நாம் திக்கற்ற மக்களுக்கு நம்பிக்கையின் ஒளி! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 13ஆம் வாரம் – செவ்வாய்
 

ஓசேயா 8: 4-7, 11-13

மத்தேயு 9: 32-38

நாம், திக்கற்ற மக்களுக்கு நம்பிக்கையின் ஒளி!

முதல் வாசகம்.

ஓசேயா  நூலின் இன்றைய வாசகத்தில்,  இஸ்ரயேல் மக்கள் அவர்களைப் பராமரித்து வந்த கவுளைப்  புறக்கணித்து, தாங்களாகவே அரசர்களையும் தலைவர்களையும் தேர்ந்தெடுத்து, சிலைகளை உருவாக்கி வணங்கியதற்காக கடவுள் (யாவே) அவர்களைக் கண்டிக்கிறார். அவர்கள் செய்த பாவங்களின் விளைவாக அழிவையும் தண்டனையையும் அறுவடை செய்வார்கள் என்று இறைவாக்கினர் ஓசேயா எச்சரிக்கிறார்.

அவர்கள் மனந்திரும்பாமல் இருப்பதால், கடவுள் அவர்களின்  பலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் புறக்கணிப்பிற்குக் காரணமாக கட்டிக்கொண்ட  பாவங்களுக்காக கணக்குக் கேட்கப்பட்டு, அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள் என்ற செய்தியை ஓசேயா விவரிக்கிறரார்.

நற்செய்தி.

மத்தேயு 9:32–38 பகுதியில், பேய் பிடித்ததால் பேச முடியாத ஒருவரை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இயேசு அந்தப் பேயைத் துரத்த, அந்த மனிதன் பேசத் தொடங்குகிறான். இதைக் கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டு, "இஸ்ரவேலில் இதுபோன்றது ஒருபோதும் காணப்படவில்லை" என்று கூறுகிறார்கள். ஆனால் பரிசேயர்கள், இயேசு பேய்களின் தலைவனின் அதிகாரத்தினால் பேய்களைத் துரத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இயேசுவோ, அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள் என்றும் தொடரந்து அவர்களை வழிநடத்த  “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும்  இறைவனை விட்டு விலகும் வாழ்க்கை வெறுமையையும் அழிவையும் தரும் என்ற படிப்பினையைத் தருகின்றன.

முதல் வாசகத்தில், ஓசேயா இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்கள்  இறைவனை மறந்து, பொன்னாலும் வெள்ளியாலும் சிலைகளை உருவாக்கி வழிபட்டதை விவரித்தார். இறைவன் இல்லாத செல்வமும், அதிகாரமும், திட்டங்களும் இறுதியில் வீணாகிவிடும் என்பதை "காற்றை விதைத்தவர்கள் சூறாவளியை அறுப்பார்கள்" என்ற  உருவகத்தின் மூலம் எடுத்துரைக்கிறர்.

நம்மிலும் பலர் பணமே எல்லாம், செல்வமே மேலானது என்ற நினைப்பில் இறைவழிபாட்டில் நிலைகுத்துவதில்லை.  பல நேரங்களில் நம் முடிவுகளை இறைவனின் விருப்பத்திற்கேற்ப எடுக்காமல், நம் சுயநலத்திற்கும் உலகப் புகழுக்கும் ஏற்ப எடுக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை.  அதன் விளைவாக நம்மில் பலருக்கு மனநிறைவும் அமைதியும் இல்லாமல் போகிறது.

நற்செய்தியில் இயேசு பேச முடியாத ஒருவரை விடுவிக்கிறார். பேய் வெளியேறியவுடன் அவர் பேச ஆரம்பிக்கிறார். இந்த அற்புதம் உடல் குணமாக்குதல் மட்டுமல்ல; மனிதனை கட்டிப்போட்டிருந்த தீமையின் சக்தியிலிருந்து விடுதலை அளிப்பதாக உள்ளது.  ஆனால் இந்த நன்மையைக் கண்டும் பரிசேயர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இயேசுவின் செயல்களைத் தவறாகப் புரிந்துகொண்டனர்.  

நற்செய்தியின் அடுத்தப் பகுதியில்,  இயேசு நகரங்களையும் கிராமங்களையும் சுற்றிப் பார்த்தபோது, மக்கள் "மேய்ப்பர் இல்லாத ஆடுகளைப்போல்" சோர்ந்து கிடப்பதைக் கண்டு அவர்கள்மேல் பரிவு கொண்டார் என்றும் அறிகிறோம். ஆண்டர் பரவிரக்கமுள்ளவர்.   மனிதர்களின் துயரத்தைப் பார்த்து அவர் அகமகிழ்பவர் அல்ல.   

ஒவ்வொரு கிறிஸ்தவரும் இறைவனுடைய அறுவடையில் ஒரு தொழிலாளி என்பதை இன்று நினைவுகூர்கிறோம்.  நம் குடும்பத்தில், பணியிடத்தில், பங்கில், சமுதாயத்தில் இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் எடுத்துச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. நம் வார்த்தைகள், நம் செயல்கள், நம் மன்னிப்பு, நம் சேவை ஆகியவை பலருக்கு இறைவனை அனுபவிக்கச் செய்யும் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும், ஏற்க வேண்டும்.

ஆகவே, இன்றைய வாசகங்களின் அடிப்படையில் எச்சூழலிலும் இறைவனை விட்டு விலகாமல், எல்லா முடிவுகளிலும் அவருக்கு முதலிடம் கொடுப்போம். இறைவனின் நற்பணியில், அவரது  திராட்சைத் தோட்டமான திருஅவையில் ஒவ்வொருவரும் உண்மையான தொழிலாளர்களாக இருந்து, நம் வாழ்க்கையால் நற்செய்தியை அறிவிக்க முயல்வோம்.

இறைவேண்டல்.

ஆறுவடையின் நாயகரே, பலருக்கு நம்பிக்கையையும் அன்பையும் கொண்டு சேர்க்கும் அறுவடைத் தொழிலாளராக என்னை திடப்படுத்தவீராக, ஆமென்.

 

ஆர். கே. சாமி (மலேசியா)

ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்

+6 0122285452