நமக்கானது மனித தீர்ப்பல்ல, இறைவனின் தீர்ப்பு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
2 ஜூலை 2026
பொதுக்காலம் 13ஆம் வாரம் – வியாழன்
ஆமோஸ் 7: 10-17
மத்தேயு 9: 1-8
நமக்கானது மனித தீர்ப்பல்ல, இறைவனின் தீர்ப்பு!
முதல் வாசகம்.
ஆமோஸ் இறைவனின் நீதித் தீர்ப்பை வடநாடான இஸ்ரயேலில் துணிவுடன் அறிவித்தபோது, பெத்தேலின் குருவான அமட்சியா அவரை ‘காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு’ என்று எதிர்த்து, தென் நாடான யூதாவுக்குத் திரும்பிச் செல்லும்படி மிரட்டல் விடுகிறான். அதற்கு ஆமோஸ், தாம் இறூவாக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும், இறைவனே தம்மை ஆடுகளை மேய்த்த இடத்திலிருந்து அழைத்து இஸ்ரயேலுக்குத் இறைவாக்குரைக்க அனுப்பினார் என்றும் கூறினார்.
வார்த்தையைத் தடுக்க முயன்ற அமத்சியாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் கடுமையான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மேலும், இஸ்ரயேல் நாடு பாவத்தின் காரணமாக அழிக்கப்பும் என்று இறைவன் எச்சரித்ததாக ஆமோஸ் விவரிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு தமது ஊருக்குத் திரும்பியபோது, முடக்குவாதமுற்ற (பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட) ஒருவரை மக்கள் அவரிடம் கொண்டு வருகின்றனர். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு, முதலில், “மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று கூறுகிறார். இதைக் கேட்ட சில மறைநூல் அறிஞர்கள், இயேசு இறைவனைத் தூற்றுகிறார் என்ற முடிவுக்கு வருகின்றனர்.
அவர்களுடைய எண்ணங்களை அறிந்த இயேசு, ‘மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நிரூபிக்க, அந்தப் பக்கவாத நோயாளியிடம், "எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்" என்று கட்டளையிடுகிறார். உடனே அவர் குணமடைந்து எழுந்து செல்கிறார். இதைக் கண்ட மக்கள் அச்சமடைந்து, இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளை மாட்சிபடுத்தினர்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் மக்களின் மனமாற்றத்திற்கு கடவுளின் கட்டளையை ஏற்று இறைவாக்குரைத்த ஆமோஸ் இறைவாக்கினரை, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு" என்று விரட்டினர். அந்த அன்னிய தெய்வங்களுக்குப் பணிவிடை செய்த குருவான அமட்சியா ஆமோசை மரியாதையுடன் அழைக்கவில்லை; அவமதிக்கும் விதமாக "காட்சி காண்பவனே" என்று அழைக்கிறான்.
மேலும் "இங்கிருந்து போய்விடு" என்பது, உண்மையைச் சொல்லும் குரலை ஒடுக்க முயற்சிக்கும் அதிகாரத்தின் மனநிலையை காட்டுகிறது. அமட்சியா என்பவன் பெத்தேலில் எருசலேம் ஆலயத்திற்கு எதிராக கட்டப்பட்ட பாகால் செய்வ ஆலயத்தில் பணிபுரிந்தவன்.
நற்செய்தியிலோ, கலிலேயா ஏரியைக் கடந்து, நேற்று, பேய்ப்பிடித்திருந்த இரு மனிதர்களை விடுவிக்கச் சென்ற இயேசு, அந்தச் சிறிய பயணத்தை முடித்துவிட்டு, தமது “சொந்த ஊருக்கு” திரும்பினார். அந்த ஊர் பெரும்பாலும் கப்பர்நாகூமாக இருக்கலாம்.
இங்கே, இயேசுவின் நற்பணியில் நம்பிக்கை வைக்க மறுக்கும் மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று குற்றம் சாற்றி பழிக்கிறார்கள். இயேசு உடல் நோய்களை மட்டுமல்ல, பாவத்தையும் மன்னிக்கும் தெய்வீக அதிகாரம் உடையவர் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.
சாதாரண மனிதர்களின் பார்வையில், இயேசு ஒரு சாதாரண மனிதராகவே தோன்றினார். ஆனால், தந்தையாகிய இறைவனின் பார்வையில், அவர் தாழ்ச்சியால் தம்மை மறைத்துக்கொண்ட இறைமகன். அவரது உண்மையான மாட்சிமை இன்றும் பலருடைய கண்களுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கிறது. ஏன் நமக்கும் தெளிவாகப் புரிவதில்லை.
இயேசுவின் வாழ்வோடு ஒன்றிணைந்து, அவருடைய நற்பண்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, அக்கறை, தாராள மனப்பான்மை ஆகியவற்றை நம் வாழ்வில் பின்பற்றி, ஆமோசைப் போல துணிவுடன் செய்படும்போது, நமது நற்பணிகளும் இறைவனின் அருளால் நிரம்பியதாக மாறும்.
இறைவனின் அழைப்பு மனித அதிகாரத்தைவிட உயர்ந்தது. அவருடைய உண்மையைத் தைரியமாக அறிவிப்பவர்களை இறைவன் தாமே உறுதிப்படுத்துகிறார் என்பதை இன்று நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உம்மில் என் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, ஆமோஸ் இறைவாக்கினரைப் போல் என்றும் துணிவுடன் செயல்படும் வரத்தை எனக்குத் தாரும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452