பெண்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் -இயேசு சபை அருட்பணியாளர் வலியுறுத்தல் | FABC | Veritas Tamil

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஜூலை 20 முதல் 26 வரை நடைபெறும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது பொதுப் பேரவையை முன்னிட்டு, இந்திய இயேசு சபை அருட்பணியாளர் அருட்பணி செட்ரிக் பிரகாஷ், பெண்களுக்கு திருச்சபையில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆணாதிக்க மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Radio Veritas Asia (RVA)க்கு அளித்த சிறப்பு நேர்காணலில், ஆசியத் திருஅவை உண்மையான ஒன்றிணைந்த பயண மனமாற்றத்தை (Synodal Conversion) நோக்கிச் செல்ல விரும்பினால், முதலில் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

குஜராத் இயேசு சபையைச் சேர்ந்த அருட்பணி செட்ரிக் பிரகாஷ், மனித உரிமைகள், சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்காக நீண்ட காலமாகப் பணியாற்றி வருபவர். திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கிய ஒன்றிணைந்த பயணத்திற்குப் பின்னர், இந்தியாவில் ஒன்றிணைந்த பயணம்  திருஅவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

FABC பொதுப் பேரவையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக, பெண்களுக்கு திருஅவையில் உரிய பொறுப்புகளும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.உண்மையான ஒன்றிணைந்த பயண மனமாற்றம் என்பது நிர்வாக மாற்றங்களால் மட்டுமே ஏற்படுவதல்ல; மாறாக, நற்செய்தியின் வெளிச்சத்தில் கேட்கவும், பகுத்தறியவும், தேவையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பதே அதன் அடிப்படை என்றார்.

ஒன்றிணைந்த பயணம்' (Synodality) என்ற சொல் கிரேக்க மொழியின் *Synodos* என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அதற்கு "ஒன்றாகப் பயணிப்பது" என்பது பொருள். திருஅவையின் பணி தனிநபர் முடிவுகளை மையமாகக் கொண்டதல்ல; மாறாக, அனைவரும் இணைந்து இறையருளை உணர்ந்து செயல்படுவதே அதன் உண்மையான அடையாளம் என்று அவர் கூறினார்.

திருஅவை, ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலை அதிக கவனத்துடன் கேட்க வேண்டும் என்றும், பொதுநிலையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நல்லெண்ணம் கொண்ட அனைவருடனும் உரையாடலை வளர்த்தல், படைப்பைப் பாதுகாத்தல், அநீதி, சுரண்டல், வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுப்பது ஆகியவை ஒன்றிணைந்தத் திருஅவையின்யின் அடையாளங்களாக இருக்க வேண்டும் என்றார்.குருத்துவ மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையைத் தவிர்த்து, பொதுநிலையினரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இதன்மூலமே உண்மையான ஒன்றிணைந்தத் திருஅவையின்யை உருவாக்க முடியும் என்றார்.

திருத்தந்தை பிரான்சிஸின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய அவர், "ஒன்றிணைப்பது என்பது ஒன்றாக நடப்பது. அந்தப் பயணத்தில் தூய ஆவியின் குரலைக் கேட்டு, தேவையான மாற்றங்களை பணிவுடன் ஏற்றுக்கொள்வதே திருச்சபையின் அழைப்பு" என்று நினைவூட்டினார்.மேலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் பகிரப்பட்ட பொறுப்புகள் ஆகியவை திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tamil Survey Popup Image