ஆகஸ்ட் 31 - இவர் தான் காரணம்!

பண்டைய ரோமானிய வரலாற்று நாயகர்களில் நாம் அறியப்பட வேண்டியவர்கள் இருவர். ஒருவர் ஜூலியஸ் சீசர். அடுத்தவர் அகஸ்டஸ் சீசர். ஜூலியஸ் சீசர் கொலை செய்யப்பட்ட ஆண்டு கி.மு.44. பிறகு சீசரின் உறவினர் ஆக்டேவியன் கி.மு. 27இல் பதவி ஏற்றார். இவர்தான் உலக வரலாற்றில் 'அகஸ்டஸ் சீசர்' என அழைக்கப்படுகிறார். இவரது காலம் கி.மு.63 - 14 கி.பி. இவரது பெற்றோர் ஆக்டேவியஸ் - அட்டியா என்பவர்கள். இவரது தாய் அட்டியா (Atia). இவர் சீசரின் நெருங்கிய உறவினர். ஜூலியஸ் சீசர் கொலை செய்யப்படும் போது அகஸ்டஸ் சீசருக்கு வயது முப்பது. சீசர் இவரை தனது வாரிசாக அங்கீகரித்தாலும், இவர் பதவி பெற பலரின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியே இருந்தது.

பிறகு மூன்று பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப் பட்டது. அந்த மூன்று பேரில் அகஸ்டஸ் ஒருவராக ஏற்கப்பட்டார். மற்ற இரண்டு குழு உறுப்பினர்கள் மார்க்கஸ் லெபிடஸ், மார்க் ஆண்டனி என்பவர் களாவர்.

காஸியஸ், புரூட்டஸ் தலையீடு காரணமாக ஒரு உள்நாட்டு யுத்தம் தோன்றியது. இவர்கள் முன்பு ஜூலியஸ் சீசரின் கொலைக்கும் காரணமானவர்கள். இவர்களது நோக்கம், ரோமில் மீண்டும் ஒரு குடியரசைக் கொண்டுவர வேண்டும் என்பதே. ஆனால் இம்முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

ஆட்சிக் குழுவில் இருந்த அகஸ்டஸ், லெவிடஸ், ஆண்டனி மூவரும் ஆட்சிப் பகுதியைப் பிரித்துக் கொண்டனர். இதன்படி ஆக்டேவியன் ஐரோப்பிய ரோம் பகுதிக்கும், லெபிடஸ் ஆப்பிரிக்க ரோம் பகுதிக்கும், ஆண்டனி எகிப்து பகுதியையும் ஆள்வதாக முடிவெடுக்கப்பட்டது.

மார்க் ஆண்டனி எகிப்தினை பலவழிகளில் உயர்த்தி னார். இவர் காலத்தில் அலெக்சாண்டிரியா நகர் பல வழிகளில் புகழ்பெற்றது. அங்கே எகிப்தின் ராணி, உலகப் புகழ்பெற்ற அழகி கிளியோபாட்ரா. அவர் மீது காதல் கொண்டு மணந்துகொண்டார். இவர் கிளியோ பாட்ராவுக்கு பரிசாக ரோமைத் தரப் போகிறார் என்ற வதந்தி பரவியது.

இதுகேட்டு அகஸ்டஸ் சீசர் கோபப்பட்டார். உடனே எகிப்து மீது போர் தொடுத்தார். கி.மு.31இல் ஆக்டியம் யுத்தம் நடைபெற்றது (Battle of Actium). இதில் ஆண்டாரியும், கிளியோபாட்ராவும் தோற்கடிக்கப் பட்டனர்.

இதனால் ஆண்டனியும் கிளியோபாட்ராவும் கி.மு. 30இல் தற்கொலை செய்து கொண்டனர். (இவர்கள் கதையும், ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமாகியது.)

எகிப்தில் இருந்து வெற்றி வீரராகத் திரும்பிய ஆக்டேவியன், கி.மு. 29இல் ரோம் திரும்பி தன்னை ரோமானியப் பேரரசர் என முடிசூட்டிக் கொண்டார். இப்போதுதான் ஆக்டேவியன் ‘அகஸ்டஸ் சீசர்' என ஆனார்.

இவரது காலத்தில் ரோம் பல துறைகளிலும் முன்னேறியது. பெரும் புகழ்பெற்றது. லத்தீன் மொழி புத்துயிர் பெற்றது. பல இலக்கியங்கள் அதில் எழுதப் பட்டன. கலை, இலக்கியம் இவர் காலத்தில் ஆதரிக்கப்பட்டு பெரிதும் வளர்ந்தது. பல சாலைகள் அமைக்கப்பட்டன. பாலங்கள் பல கட்டப்பட்டன. ரோம் நகரம் பல இடங்களுடனும் இணைக்கப்பட்டது. இவர் காலத்தில் ரோமில் பல கட்டடங்கள் கட்டப் பட்டன.

ஜூலை மாதம் ஜூலியஸ் சீசர் நினைவாக மாற்றப்பட்டது. அதற்கு அடுத்த மாதத்திற்கு அகஸ்டஸ் சீசர் நினைவாக 'ஆகஸ்ட்' எனப் பெயர் மாற்றப் பட்டது. 30 நாள் கொண்ட மாதம், சீசருக்கு இணையாக இவர் பெயரும் இருக்க வேண்டும் என்பதற்காகவே 31 நாள் கொண்டதாக மாற்றப்பட்டது. இதற்காக பிப்ரவரி யில் இருந்து ஒரு நாள் எடுக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் சேர்க்கப்பட்டது. இதனால்தான் ஒரு மாதம் 31. மறுமாதம் 30 என வரும் வரிசையில், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தொடர்ந்து 31 நாட்கள் வருகின்றது.

பண்டைய ரோம் வரலாற்று நாயகர் வரிசையில் சீசர், அகஸ்டஸ் சீசர் ஆகிய இரு பெயரும் அழிக்க முடியாத பெயராகும்.