உண்மைக்குச் சாட்சியமே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

9 ஏப்ரல் 2025
தவக்காலம் 5ஆம் வாரம் –புதன்
தானி (இ3: 14-20, 24-25, 28 யோவான் 8: 31-42
உண்மைக்குச் சாட்சியமே சீடத்துவம்!
முதல் வாசகம.
நமது முதல் வாசகம், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட மூன்று யூத இளைஞர்களின் கதையின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. அவர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள். இன்றைய பகுதிக்கு முன்பு, அவர்கள் பாபிலோன் அரச சேவையில் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பாபிலோனிய நெபுகத்னேசர் அரசருக்குப் பணி செய்கையில் அவருக்கு உண்மையுள்ள யூதர்களாகவே இருந்தார்கள்.
மற்ற அரசவை உறுப்பினர்கள் சிலர் இந்த மூன்று யூத பணியாளர்கள் மீது பொறாமைப்பட்டனர். பொறாமை கொண்டவர்கள், அரசர் அமைத்த தங்கச் சிலையை வணங்கும்படி அனைத்து குடிமக்களையும் கட்டாயப்படுத்தும் ஓர் அரச ஆணையை பிறப்பிக்க அரசரை வற்புறுத்தினர். தங்கச் சிலையை வணங்க மறுப்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
இன்றைய பகுதியில் சாத்ராக்கு, மேசாக்கு மற்றும் ஆபேத்நெகோ ஆகியோர் தங்கள் யூத யாவே கடவுளைத் தவிர வேறு யாரையும் அல்லது எதையும் வணங்க முடியாது என அரசர் நெபுகத்னேசரிடம் கூறுகிறார்கள். இதன் விளைவாக, மூவரும் மரணதண்டனை விதிக்கப்பட்டு அக்கினிச் சூளையில் வீசப்பட அவர்கள் தயாராகிய வேளையில், கடவுளை நோக்கி மன்றாடினர்.
அரச ஆணைப்படி, அவர்களும் தீச்சூளையில் தூக்கி வீசப்பட்டார்கள். ஆனால், அரசனின் எதிர்ப்பார்ப்புக்கு எதிராக அவர்கள் எரியும் தீப்பிழம்புகளின் மத்தியில் நால்வர் சுதந்திரமாக நடந்து செல்வதை அரசர் காண்டார். ஆம், அந்த நான்காம் நபர் கடவுள் அந்த மூவரையும் காப்பாற்ற அனுப்பிய தூதர் என அறிந்தார்கள்.
நற்செய்தி.
இயேசு, நற்செய்தியில், உண்மையுள்ள மற்றும் உண்மையான சீடரைப் பற்றிப் பேசுகிறார். அவர், “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்” என்று தம் சீடர்களிடம் சொல்லும் இயேசு, “உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்கிறார். அவருடைய வார்த்தைகயைக் கேட்பவர்களெல்லாம் தன்னுடைய சீடரில்லை என்று மேலும் உரைக்கும் இயேசு, அவருடைய வார்த்தையைக் கேட்பதோடு, அதனைக் கடைப்பிடித்து வாழ்வோரே அவரது உண்மையான சீடர்கள் என்கிறார்.
தொடர்ந்து, “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்பதோடு, “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார். அவர்கள் ‘நாங்கள் ஆபிரகாமின் விமரபினர்’ என்றபோது, இயேசு. “நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படவில்லையே என்று அவர்களைக் கேட்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் கண்ட மூன்று இளைஞர்களின் முன்மாதிரியான சாட்சிய வாழ்வு நமது சாட்சிய வாழ்வுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அவர்கள் பாபிலோன் அரசருக்குச் சேவை செய்வதால் அங்கு பெருமதிப்புக்கு உரியவர்களாக இருந்தனர். ஆனால் தங்களின் ஒரே கடவுள் நம்பிக்கையை உயிர்போகும் ஆபத்திலும் அவர்கள் கைவிடவில்லை. வாழ்க்கையில் முதன்மையாகக் கடவுளுக்கு உண்மையாக இருக்க அவர்கள் தயாராக இருந்தனர். அவர்கள் மனிதர்களின் அற்ப தண்டனையை விட கடவுளுடனான அன்புறவை மேலான கொடையாக எண்ணினர்.
நற்செய்தியில் இயேசு, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்கிறார். ஆம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்ற இயேசுவே நம்மை விடுவிப்பவர். அவருக்கு மறுபெயர் உண்மை என்றால் மிகையாகாது.
இதனை இன்றைய முதல் வாசகத்தோடு ஒப்பிடும்போது, பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் அந்நாட்டு சிலைகளை வழிபடச் சொன்னபோது சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூன்று இளைஞர்களும் ஆண்டவர் கொடுத்த கட்டளைக்கு (விப 20: 2-3) உண்மையாய் இருந்து, அவருக்கு மட்டுமே வழிபாடு செய்வதாகச் சொன்னார்கள். அதற்காகக் கிடைக்கப்பெற்ற தண்டனையிலிருந்து கடவுள் விடுவித்தார்.
வாழ்வின் எச்சூழலில் நாம் சிக்கிக்கொண்டாலும், நாம் உண்மையின் பக்கம் இருக்கும்போது, அந்த உண்மை (இயேசு) நம்மை விடுவிக்கும். உண்மை, நம்மை, தண்டனையிலிருந்து மட்டுமின்றி, பாவத்திலிருந்தும் விடுவிக்கிறது. இயேசுவும் இன்று இதையே வலியுறுத்துகின்றார்.
உண்மை நம்மை விடுவிக்க வேண்டுமாயின், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. ஆம், முதலில் நமக்கு நாம் கொண்ட சீடத்துவத்தில் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இரட்டை வேடத்திற்கு சீடத்துவத்தில் இடமில்லை. "பாவம் செய்யும் ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமை" என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசு மற்றொரு விடயத்தையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். ஆம், "நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால், ஆபிரகாம் செய்ததைச் செய்வீர்கள் என்கிறார். ஏனெனில், அவர்களில் ஆபிரகாமிடம் காணப்பட்ட கடவுளுக்கான கீழ்ப்படிதல் இல்லை.
ஆம், நாம் ஆபிரகாமின் வழிமரபினராக, நற்பண்புகளோடு வாழும் சீடர்களாக இருந்தால் அதற்குரிய கைம்மாறினைப் பெறுவோம். ‘நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்’ (திபா 1:6) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.
‘இயேசுவே உண்மை, உண்மையே இயேசு’ என்பதில் முழு நம்பிக்கை வைத்து வாழும் சீடர்கள் வீழ்வதில்லை.
இறைவேண்டல்.
“வழியும் உண்மையும் வாழ்வும் நானே” என்ற ஆண்டவரே, உமது இந்த வார்த்தையில் நான் நிலைத்திருக்க அருள்புரிவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
