கடவுளின் திருவுளத்திற்குத் துன்பம் ஏற்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

10 மே 2024  

பாஸ்கா 6ஆம் வாரம் -வெள்ளி

தி.பணிகள் 18: 9-18

யோவான்  16: 20-23a

முதல் வாசகம்.

நமது முதல் வாசகத்தில் புனித பவுல் கொரிந்துவில் குறைந்தது ஒன்றரை வருடங்கள் தங்கியிருந்தார் என அறிகிறோம்.  சமூகத்தில் உள்ள பெரும்பாலான புறவினத்து  மக்களிடமிருந்தும், அதிலும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்தும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆண்டவரும் அவருக்கு ஒரு காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்” என்று ஊக்கமூட்டியதையும் லூக்கா குறிப்பிடுகிறார்.


ஆனலும், யூதர்கள் சிலர், பவுலைத் தாக்கி  அவரை விசாரனை  மன்றத்துக்குக் கொண்டு வந்து, “இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்” என்று வழக்கம்போல் மற்றொரு பொய் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால், அவர்களின் பொய் குற்றச்சாட்டிற்குச் செவிசாய்க்க மறுத்தார்  ஆட்சியாளர் கல்லியோ என்பவர்.  

பவுல் இறுதியில் கொரிந்தியரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.


நற்செய்தி.

தம்முடைய இராவுணவு உரையின்  தொடர்ச்சியில், இயேசு தம்முடைய சீடர்களிடம், ஒரு பெண் பிரசவ வலியில்  குழந்தையைப் பெற்றெடுப்பதைப் போன்ற ஒரு அனுபவத்தை அவர்கள் சந்திப்பார்கள் என்று கூறுகிறார். பிரசவ வலி கடினமானது, ஆனால் அந்தத்  தாயின் வேதனை நீடிப்பதில்லை. பிரசவத்திற்குப் பின் மகிழ்ச்சியாக மாறுவதைப்போல,  இயேசுவின் மரணத்தையொட்டி  சீடர்களும்  கடினமான துன்பதைச்  சந்திப்பார்கள். ஆனாலும் அவரது  உயிர்ப்பினால்  சீடர்களின் துன்பம் மறைந்து, மகிழ்ச்சி அவர்களை ஆட்கொள்ளும்  என்று உறுதிபட கூறுகிறார் ஆண்டவர். 


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தியில் இயேசு   ஒரு பெண்  பேறுகாலத்தின் போது  அடையும் வேதனையை ஓர் உவமையாகக் கொண்டு அவரது பிரிவுக்குப் பின் சீடர்கள் அனுபவிக்கவிருக்கும் துன்பத்தை விவரிக்கிறார். பிரசவத்தில் ஏற்படும் வலி ஒரு நல்ல  காரணத்திற்கான வலி என்பதை நினைவில் கொண்டு, தாய் தான் ஈன்றெடுத்தக்  குழந்தையைப் பார்த்து மகிழும்போது அவளது வேதனை  மறைந்துவிடுவதுபோல், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பிறகு சீடர்களின் வாழ்வும் ஒளிமயமாகும் என்கிறார்.  

ஆனாலும், சீடர்களுக்கு எல்லாமே  கேள்விமயமாகத் தோன்றியது.   அவர்கள் குழப்பமும் பயமும் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அனைத்தும் கைவிட்டுப் போனது போல் தோன்றியது.  இயேசு விண்ணகம் சென்று  தூய ஆவியாரை அனுப்பும் வரை ஓர் இருண்ட உலகில் அவர்கள் அடைப்பட்டு, வேதனையுற்று  இருந்தனர்.  

நாம் சந்திக்கும் எவ்வித  துன்பமும், நம்மையே நாம்  கேள்வி கேட்கத் தூண்டும். பலர் இத்தகையச்  சூழலில் யோபுவைப் போல  கடவுளையும் கேள்வி கேட்பர். ‘இறைவா, எனக்கு ஏன் இத்துன்பம்?’ என்பர்.  

இயேசு தன் தந்தையின் திருவுளத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கே துன்புற்றார்.  அவ்வாறே, நாமும்,   கடவுளின் விருப்பத்தை  நிறைவேற்றும் போது, கடினமான துன்பதைச் சந்திக்க நேரிடும். துன்பங்களை ஏற்காவிடில் நமக்கு  மீட்பு என்பது வெறும் பகல் கனவுதான்,  சுருங்கக் கூறினால, சிலுவையின்றி திருஅவைக்கு மாட்சி  இல்லை.

எனவேதான் இயேசு, “என் சீடனாக இருக்க விரும்புகிறவர், தன்னலம் துறந்து, நாள்தோறும் என் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மாற்கு 8:34) என்று கூறுகிறார் நம் வாழ்வில் கடவுளின் திருவுளத்திக்கு பணிந்து வாழும் போது வலிகளும் துன்பங்களும்  கடவுளின் உடனிருப்பிற்கு வழிவகுக்கும் எனும் உண்மையை ஏற்க வேண்டும். கடவுளின் திருவுளத்தைக்கு ஏற்ப வாழ முற்படும் போது எதிர்கொள்ளும்   துன்பத்திற்காக நாம் ஒருபோதும்  வெட்கப்படக் கூடாது. இயேசு கல்வாரிப் பயணத்தை அவமானமாகக் கருதியிருந்தால்   நமக்கு மீட்பு கிடைத்திருக்காது.   அன்னை மரியா கணவன் துணையின்றி தாய்மை அடைவதை துன்பமாக நினைத்திருந்தால் ஆண்டவர் இயேசுவை உலகம் கண்டிருக்காது. 

ஆகவே, துன்பத்திற்குப் பின் இன்பம் என்பது போல, வெற்றிக்கு ஒரு வழியாக துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.  ஆரம்பத்தில் நாம் அனுபவிக்கும் சிரமங்களைத் தாண்டி, நமக்கு ஒரு விடிவெள்ளி காத்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை  இழக்கக்கூடாது.  திருத்தூதர்களின் வாழ்வு நமக்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த உலகில் எதுவும் நிரந்தரம் அல்ல. இரவு பகல், இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என்ற எதிர்நிலைகள் எப்பொழுதும் இருக்கும். வாழ்க்கையில் துன்பம் இருள் போல சூழ்ந்து வந்தாலும் அந்த இருளைப் போக்கும் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கை தான் நம்மை முன்னேறிச் செல்ல வைக்கின்றது.

முதல் வாசகத்தில் பவுல் அடிகளைப் பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கித் யூதர்கள் துன்புறுத்திய போதும், பவுல் இறுதியில் கொரிந்தியரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நற்செய்திக்காக சிரியாவுக்குக் கப்பலேறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். அவர் பயந்து தலைமறவாகிவிடவில்லை.  இத்தகையைச் சீடத்துவத்தைத்தான்  நம்மிலும் இயேசு எதிர்ப்பார்த்து விண்ணில் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். 

 இறைவேண்டல்.
‘தன்னலம் துறந்து, நாள்தோறும் என் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றுங்கள் ' என்றுரைத்த ஆண்டவரே,  நான் இறைப்பணியில் துன்பத்தைக் கொண்டு துவண்டுவிடாமல் துணிவும், ஊக்கமும் பெற தூய ஆவியாரின் வழிகாட்டுதல் கிட்டிட அருள்புரிவீராக. ஆமென்.
 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments