ஆண்டவர் நமது அடைக்கலப் பாறை | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 132ஆம் வாரம் – செவ்வாய்

ஆமோஸ் 3: 1-8; 4: 11-12
மத்தேயு 8: 23-27

ஆண்டவர் நமது அடைக்கலப் பாறை!
 
முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகமானது, ஆமோஸ் இறைவாக்கினர் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆமோஸ் ஒரு சாதாரண ஆடு மேய்ப்பவராக இருந்தாலும், இறைவனால் அழைக்கப்பட்ட வல்லமைமிக்க இறைவாக்கினர். இவர் சிறிது காலம் வடநாடான இஸ்ரயேலில் இறைவாக்குரைத்தார். சமூக அநீதி, ஏழைகளின் ஒடுக்குமுறை மற்றும் போலியான வழிபாட்டை அவர் துணிவுடன் கண்டித்தார்.

இன்றைய வாசகப் பகுதியில், இஸ்ரயேல் மக்களை ஆண்டவர் தம் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர்கள் செய்த பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார் என்று ஆமோஸ் அறிவிக்கிறார். எந்த நிகழ்வும் காரணமின்றி நடைபெறாது; அதுபோல இறைவாக்கினரும் ஆண்டவரின் அழைப்பினாலேயே பேசுகின்றனர். பல எச்சரிக்கைகள் கொடுத்தும் மனந்திரும்பாத மக்களிடம், "உன் கடவுளைச் சந்திக்கத் தயாராகு" என்று ஆண்டவர் இறுதி அழைப்பை விடுக்கிறார் என்று ஆமோஸ் விவரிக்கிறார். 

நற்செய்தி.

இயேசு படகில் சீடர்களுடன் சென்றபோது கடலில் கடும் புயல் எழுந்தது. பயந்த சீடர்கள் அவரை எழுப்ப, இயேசு காற்றையும் கடலையும் அதட்டினார்; உடனே அமைதி உண்டானது. இதைக் கண்ட சீடர்கள், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே! இவர் எத்தகையவர்?" என்று வியந்து பேசியதை மத்தேயு எடுத்துரைக்கிறார். 

சிந்தனைக்கு.

இனைறய நற்செய்தியில்,  கடலில் சீடர்களுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வில்  இயேசுவும் சீடர்களும் படகில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது திடீரென கடலில் கொடிய புயல் எழுகிறது. அலைகள் படகை மூழ்கடிக்கும் அளவுக்கு உயர்ந்தன. ஆனால் அந்த அச்சமூட்டும் சூழ்நிலையிலும் இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார் என்று அறியும் போது இந்நிகழ்வில் நாக் கற்றுக்கொள்வதென்ன என்ற கேள்வி எழுகிறது. 

இயேசுவின் உறக்கம், அவர் பயப்படாதவர் என்பதையும், தந்தையாகிய இறைவனின் பாதுகாப்பில் முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார் என்பதையும் காட்டுகிறது. மறுபுறம், அனுபவமிக்க மீனவர்களாக இருந்த சீடர்களே அச்சத்தில் திகைத்து, நடுங்கினர். அப்போது அவர்கள் இயேசுவை எழுப்பி, "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்; நாங்கள் அழிந்துபோகிறோம்!" என்று மன்றாடினர்.

இந்த நிகழ்வு நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும்  ஒரு பாடமாக அமைகிறது.  வாழ்க்கையில் திடீர் சோதனைகள், நோய்கள், துன்பங்கள், தோல்விகள் என்ற "புயல்கள்" எழும்போது, சில நேரங்களில் இறைவன் அமைதியாக இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் அவர் நம்மை கைவிட்டுவிடவில்லை. நாமும் சீடர்களைப் போல நம்பிக்கையுடன் அவரை நாடி, "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்" என்று உளமாற மன்றாட வேண்டும். நமது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாகவே இறைவன் பல சோதனைகளை அனுமதிக்கிறார் என்பது நமக்கான இன்றைய நினைவுறுத்தலாக உள்ளது. 

இயேசுவின் அதிகாரமிக்க கண்டிப்பு வார்த்தையால் பெரும் அமைதி உண்டாயிற்று. அந்த அமைதி   கொந்தளித்த அலைகளை மட்டும் அடக்குவதற்காக அல்ல; அதைவிட முக்கியமாக, அச்சத்தால் கலங்கியிருந்த அவரது சீடர்களின் இதயங்களை அமைதிப்படுத்துவதற்காகவே அவரது வார்த்தை ஒலித்தது. "சிறு நம்பிக்கையுள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?" (மத்தேயு 8:26) என்ற அவரது வார்த்தைகள் நமது செவிகளிலும், மனதிலும் ஒலிக்கத்தான் செய்கிறது, இருப்பினும் முழுமையாக அவரில் நம்பிக்கை கொள்ள தயங்குகிறோம். 

ஆமோஸ்  கூறுவத்றகு ஏற்ப,  இறைவனின் குரலைக் கேட்டு இறைவனை நம்பி அச்சத்தை வெல்ல யாம் துணிவு பெற  வேண்டும்.  
 
இறைவேண்டல்.

அன்பான ஆண்டவரே, என் வாழ்க்கையில் எழும் புயல்களிலும் அச்சங்களிலும் நீர் என்னோடு இருப்பதை நான் நம்புகிறேன்.  அமென்.
 

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image