அச்சமின்றி, சான்று பகிரும் திருஅவையாவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பாஸ்கா 2ஆம் வாரம் – சனி
தி.பணிகள்  6: 1-7
யோவான் 6: 16-21


அச்சமின்றி, சான்று பகிரும் திருஅவையாவோம்!
 

முதல் வாசகம்.

 இவ்வாசகத்தில், தொடக்கத் திருஅவை கிறிஸ்தவ சமுதாயத்தில் நம்பிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.. அப்போது கிரேக்க மொழி பேசும் கைம்பெண்கள் (கணவரை இழந்தவர்க்ள) அன்றாட உதவியில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற புகார் எழுகிறது. இதனால் திருத்தூதர்கள், “நாம் இறைவார்த்தையை போதிப்பதைப் புறக்கணித்து விட்டு இவர்களுக்கான  சேவையில் முழுமையாக ஈடுபட முடியாது” என்று கூறி, நல்ல நற்பெயர் உடைய ஏழு பேரைத் தேர்ந்தெடுக்க விழைகிறார்கள். 

எனவே, ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து  திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். இவர்கள் தான் முதல் “உதவி திருத்தூதர்கள்” அல்லது “தியாகோன்கள்” (திருத்தொண்டர்க்ள) எனக் கருதப்படுகிறார்கள் என்று பின்னர் அழைக்கப்பட்டனர். 
 
நற்செய்தி.

இந்த நற்செய்தியில், சீடர்கள் கடலில் கப்பர்நாகுமுக்கு பயணித்தப்போது,  இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசவே, கடல் கொந்தளித்தது. அவர்கள் உயிருக்கு அஞ்சினர்.  

அவ்வேளையில்,  இயேசு கடலின் மேல் அவர்களை நோக்கி நடந்தார்.  இருளில் அவரது உருவம் தெளிவாகத் தெரியாததால், சீடர்கள் வருவது  ‘பேய்’ எனறு மேலும் அஞ்சினர். நிலைறியந்த இயேசு,  “நான்தான், அஞ்சாதீர்கள்” என்று தேற்றினார்.  அவரை படகில் ஏற்றிக்கொண்ட உடனே, அவர்கள் சென்றடைவேண்டிய இடத்தை பாதுகாப்பாக அடைந்தார்கள் என்று யோவான் குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

சீடர்கள் பயணித்த கலிலேயக் கடல் கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய எழுநூறு அடி ஆழமானது. இன்று  இயேசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பின், தன் சீடர்களை மறுகரைக்கு அனுப்பிய அன்று இரவும் கடலில் பெருங்காற்று வீசிற்று.

இயேசு கடல்மீது நடந்து வந்த இந்த நிகழ்வு, யோவான் நற்செய்தியில் இடம்பெறும் ஐந்தாவது அருளடையாளம் என்று அறிகிறோம்.  இதன்மூலம் இயேசு தாம் இறைமகன் மெசியா என்பதை எண்பிப்பதாக நாம் ஏற்க அழைக்கப்படுகிறோம்.  

இதே திருத்தூதர்கள்தான், முதல் வாசகத்தில் கிரேக்க மொழி பேசும் பெண்கள் பந்தியில் சரியாகக் கவனிக்கப் படவில்லை என்ற பிரச்சனை எழுந்தபோது,  இறைவேண்டல் செய்து, திருத்தொண்டர்கள் எழுவரை ஏற்படுத்துவதைக் குறித்து நாம் வாசிக்கின்றோம்.

 நமக்கு ஆபத்துகளோ, பிரச்சனைகளோ வரும்போது அஞ்சக்கூடாது, மாறாக, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது துணையை நாடவேண்டும் என்பது இன்றைய அறிவுறுத்தலாக உள்ளது.  இயேசுவின் சீடர்கள் கோழைகள் அல்ல. அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாக இயேசுவால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.

நாம் கேட்கக்கூடிய மிகவும் ஆறுதலான விடயங்களில் ஒன்று, நம் ஆண்டவர் நம்மிடம், “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ (யோவான் 14:1) என்ற உறுதிமொழியாகும். இது ஆண்டவரின் வாக்குறுதி.

நற்செய்தியில் காணும் சில அடையாளங்களை கூர்ந்து கவனித்தால் நமது கிறிஸ்தவ வாழ்வுக்கான சவால்களில் தெளிவு பெறலாம். யோவான் தனது நற்செய்தியில் ஒளி மற்றும் இருள் ஆகிய உருவகங்களைப்  பயன்படுத்துகிறார். இருள், உலகின் ஒளியான கிறிஸ்துவின் இல்லாமையைக் குறிக்கிறது. இரவில் இருளில், காற்றுக்கும் அலைகளுக்கும் எதிராகப் படகில் துடுப்புப் போடும் திருத்தூதர்கள், நமது வாழ்க்கைப் பயணத்தைக் குறிக்கின்றனர். கடல் என்பது உலகம், படகு என்பது திருஅவை.  இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் சிரமங்களையும் சவால்களையும் பாதுகாப்பாகக் கடந்து செல்ல திருஅவை எனும் படகு இன்றியமையாதது. திருஅவை என்பது இயேசுவின் திருவுடல் என்பதால் இயேசு நமது அரணாகவும் கேடயமுமாக உள்ளார்.   

கிறிஸ்தவ வாழ்வில் துணிவு என்பது வெற்றுப் பேச்சுக்குரியதல்ல. மாறாக நம்மோடு கூட பிறந்த ஒரு  குணமாக ஏற்கப்பட வேண்டும். உண்மைக்குச் சான்று பகிர அஞ்சா நெஞ்சம் இன்றியமையாதது.

சமீபத்தில், உலகமே அஞ்சும்   அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மேற்கொண்ட ஈரான்  போருக்கு மத்தியில் அமைதியை நாடுவதும் வன்முறையை நிராகரிப்பதுமான தனது நிலைப்பாட்டைக் குறித்து துணிவுடன்  குரல் கொடுத்தார் திருத்தந்தை  லியோ 14.  இது திருஅவைக்கான துணிவை வெளிப்படுத்துகிறது.

உண்மைக்குக் குரல் கொடுக்கும் துணிவு நம்மில் இருந்தால்தான் ‘நற்கருணை நமது வாழ்வின் உச்சமும் ஊற்றகவும் உள்ளது’ என்று நம்மால் கூற முடியும். ஏனெனில் நாம் உலகிறகு உப்பாகவும் ஒளியாகவும் உள்ளோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே,  இந்த உலகின் அலைகளையும் இருளையும் நான் கடந்து செல்லும்போது, அனுபவிக்கும் அச்சத்தையும் கவலையையும் வெல்வதற்கான ஒரே பதிலாகவும், ஒரே வழியாகவும் என் வாழ்வில் உமது உடனிருப்பை உணரச் செய்தருளும்.  ஆமென். 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image