னும் ‘ துணிச்சலான விடாமுயற்சி” என்று பொருள்படுத்தலாம். இது தொந்தரவு செய்வதையோ, தொடர்ந்து நச்சரிப்பதையோ குறிக்கவில்லை; மாறாக, நம்பிக்கையிலிருந்து பிறக்கும் உறுதியான வேண்டுகோளை குறிக்கிறது.


அவர், இன்று நமக்கு அறிவிறுத்துவது, ‘கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்’ என்பதாகும். எறும்பூரக் கல்லும் தேயும் என்பார்கள். ஆம், எறும்புகள் தொடர்ந்து நடந்தால் கல்கூடத் தேய்ந்து பாதை உருவாகும். அவ்வாறே, நம்மில் யாருமே தொடர்ந்து முயற்சி செய்தால் அதற்கான பலன் கட்டாயம் கிடைக்கும். இதை திருவள்ளுவரும், ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்’ (குறள் 619) என்று போதித்தார்.


ஆனாலும்,   இறைவேண்டலில், விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் கேட்டால், நாம் கேட்பதெல்லாம் கடவுள் உடனே கொடுப்பதில்லை.  நம்முடைய விடாமுயற்சி வேண்டுதலால், கடவுள் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப செயல்படச் செய்ய முடியாது. அப்படியானால், இயேசு ஏன் இப்படிப் பேசுகிறார்?


முதலில் இயேசு, “நீங்கள் கேட்டதெல்லாம் அப்படியே கிடைக்கும்” என்று மட்டும் கூறவில்லை. மாறாக, நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன், கடவுளை நம்பி கேட்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார். நமது நன்மைக்காக, கடவுள் விரும்புவதை அவர் தடையில்லாமல் தருவார். நமது எண்ணம், செயல்பாடு நமக்கோ அல்லது பிறருக்கோ தீமையாக அமையுமானால், அதை அறிந்திருக்கும் கடவுள் நம் மன்றாட்டை ஏற்பதில்லை. 


கடவுள் நமது தேவை அறிந்து நன்மைகளை, கொடைகளை அருள்பவர். எனவே, இறைவேண்டலில் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் காத்திருக்க வேண்டும். காலம் கனியும் நேரம் வரும். நற்செய்தியில் அந்த வீட்டுக்காரர்  ‘அப்பம்’ (உணவு) ஏதும் இல்லை என்று கூறவில்லை. எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று என்றுதான் பதிலாகத் தருகிறான். ஆகவே, பூட்டப்பட்ட கதவு திறக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் கேட்ட உணவு கிடைக்கும்.


முதல் வாசகத்தில், புனித பவுல், “உங்களுக்குள் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உங்கள் கண்முன் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும்போது, உங்களை மயக்கியவர் யார்?” என்று கேட்கிறார். அவர்கள் நம்பிக்கையினால் கடவுளின் ஆவியைப் பெற்றவர்கள். ஆனால் பின்னர், தங்கள் சொந்த முயற்சிகளையும் மனிதச் செயல்களையும் நம்பத் தொடங்கினர். இத்தகைய அறைகுறை நம்பிக்கை கொண்டோரை அறிவிலிகள் என்கிறார் பவுல். நேர்மையான கோரிக்கைகளைக் கடவுள் கண்ணோக்குவார்.


எனவே, நமது வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, “கடவுளே, ஏன் இது நடந்தது?” என்று கேட்டு கேட்டு சோர்வடைவதைவிட , “ஆண்டவரே, இந்தச் சூழ்நிலையில் என்னை வழிநடத்தும் தூய ஆவியைத் தாரும்,  உமது திருவுளத்தை அறிந்து அதை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையைத் தாரும்” என்று மன்றாடுவதே ஏற்புடையதாகும். ஆகவே,  நேர்மையான, இறைவேண்டலில் சோர்ந்து போகாமல் கேட்போம், தேடுவோம், தட்டுவோம். 


இறைவேண்டல்.


ஆண்டவரே, உம்மீது முழு நம்பிக்கை வைத்து கேட்கும் இதயத்தையும், உமது பதிலை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையையும் எனக்குத் தாரும். ஆமென்.

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image