மனக் குழந்தையின் பாதிப்பு
நின்று பிடிப்பது மட்டும் அல்ல சில நேரங்களில் கடந்து செல்வதும் வலிமையே – ஹெர்மென் ஹெஸ்ஸே
Inner Child
உங்களுடைய ஏழு வயது குழந்தையை உங்கள் காரை சாலையில் ஓட்டிச் செல்ல அனுமதிப்பீர்களா….
சொல்லும்போதே பதை பதைப்பாக இருக்கிறதல்லவா. ஏழு வயது குழந்தையை காரை ஓட்ட அனுமதிப்பதா, எந்தப் பெற்றோராவது அப்படிச் செய்வார்களா என்று கூறும் முன் உங்கள் வாழ்க்கையை பல நேரங்களில் அத்தகைய சிறு குழந்தையின் பொறுப்பில்தான் கொடுக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா....
நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா…. சிலர் மிகவும் படித்திருப்பார்கள். விளயாட்டு வேடிக்கை என்று எல்லாவற்றிலும் ஆல்ரவுண்டராக இருப்பார்கள். ஆனால் சிறு வயதில் ஒரு முடிவை எடுக்க தயங்குவது போலவே இப்போதும் தயங்குவார்கள். அல்லது ஏதாவது ஒரு முடிவை எடுத்து விட்டு, பின் சிறு பிள்ளைத் தனமான தவறான முடிவை எடுத்து விட்டேன் என்று வருந்திக் கொண்டிருப்பார்கள். படித்த பண்பட்ட அவர்கள் தவறான முடிவை எப்படி எடுத்தார்கள் என்று நீங்கள் வியந்திருப்பீர்கள்.
பல நேரம் உங்களுக்கும் கூட அந்த மாதிரியான ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். வாழ்க்கையில் எவ்வளவோ பக்குவபட்ட பின்பும் பலதும் அறிந்து தெரிந்து கொண்ட பின்பும் ஏன் உங்கள் முடிவுகள் முன்பு போலவே பயனற்று போகின்றன என்று வியந்திருப்பீர்கள். எவ்வளவோ தெளிவாக இருந்தாலும் ஏன் மீண்டும் மீண்டும் எல்லா முடிவுகளும் தவறாகவே போகின்றன என்று தோன்றி இருக்கக் கூடும்.
பல நேரங்களில் பல விதமான அனுபவங்களின் பேரில் உறவுகளுடனும் நண்பர்களுடனும் வேலை பார்க்கும் இடங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களிடம் எப்படி பேச வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று மிகத் தீர்மானமாகத் தயாராக இருந்தாலும், கடைசியில் ஏதாவது ஒன்று பிரச்னையாக மாறி சண்டை சச்சரவுகள் என இல்லாத பிரச்னைகள் எங்கிருந்தாவது வந்து விடுகின்றனவே என உங்கள் மனம் தவித்திருக்கும். என்ன சொன்னாலும் ஏன் தவறாகப் போகிறது என சங்கடமாக இருந்திருக்கக் கூடும்.
என்ன இருந்து என்ன.. என் வாழ்க்கையில் எனக்கு கன்ட்ரோல் இல்லையே.. என்னவோ செய்ய நினைக்கிறேன்.. ஆனால் என்னவோ நடக்கிறது என மனம் வருந்தி இருப்பீர்கள்.
இதற்கு மிக முக்கியமான காரணம் உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனப்பான்மை பல நேரங்களில் உங்களையுமறியாமல் உங்களைத் தன் போக்கில் இழுத்து செல்வதுதான் என்பதை நீங்கள் அறிவீர்களா. இதனை ‘Inner Child Effect' ‘மனக் குழந்தையின் பாதிப்பு' என்கிறது வாழ்வியல்.
அதாவது, சிறு வயதில் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு பிம்பம் உங்கள் மனதில் உருவாகி இருக்கும். நீங்கள் வளர்ந்த பின்பும், சூழல்கள் மாறி இருந்தாலும் சிலவற்றில் அது பற்றிய உங்கள் attitude மட்டும் உங்களிடம் மாறாமல் அப்படியே இருக்கும். உங்களுக்கு முன்பு பிடித்த பொருள் இப்போது மாறி இருக்கலாம். இளவயதில் பொம்மைக் கார் பிடித்திருந்தால் இப்போது உண்மைக் கார் பிடிக்கலாம். ஆனால் அப்போது எப்படி அந்த பொம்மைக் கார் கிடைக்காத போது ஒரு இயலாமையாக இருந்ததோ அதே வகையிலேயே இப்போது உண்மையான கார் வாங்கும் வரை ஒரு இயலாமை உங்கள் மனமெங்கும் நிரம்பி இருக்கும். ஏன் எனக்கு மட்டும் இப்படி எனும் கேள்வி உங்கள் மனதில் தொங்கி நிற்கும்.
உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விஷயம் தவறாக நடந்து இருந்தால், அதிலிருந்து வெளியேறி உங்களை நீங்கள் வேறு எந்த விசயங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாலும் அவற்றிலும் முன்பு நடந்தது போன்ற பிரச்னைகளே மீண்டும் மீண்டும் ஏற்படுவது போலத் தோன்றும்.
கோபம், வருத்தம், பொறாமை என்று பல்வேறு எதிர்மறை உணர்வுகள் சிறு பிள்ளைத்தனமான விஷயங்களுக்கெல்லாம் உங்களுக்குள் தோன்றி, உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றக் கூடிய முடிவுகளை உங்களை எடுக்க செய்யக் கூடும்.
உங்களையும் மீறி ஏதாவது ஒன்றிற்கு மீண்டும் மீண்டும் addicted ஆவதும் புரிந்தும் புரியாமல் ஒன்றால் இழுத்துச் செல்லப் படுவதும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட உங்களைத் தடுமாறச் செய்வதும் ஏன் என்று உங்களுக்குப் புரியாமல் இருக்கும். இதிலிருந்து எப்படி மீள்வது என்று வருந்தி இருப்பீர்கள் உங்கள் செய்கைகளையே உங்களால் நம்ப முடியாமல் இருந்திருக்கும்.
இவையெல்லாம் நீங்களாகச் செய்யவில்லை. உங்கள் மனதில் இன்னும் தங்கிப் போயிருக்கும் inner child இன் வெளிப்பாடே என்கிறது வாழ்வியல்.
இதைப் புரிந்து கொண்டால், இன்றைய உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு என்பது, உங்களிடம் சிறு வயதில் தங்கிப் போன ஏதோ ஒரு விருப்பத்தின் ஏக்கம் அல்லது ஏதோ ஒரு ஆற்றாமையின் வலி அல்லது மனதில் ஆழமாக தங்கிப் போன தீர்க்கப் படாத ஒரு கோபத்தின் குரல் அல்லது என்றோ ஏற்பட்ட அவமானத்தின் அடிச்சுவடு, இன்று எழுந்து பேசுகிறது என்று உங்களுக்குப் பிடிபடும். அன்றைய அந்த உணர்வுகள் மனதில் பாசி போல் படிந்து போயிருப்பது புலப்படும். அது இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் உங்கள் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உதாரணமாக நீங்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போது பட்ட அவமானம், உங்கள் சுற்றம் நட்பு ஆசிரியரென யாராவது உங்களை கடினமாக பேசிய போது உங்களுக்குள் எழுந்த இயலாமை அப்போது நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட சில வைராக்கியமான முடிவுகள் உங்களையுமறியாமல் உங்கள் மனதில் நிரந்தரமாக தங்கி அது இன்று உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் பிரதான முடிவுகளில் வெளிப்படும்.
ஆனால் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு சூழலில் நிகழ்ந்த ஏதோ ஒரு நிகழ்வினை அடிப்படையாக வைத்து இன்றைய நிலையில் எடுக்கும் முடிவுகள் எப்படிச் சரியாக இருக்க முடியும் என்று யோசியுங்கள். என்றோ நடந்த ஒன்றை வைத்து இப்போது உங்கள் முடிவுகளை எடுக்கும் போது அது உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் எப்படியெல்லாம் பாதிக்க கூடும், உங்கள் வளர்ச்சியை அது எந்த வகையில் தடுக்க கூடும் என்பது உங்களுக்குப் பிடிபடும். சிறுபிள்ளை மனப்பான்மையோடு ஒன்றைச் செய்யும் போது, நீங்கள் இதுவரை கற்ற விஷயங்கள் அனைத்தும் எந்தப் பலனும் அற்றதாகி விடுகிறது.
நீங்கள் உங்கள் முந்தைய கால கட்டங்களையும் உங்கள் அன்றைய மனப் பான்மையையும் இப்போதைய காலகட்டங்களையும் இன்றைய மனப்பான்மையையும் அது இரண்டிற்கும் இருக்கக் கூடிய வேறுபாடுகளையும் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களை நீங்கள் முன்பு பார்க்கக் கூடிய கோணத்தையும் இப்போது பார்க்க வேண்டிய கோணத்தையும் அலசிப் பாருங்கள். எது உங்களை தூண்டி விடுகிறது என்பது புரியும். எதனால் உங்களுக்கு எதிர்மறை உணர்வுகள் வருகிறது, எது உங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தில் எத்தனை கற்றாலும் எதிர்நீச்சல் போட்டாலும் மற்றவர்களை விட பின் தங்கிப் போக செய்கிறது, என்பதை அறிந்து அதை சரி செய்ய முடியும். அது உங்கள் communication னையும் உங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தும்.
தவிர, சிறு வயதில் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்களை சரி செய்யும் போது அன்று நீங்கள் அனுபவித்த நேர்மறை எண்ணங்கள் உங்கள் நினைவில் நிறையும். அது இன்றைய வாழ்க்கைக்கான நம்பிக்கையை தரும்..
இன்றால்… அன்றை வெல்லுங்கள்.. நாளை நன்றாகும்!