ஆதரவற்றோரின் தாய்| அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
ஆதரவற்றோரின் தாய்
1948 - ஆம் ஆண்டு வீட்டுக்கு வேண்டாத பெண் பிள்ளையாகப் பிறந்தார் சிந்துத்தாய். பத்து வயதில் முப்பது வயது ஆணுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இருபது வயதில் முழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரால் கொடுமையாக அடித்து வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்.
ஒரு வீட்டருகில் இருந்த மாட்டுத்தொழுவத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தொப்புள் கொடியை அறுத்தெடுக்கக்கூட யாருமில்லை. தெருவில் கிடந்த ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தொப்புள் கொடியை அறுத்துவிட்டு, சில கிலோமீட்டர் தள்ளியிருந்த தம் தாய் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரை ஏற்றுக்கொள்ள யாருமில்லை.
கைக்குழந்தையோடு உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காகத் தெருவோரம் பிச்சை எடுத்தார். அப்போதுதான் கையிலே தட்டு ஏந்தி நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிச்சை எடுப்பதைக் கண்டார். அவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்ட அநாதைகள். தன்னுடைய குழந்தைக்கு மட்டுமின்றி, வீதியில் சுற்றித் திரிந்த அத்தனை குழந்தைகளுக்காகவும் பிச்சை எடுத்தார். காலப்போக்கில் அந்தக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்தார். இதனால் பலராலும் 'ஆதரவற்றோரின் தாய்' என்று அழைக்கப்படலானார். தன் சொந்தப் பிள்ளையையும் ஆதரவற்ற குழந்தைகளின் கூட்டத்தில் வளர்த்தார்.
தற்போது சிந்துத்தாய்க்கு 207 மருமகன்கள், 36 மருமகள்கள், 1000-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் இவருடைய கணவர் இவரைத் தேடி வந்து தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டதாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டார். எல்லாக் குழந்தைகளையும் அன்போடு அரவணைத்துப் பழகிய சிந்துத்தாய். தன் கணவரையும் ஒரு குழந்தையைப்போல மன்னித்து ஏற்றுக்கொண்டார்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
